புதன், 31 அக்டோபர், 2012

நெருங்கியது "நீலம்!'பலத்த மழை, சூறாவளி க் காற்றுடன் இன்று மாலை தாக்கும்

நெருங்கியது "நீலம்!'பலத்த மழை, சூறாவளி க் காற்றுடன் இன்று மாலை தாக்கும்

வங்க கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, புயலாக உருவெடுத்துள்ள, "நீலம்' தற்போது தமிழகத்தை நெருங்கி வருகிறது. "மணிக்கு, 90 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று மற்றும் பலத்த மழையுடன், நாளை மாலை, சென்னைக்கு அருகில் கரையை கடக்கும்' என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, மழையால் தத்தளித்து வரும் சென்னை, இப்புயலுக்கு தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கக் கடலில், தென் கிழக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. சென்னைக்கு அருகில், 550 கி.மீ., தொலைவில் நிலை கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வலுவடைந்து, அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது; நேற்று காலை, அது புயலாக மாறியது. இந்த புயலுக்கு, "நீலம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னையை தாக்கும்:


இந்த புயல், நேற்று மாலை நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே, 500 கி.மீ., மற்றும் இலங்கையில் திரிகோண மலைக்கு வடகிழக்கில், 100 கி.மீ., தொலைவில் மையம் கொண்டிருந்தது. தொடர்ந்து, தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நாகப்பட்டினத்திற்கும், ஆந்திர மாநிலம், நெல்லூருக்கும் இடையில், சென்னை அருகில், இன்று மாலை கரையை கடக்கும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களான, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், 90 கி.மீ.,க்கும் கூடுதலான வேகத்தில் காற்று வீசும்; கனமழை பெய்யக் கூடும் என்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்றும், வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொலைத் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. "மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்' என்றும் தெரிவித்துள்ளது. புயலைத் தொடர்ந்து, நாகை, சென்னை துறைமுகங்களில், அபாயத்தை அறிவிக்கும் வகையில் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.

தாங்குமா சென்னை:


புயலை அறிவிக்கும் வகையில், நேற்று காலை முதலே, சென்னை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வருவதால், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்திற்கு எழுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன; தாழ்வான பகுதிகளிலும் கடல் நீர் புகுந்துள்ளது
.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக, சென்னையில் பல இடங்களில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சென்னை தாக்குப்பிடிக்குமா என்ற அச்சம் நிலவி வருகிறது. இருந்தாலும், மாநகராட்சி சார்பில் தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஏற்பாடுகள் தீவிரம்நுஇது தவிர, பொதுப்பணி துறையினர், மணல் மூட்டைகள் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளும், புயல் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றி, அவர்களுக்கான உதவிகளை செய்ய, தயார் நிலையில் உள்ளனர்.

கடந்தாண்டு, "தானே' புயல் தாக்குதலில் இருந்து, கடலூர், நாகை மாவட்டங்கள் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில், "நீலம்' புயலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது தெரியாமல், பொதுமக்கள் தவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் முதலே, கடலூர் பகுதியில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருவதால், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில், அரசு சார்பில், சேத தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை:


புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து, ஏற்கனவே சென்னை, நாகை, கடலூர் மாவட்டங்களில், நேற்று, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. புயல், இன்று கரையை கடக்கும் என்பதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி தயார்!:"நீலம்' புயல் சென்னையை தாக்கும் என்பதால், மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற, 173 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களை தங்க வைக்க தனி இடங்கள், நான்கு இடங்களில் உணவு தயாரிக்கும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மழையால் நோய் பரவும் என்பதால், சுகாதாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மரங்கள் முறிந்தால் அவற்றை அப்புறப்படுத்த, தனியார் மர அறுவை மில்களுடன், மாநகராட்சி நிர்வாகம் கைகோர்த்துள்ளது.
நீலம்' பெயர் எப்படி?:


இந்தாண்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின், முதல் முறையாக புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு, "நீலம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகளவில், ஏற்படும் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம், 1945ம் ஆண்டு துவங்கி விட்டாலும், இந்திய பெருங்கடலில் ஏற்படும் புயல்களுக்கான பெயரிடும் முறை, 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

உலக வானிலை மையத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பரிந்துரையின் அடிப்படையில், ஒவ்வொரு புயலுக்கும் பெயரிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் உறுப்பு நாடுகள், சுழற்சி முறையில் பெயரிட்டு வருகின்றன.கடந்த, 2005ம் ஆண்டு உருவான புயலுக்கு, "பனோஸ்' அடுத்து, 2008ம் ஆண்டு உருவான புயலுக்கு, "நிஷா' அதை தொடர்ந்து, 2010ல் உருவான புயலுக்கு, "ஜால்' கடைசியாக, கடந்தாண்டில் தமிழகத்தை தாக்கிய புயலுக்கு, "தானே' என்று பெயரிடப்பட்டது.இந்தாண்டு, தற்போது உருவாகியுள்ள புயலுக்கு, "நீலம்' என்று, பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. அடுத்ததாக உருவாகும் புயலுக்கு இலங்கையின் பரிந்துரைப்படி, "மகாசன்' என்று பெயரிடப்பட உள்ளது.
-தினமலர் செய்தியாளர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக