செவ்வாய், 30 அக்டோபர், 2012

திருடிய ரூ.1இலட்சம் பணத்தை த் திருப்பிக் கொடுத்த மாணவர் - மணவீட்டார் மகிழ்ச்சி

சென்னை: திருமண மண்டபத்தில் திருடிய ரூ.1 இலட்சம் பணத்தை த் திருப்பிக் கொடுத்த மாணவர் - மணவீட்டார் மகிழ்ச்சி
மாலை மலர்
சென்னை: திருமண மண்டபத்தில் திருடிய ரூ.1 லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்த மாணவர் - மணவீட்டார் மகிழ்ச்சி
சென்னை, அக். 30-

கடந்த 27-ந்தேதி அன்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபம் களைகட்டியிருந்தது. அப்போது 10-ம் வகுப்பு மாணவரான கோபால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த வழியாக சென்றார். திருமண மண்டபத்தை பார்த்ததும் திருடும் எண்ணத்தில் உள்ளே நுழைந்த கோபால், மெதுவாக மணமகனின் அறைக்குள் புகுந்தார். பின்னர் நைசாக அங்கிருந்த பையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டார். அதில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 2 விலை உயர்ந்த செல்போன்கள் இருந்தது. இதனால் திருமண மண்டபத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

இது பெரும் பரபரப்பு ஆகாமல் திருமண வீட்டார் பார்த்துக் கொண்டனர். சத்தம் இல்லாமல் சென்று அரும்பாக்கம் போலீசில் புகார் மனுவை கொடுத்த மணவீட்டார், திருமணம் நல்ல படியாக முடியட்டும் சார் அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டு மட்டும் சென்று விட்டனர். மறுநாள் காலையில் திருமண நிகழ்ச்சிகள் மண்டபத்தில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.

அப்போது இரவில் திருடிச் செல்லப்பட்ட பையுடன் மாணவர் கோபால் மண்டபத்துக்கு வந்தார். மணமகன்-மணமகளின் பெற்றோரை சந்தித்து, நடந்த சம்பவங்களை கூறி மன்னிப்பு கேட்டார். வேறு ஏதாவது பொருட்கள் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பையில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதைப் பார்த்ததும் கை, கால்கள் உதறல் எடுத்து பயம் என்னை பற்றிக் கொண்டது என்று ஒரு வித பதட்டத்துடனேயே கூறினார்.

இதுபற்றி உடனடியாக மாப்பிள்ளையின் தந்தை கிருஷ்ணன் அரும்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவர் கோபாலிடன் விசாரித்தனர். தெரியாமல் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறினார். அதே நேரத்தில் கிருஷ்ணனும் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக கூறினார். இதனால் கோபாலை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். களை இழந்து காணப்பட்ட திருமண மண்டபம் மீண்டும் களை கட்டியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக