ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மனநிறைவு கிடைக்கிறது

சொல்கிறார்கள்

"ஆத்ம த் திருப்திகிடைக்கிறது!'

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், "கருணை இல்லம்' என்ற பெயரில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும், நியூசிலாந்தை சேர்ந்த ஜீன் வாட்சன்: நான் முதன் முதலில், 1984ம் ஆண்டு, இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். கன்னியாகுமரி பகுதி, எனக்கு மிகவும் பிடித்துப் போனதால், மீண்டும், 1986ம் ஆண்டு இங்கு வந்து, அப்பகுதி மக்களிடம் பழக ஆரம்பித்தேன். அங்குள்ள குழந்தைகள் இல்ல நிர்வாகி ஒருவர் மூலம், நிலக்கோட்டை பகுதிக்கு வந்தேன். முதன் முதலாக என்னைப் பார்த்த அந்த ஊர் மக்கள், நான் ஒரு மருத்துவர் என நினைத்து, தங்கள் குழந்தைகளுக்கு வைத்தியம் பார்க்கச் சொல்லி, என்னிடம் வேண்டுகோள் வைத்தனர்.அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. அதற்காக மிகவும் வருந்தினேன். அந்த எண்ணம் தான், கருணை இல்லமாக உருமாறியுள்ளது.

போதிய மருத்துவ வசதிகளின்றி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு, என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என, முடிவெடுத்தேன். மீண்டும் நியூசிலாந்திற்கே சென்றேன். கருணை இல்லம் துவங்க, நிதி திரட்ட முயற்சி செய்தும், போதிய நிதி கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் உள்ள எங்களின் பூர்வீக வீட்டை விற்று, கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்தேன்.

கையிலிருந்த சொற்ப தொகையுடன், இந்தியா வந்து, ஏழு குழந்தைகளுடன் கருணை இல்லத்தை துவங்கினேன். ஆரம்பத்தில் எவ்வித அடிப்படை வசதியும், கருணை இல்லத்தில் இல்லை. கையிலும் போதிய நிதி இல்லாததால் செய்வதறியாது திகைத்தேன். அப்போது, என் நண்பர்கள் சிலர் உதவ முன்வந்தனர். பல இடையூறுகள், சிக்கல்கள் அனைத்தையும் சமாளித்து, கருணை இல்லம் அறக்கட்டளை துவங்கி, நிதி திரட்டினோம்.

குழந்தைகளின் ஏழ்மை நிலை, நன்கு ஆராயப்பட்ட பின்பே, அவர்களுக்கு கருணை இல்லத்தில் இடம் அளிக்கப்படுகிறது. கருணை இல்லத்தில் சேராத மாணவர்களுக்கும், உதவி செய்கிறோம். என் கனவு, அக்கறை, சகலமும் இந்தப் பிள்ளைகளின் நல்வாழ்வு தான். அது, நான் எதிர்பார்த்ததை போன்றே, நிறைவேறி வருவதில், எனக்கு கிடைக்கும் ஆத்மதிருப்தியை சொல்ல வார்த்தையே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக