வெள்ளி, 2 நவம்பர், 2012

கடவுளிடமிருந்து கூடக் கிடைக்காது!'

சொல்கிறார்கள்

கடவுளிடமிருந்து கூட க் கிடைக்காது!'
 
விருதுநகரில், தனியார் நடத்தி வரும் முதியோர் இல்லத்திற்கு, பல பொருட்களை கொடுத்து உதவி செய்யும், 76 வயதான ராஜாமணி: சொத்து, சுகம் என, சேர்ப்பதை விட, நம் இறப்பிற்குப் பின், மற்றவர்களின் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு புண்ணியம் சேர்த்துக் கொண்டால், அதுவே போதும். அதனால் தான், என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
சிறு வயதிலிருந்தே எனக்கு, உதவும் குணம் உண்டு. அந்தக் காலத்தில், பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் போது, என் செலவிற்கு, அப்பா, மாதம், 200 ரூபாய் அனுப்புவார். அப்போது, ஒரு சவரன் தங்கத்தின் விலையே, 60 ரூபாய் தான். செலவு போக, மீதி பணத்தை, உடன் படிக்கும் பிள்ளைகளின், பள்ளி கட்டணம், புத்தகம் வாங்க என, முடிந்த உதவி செய்வேன்.
மரக் கடை வியாபாரத்தில், பிரபலமானவர், என் கணவர் முத்துசாமி; எங்களுக்கு குழந்தை இல்லை. என் கணவரும், பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமுள்ளவர். அதனால், இருவரும் ஒன்றாகவே செயல்பட்டோம். என் கணவரின் மறைவிற்குப் பின், மாமியாரின் ஆதரவில் இருந்தேன். ஒரு முறை, என் மாமியார் கீழே விழுந்து அடிபட, அவரை பராமரிக்க முடியாமல், அனைவரும் சிரமப்பட்டோம். அப்போது தான், வயதான காலத்தில், யார் கையையும் எதிர்பார்க்கக் கூடாது என, தோன்றியது.

தனியார் முதியோர் இல்லம் பற்றி அறிந்து, அங்குள்ளவர்களுக்கு உதவி வருகிறேன். கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ஆனாலும், யாரையும் எதிர் பார்க்காமல், நானும் முதியோர் இல்லத்தில் சேர முடிவெடுத்து உள்ளேன். இறப்பிற்குப் பின், என் உடலும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக, கண் தானத்திற்கு பதிவு செய்துள்ளேன். மரணத்திற்குப் பின், என் உடலை மதுரை மருத்துவ கல்லூரி உடற்கூறியல் துறைக்குத் தர விண்ணப்பித்துள்ளேன். நாம், அள்ளிக் கொடுக்கா விட்டாலும், கிள்ளியாவது கொடுக்கலாம். ஆதரவில்லாத குழந்தைகளுக்கும், முதியோர் களுக்கும் உதவும் போது, அவர்களின் சந்தோஷத்தையும், பெரியவர்களின் மனதில் ததும்பும் நன்றியையும் உண ருங்கள். அதை விடச் சிறந்த வாழ்த்து, ஆசீர்வாதம், கடவுளிடம் இருந்து கூட, கிடைக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக