சனி, 3 நவம்பர், 2012

கைகளால் சாக்கடையை அள்ளும் தொழிலாளர்கள்

கைகளால் சாக்கடையை அள்ளும் தொழிலாளர்கள்

அனுப்பர்பாளையம்:"திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள், கைகளால் சாக்கடை கழிவுகளை அள்ளுகின்றனர். அவர்களுக்கு, கையுறை, காலுறை, சீருடை வழங்க வேண்டும்,' என முதலாவது மண்டல கூட்டத்தில் கவுன்சிலர் ரவிசந்திரன் வலியுறுத்தினார்.திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் சபியுல்லா முன்னிலை வகித்தார்.விவாதம் வருமாறு:சந்திரசேகர் (அ.தி.மு.க): ஆயுத பூஜை விற்பனைக்கு வாழைக்கன்று கொண்டு வந்தவர்கள், விற்காதவற்றை ரோட்டில் விட்டுச் சென்றனர். அதனால், குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு வாழைக்கன்று விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடு விதித்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.மாரப்பன் (மா.கம்யூ.,): எனது வார்டில் 17 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்ய 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. பணி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

"அபேட்' மருந்து ஊற்றுவதில் குறைபாடு உள்ளது. டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். முதல் மற்றும் ஆறாவது வார்டில் டெங்குவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. வரி விதிப்பில் காலதாமதம்ஏற்படுகிறது.ராமச்சந்திரன் (நகர் நல அலுவலர் பொறுப்பு): மண்டலத்தில் மலேரியா பணியாளர்கள் 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மகளிர் சுய உதவி குழுவினர்
30 பேர் மூலம் "அபேட்' மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு மருந்து மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. மாநகர பகுதியில் டெங்குவால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாநகர பகுதியில் 5,887 நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. விரைவில் பிடித்து அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.உமா மகேஸ்வரி (தி.மு.க.,): குப்பை தொட்டி குறைவாக உள்ளது. செல்லம் நகரில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்.ரவிசந்திரன் (இ.கம்யூ.,): குலாம் காதர் லே-அவுட் பகுதியில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது. அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். துப்புரவு தொழிலாளர்கள், கைகளால் சாக்கடையை அள்ளுகின்றனர். அவர்களுக்கு சீருடை, காலுறை, கையுறை வழங்க வேண்டும். கட்டட கழிவுகளை ரோட்டில் கொட்டுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகர் நல அலுவலர்: தீபாவளிக்கு முன், துப்புரவு தொழிலாளர்களுக்கு சீருடை, காலுறை, கையுறை வழங்கப்படும்.சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): வார்டில் சுகாதார பணி மந்தமாக உள்ளது. தெருவிளக்கை மாற்றிக் கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.ஈஸ்வரன் (அ.தி.மு.க.,): எம்ப்ராய்டரி குப்பை அதிகமாக சேகரமாகிறது. எம்ப்ராய்டரிஉரிமையாளர்களை அழைத்து பேசி, அவர்களது நிறுவனத்துக்கே சென்று மாநகராட்சி சார்பில் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க வேண்டும்.சபியுல்லா (உதவி கமிஷனர்): எம்ப்ராய்டரி உரிமையாளரை அழைத்து கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.சின்னசாமி (அ.தி.மு.க.,): இ.பி., காலனி முதல் ஆந்திரா வங்கி வரையுள்ள ரோடு மிகவும் மோசமாக உள்ளது.சத்யா (அ.தி.மு.க): பெரியார் காலனியில் பூங்கா பணி மந்தமாக நடந்து வருகிறது.கல்பனா (அ.தி.மு.க.,): சவுபாக்கியா காலனியில் சப்பை தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதாகிறது.

ராதாகிருஷ்ணன் (தலைவர்): இதற்கு முன், 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது ஆறு நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய வரி விதிப்பில் தாமதம் ஏற்படுவதாக சிலர் கூறினர். மழைநீர் தொட்டி கட்டாமல் புதிய வரி விதிப்புக்கு வருகின்றனர். மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டியதும் வரி விதிக்கப்படும்.குலாம் காதர் லே-அவுட் பகுதியில் மண்டலம் சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்படும். தேவையான சுகாதார பணி செய்யப்படும். ஆயுத பூஜையன்று வாழை கன்று விற்பனை செய்ய கட்டுப்பாடு விதிக்கப்படும். கட்டட கழிவுகளை ரோட்டில் கொட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் காலனி பூங்கா பணி தீபாவளிக்கு முன் முடித்து திறப்பு விழா நடத்தப்படும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக