சனி, 3 நவம்பர், 2012

தீண்டிய பாம்பைக் கழுத்தில் போட்டு வேடிக்கை காட்டிய விந்தை மனிதர்

தீண்டிய பாம்பை கழுத்தில் போட்டு வேடிக்கை காட்டிய வினோத மனிதர்

ஓசூர்,: சூளகிரியில், பாம்புகளை பிடிக்கும் வாலிபர், கடித்த பாம்பை கழுத்தில் போட்டு, பொதுமக்களுக்கு விளையாட்டு காட்டியதை, பொதுமக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில், ஏராளமான மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி, வனப்பகுதிகளாக உள்ளதால், மலை பாம்பு, நாகப்பாம்பு, சாரைபாம்பு, காட்டு வீரியன் உள்ளிட்ட, 15 வகை பாம்புகள், உலா வருகின்றன. மழை காலத்தில், விவசாய நிலங்கள், குடியிருப்புகளில், இவை புகுந்து, பீதியை ஏற்படுத்தும்.
அத்திமுகத்தை சேர்ந்த முனியப்பா, 40, என்பவர் தான், இந்த பாம்புகளை பிடிப்பார்; 10 வயதில் இருந்து, பாம்பு பிடித்து வருகிறார். நேற்று மாலை, அத்திமுக குடியிருப்பு பகுதியில், நாகப்பாம்பு புகுந்தது.
தகவல் அறிந்த முனியப்பா, மகுடி ஊதி, ஊர்ந்து வந்த பாம்பை பிடித்தார். அந்த பாம்பு, அவரை கையில் தீண்டியது. இதை பார்த்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்தனர். சற்றும் அச்சமடையாத முனியப்பா, எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளாமல், தீண்டிய பாம்பை கழுத்தில் போட்டு கொஞ்சியதோடு, பொதுமக்களுக்கு விளையாட்டு காட்டினார்.இது குறித்து முனியப்பன் கூறியதாவது:இதுவரை, 2,000 பாம்பு வரை, பிடித்துள்ளேன்; இதில், மலைபாம்புகளும் அடங்கும். விஷபாம்புகள், 55 முறை, என்னை கடித்துள்ளன. பாம்பின் விஷம், இதுவரை, என்னை ஒன்றும் செய்யவில்லை. பாம்பு பிடிப்பதோடு, பொது மக்களுக்கு, பாம்பு கடி உள்ளிட்ட, விஷ முறிவுக்கு வைத்தியம் அளிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார். ஓசூர் அரசு மருத்துவமனை, டாக்டர் பொன்ராஜ் கூறியதாவது:பாம்பின் விஷத்தில் இருந்து தான், பாம்பு கடிக்கு மருந்து தயார் செய்யப் படுகிறது. எனவே, பலமுறை பாம்பு கடி பட்டவர்களுக்கு, அதனால் பாதிப்பில்லை; சிகிச்சை அளிக்கவும் தேவையில்லை. அடிக்கடி பாம்பு கடிக்கும் போது, அவரது உடலில் விஷத்தன்மை முறிக்கும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக