புதன், 31 அக்டோபர், 2012

எம்.கே.நாராயணன் மீது "திடுக்' இராசிவ் கொலை- காணொளியை மறைத்தாரா?

எம்.கே.நாராயணன் மீது "திடுக்'  இராசிவ் கொலை- காணொளியை மறைத்தாரா?


புதுடில்லி:ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய வீடியோவை, ஐ.பி., உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான, எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ் இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க கவர்னராக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகிப்பவர், எம்.கே.நாராயணன். முன்னதாக அவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், அதற்கு முன், ஐ.பி., உளவுப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.கேரளாவைச் சேர்ந்த நாராயணன், ஐ.பி., தலைவராக இருந்தபோது, 1991 மே, 21ல், ஸ்ரீபெரும்புதூரில், தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜிவ், படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த, தற்கொலைப் படை பெண், தனு, மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராஜிவை கொன்றார்.

உலகையே உலுக்கிய இந்த படுகொலை வழக்கு, அவ்வப்போது வெளியாகும் தகவல்களால், பரபரப்படைவது வழக்கம். அந்த வகையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., அதிகாரி, கே.ரகோத்தமன், "ராஜிவை கொல்லச் சதி - சி.பி.ஐ., ஆதாரங்கள்' என்ற பெயரில், சமீபத்தில், தமிழில், புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.அந்த புத்தகத்தில், ரகோத்தமன் தெரிவித்திருந்த தகவல்களில், எம்.கே.நாராயணன் குறித்த, சில விவரங்கள், டில்லி, மும்பை நகரங்களில் வெளியாகும், டி.என்.ஏ., என்ற நாளிதழில் நேற்று வெளியாகியுள்ளது.

டி.என்.ஏ., நிருபருக்கு, ரகோத்தமன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:ஸ்ரீபெரும்புதூரில், ராஜிவ், பொதுக் கூட்ட மேடைக்கு வரும் போது, அந்த கூட்டத்தில் ஊடுருவிய, ராஜிவ் கொலையாளி தனு, மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்தார் என, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்ட தகவல் தவறு. பொதுக்கூட்டம் நடப்பதற்கு, இரண்டரை மணி நேரத்திற்கு முன்பே, தனு அந்த இடத்திற்கு வந்திருந்தாள்.

கொலையாளி தனு, சிலருடன் பேசிக் கொண்டிருந்தாள் என்பதற்கான, வீடியோ ஆதாரம், எம்.கே.நாராயணனுக்குக் கிடைத்தது. அந்த வீடியோவை, வேண்டுமென்றே மறைத்த எம்.கே.நாராயணன், வேறு ஒரு வீடியோவை, வழக்கில் இணைத்து விட்டார்.இதன் மூலம் அவர், யாரையோ காப்பாற்ற முயன்றுள்ளார். தான் மறைத்த வீடியோ பற்றி, முன்னாள் பிரதமர், சந்திரசேகருக்கு, எம்.கே.நாராயணன், ரகசிய கடிதம் ஒன்றை எழுதினார் எனவும், இந்தத் தகவல்களை அறிந்த பிறகும், ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி, டி.கார்த்திகேயன், உண்மைகளை மறைத்துவிட்டார். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-திர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக