புதன், 31 அக்டோபர், 2012

வல்லரசான அமெரிக்காவில் தண்ணீர், மின்சாரம் இல்லை: பேரிடர் என ஒபாமா அறிவிப்பு

வல்லரசான அமெரிக்காவில் தண்ணீர், மின்சாரம் இல்லை: பேரிடர் என ஒபாமா அறிவிப்பு

நியூயார்க்: உலகிலேயே மிகவும் வளர்ந்த நாடு, வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவில், தற்போது குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, இன்டர்நெட் இல்லை, போன் வசதி இல்லை என நிறைய இல்லைகள்.
உலக பெரியண்ணன், போலீஸ் காரர், வல்லரசு என்றெல்லாம் பெரிய பெரிய பெயர்கள் உண்டு அமெரிக்காவுக்கு. மிகவும் வளர்ந்த நாடான அமெரிக்காவை ஒரு புயல் அப்படியே திருப்பி போட்டு விட்டது. சாண்டி என பெயரிடப்பட்டுள்ள சூப்பர் புயல் இந்திய நேரப்படி இன்று காலை 5.42 மணிக்கு நியூஜெர்சி அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக இதுவரை 16 பேர் இறந்துள்ளனர். நியூயார்க் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து முழுமையாக முடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இது ஒரு தேசிய பேரிடர் என அறிவித்துள்ளார்.



16 பேர் பலி


: சாண்டி புயல் காரணமாக நியூயார்க் மாகாணத்தில் இதுவரை 16 பேர் பலியாகியுள்ளனர். நியூஜெர்சி, நியூயார்க், மேரிலாண்ட், வடக்கு கரோலினா, மேற்கு வர்ஜினியா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததில் பலியானோர் இதில் அதிகம் என்கிறார்கள்.


மின்சாரம் இல்லை:


நியூயார்க் நகர மருத்துவமனையிலிருந்து இதுவரை 200 நோயாளிகள் மின்சாரம் இல்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர். சாண்டி புயல் மின் விநியோகத்தை முற்றிலுமாக முடக்கிப்போட்டுள்ளது. நியூயார்க் நகரம் தற்போது இருளில் மூழ்கியுள்ளது. சுமார் 6.2 மில்லியன் மக்கள் தற்போது இருளில் உள்ளனர்.


சப் வேக்களில் கடல் நீர்


: நியூயார்க் மாநகர சப் வேக்களில் தற்போது கடல் நீர் உள்புகுந்துள்ளன. சுமார் 13 அடி உயரத்திற்கு மேலெழும்பிய கடல் அலைகள் காரணமாக கடல் நீர் நகருக்குள் புகுந்துள்ளது. இதனால் நியூயார்க், பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் போன்ற நகரங்களுக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.


விமான நிலையங்கள் மூடல்:


சாண்டி புயல் காரணமாக அமெரிக்க விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.


அரசு அலுவலகங்கள் மூடல்:


கனமழை புயல் காரணமாக நாட்டின் முக்கிய அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. நியூயார்க்கில் செயல்பட்டு வந்த தேசிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக நியூயார்க் பங்குச்சந்தை மூடப்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது தான் பங்குச்சந்தைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அநேகமாக நாளையும் பங்குச்சந்தை மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல் பிரசாரம் ரத்து:


சாண்டி புயல் காரணமாக தங்களது தேர்தல் பிரசாரங்களை, அதிபர் ஒபாமா மற்றும் ரோம்னி ஆகியோர் ரத்து செய்துள்ளனர். அத்துடன் சாண்டி புயலால் அமெரிக்கா ஒரு பேரிடரை சந்தித்துள்ளதாகவும் ஒபாமா அறிவித்துள்ளார்
. -தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக