வியாழன், 1 நவம்பர், 2012

மருத்துவர் அறிவுரைக்கிணங்க ஒவ்வியம் எடுங்கள்

சொல்கிறார்கள்

"மருத்துவரின் ஆலோசனையுடன் ஸ்கேன் செய்யுங்க'
 
ரேடியாலஜிஸ்ட் கதிரவன்: கருப்பையில் உருவாகியுள்ள குழந்தையின் வாராந்திர வளர்ச்சியைக் கண்காணிக்க, மகப்பேறு மருத்துவரின் பரிந்துரை படி, "அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்' எடுக்கப்படும். மருத்துவ அவசியத்தின் பொருட்டே எடுக்கப்படுவதால், இதில் எண்ணிக்கை குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதே சமயம், "அல்ட்ரா சவுண்ட்' ரகத்தில் வரக்கூடிய, "டாப்ளர் ஸ்கேன்' ஆரம்ப மாதங்களில் தவிர்க்க வேண்டும். ஐந்தாவது மாதம் துவங்கி, பார்ப்பதில் பிரச்னை இல்லை. சிசுவின் வளர்ச்சி சீராக இல்லை என்றாலோ, பனிக்குட நீரின் அளவு குறைந்தாலோ, பேறு காலத்தில் வரும் நீரிழிவு, ரத்த அழுத்த பாதிப்புகள் தாய்க்கு வந்தாலோ முன்கூட்டியே கண்காணித்து, உரிய சிகிச்சை மேற்கொள்ள, "டாப்ளர் ஸ்கேன்' அவசியம். மாதவிடாய் சுழற்சி நாட்கள் தள்ளிப் போனதும், சிறுநீர் பரிசோதனையை அடுத்து, கர்ப்பம் உறுதிப்படுத்த, முதல் ஸ்கேன் மேற்கொள்ளப்படும். கருப்பைக்கு வெளியே கருத்தரிப்பு நடந்திருந்தாலும், இந்த ஸ்கேன் காட்டி விடும். கருத்தரித்த, 11 மற்றும் 14 வாரங்களுக்கு இடையே, இரண்டாவது ஸ்கேன் பார்க்கப்படும். சிசுவின் கழுத்துத் தோல் தடிமனை ஆராய்ந்து, "டவுன் சிண்ட்ரோம்' உள்ளிட்ட மரபணு பாதிப்புகள் கண்டறிந்து, உரிய மேல் சிகிச்சை பெற, இரண்டாவது ஸ்கேன் உதவும். 18 மற்றும் 24வது வாரங்களுக்கு இடையே, மூன்றாவது ஸ்கேன் பரிந்துரைக்கப்படும். இது, இதயக் கோளாறு உள்ளிட்ட உறுப்பு வளர்ச்சி பாதிப்புகளை அறிய உதவும். 34 வாரங்களுக்குப் பின், நிறை மாதத்தில் எடுக்கப்படும் நான்காவது ஸ்கேன், சிசுவின் நிலை, பனிக்குட நீர் இவற்றை ஆராய்ந்து, பிரசவத்தை தீர்மானிக்க உதவும்.இவை தவிர்த்து, ஏதேனும் பிரச்னை அல்லது சந்தேகம் இருந்தால் மட்டுமே, தொடர் கவனிப்பு மற்றும் கருவில் சிசுவிற்கு அவசியமான சிகிச்சை ஆகியவை கருதி, கூடுதல் ஸ்கேன்கள் தீர்மானிக்கப் படும். இதில் முக்கியமான விஷயம், மருந்து, மாத்திரைகள், எக்ஸ்ரே என, எந்த ஒரு பரிசோதனையும், சிகிச்சை நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட மகப்பேறு மருத்துவரின் மேற்பார்வை மற்றும் ஆலோசனையின்றி மேற்கொள்ளக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக