சொல்கிறார்கள்
சாராய வியாபாரி மகனும் சாதனை செய்யலாம்!'
"கிக் பாக்சிங்'கில் சாதனை படைத்து வரும் ராஜா: தூத்துக்குடி அருகில் உள்ள
பாறைக்குட்டம் தான் என் சொந்த ஊர். படிப்பறிவு அதிகம் இல்லாத, ஏழைக்
குடும்பத்தில் பிறந்தேன். என் அப்பா, சாராய வியாபாரம் செய்து வந்தார். அவர்
செய்வது, தவறான தொழில் என்று கூட, நினைக்க தெரியாதவர்கள், எங்கள் ஊர்
மக்கள். ஆனால், என் அப்பா, அந்த தொழிலில் என்னை ஈடுபடுத்தவில்லை. என்னை,
எப்படியாவது நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என, ஆசைப்பட்டார். பெற்றோரின்
ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம், என் மனதில் ஓடிக்
கொண்டேயிருந்தது.எனக்குக் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்த உடனேயே, என்
அப்பாவிடம், இந்த தொழிலின் தீமைகள் பற்றி பேசினேன். என் பேச்சிற்கு
மதிப்பளித்து, டீ வியாபாரம் செய்ய முடிவெடுத்தார். நான் பத்தாம் வகுப்பு
முடித்து, நாகர்கோவில் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்க
ஆரம்பித்தேன். அப்போதே, "கிக் பாக்சிங்கும்' கற்றுக் கொண்டு, பல பதக்கங்களை
வென்றேன்.என் விளையாட்டுத் திறமையை பாராட்டி, சென்னை, எஸ்.ஆர்.எம்.
கல்லூரியில், விளையாட்டு கோட்டாவில், பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு
அளித்தனர். அதன் பின், எம்.பி.ஏ., படித்தேன். போலீஸ் துறையில் பணியாற்ற
அதிக ஆசை. அதனால், எம்.ஏ., கிரிமினாலஜி அண்ட் போலீஸ் சயின்ஸ் படித்தேன்.
இப்போது மைசூர் கர்நாடக பல்கலைக் கழகத்தில், எம்.டெக்.,
படிக்கிறேன்.எனக்குத் தெரிந்தவரை, மைதானத்தில், நன்றாக விளையாட வேண்டும்;
வகுப்பறையில் நன்றாகப் படிக்க வேண்டும்; முடியாதது என்று ஒன்று இல்லவே
இல்லை. தொடர்ந்து, நான்கு முறை, கிக் பாக்சிங்கில், இந்தியன் சாம்பியன்
வென்றுள்ளேன். ரஷ்யாவில், உலகக் கோப்பையை கைப்பற்றி விட வேண்டும் என்று
எவ்வளவோ முயன்றும், வெண்கலம் தான் வாங்க முடிந்தது. அடுத்த முறை நிச்சயம்
தங்கம் வெல்வேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக