செவ்வாய், 30 அக்டோபர், 2012

வீடுகளில் ரூ. 1.70 இலட்சத்தில் சூரியஆற்றல் மின் திட்டம்

வீடுகளில் ரூ. 1.70 இலட்சத்தில் சூரிய சக்தி மின் திட்டம்

First Published : 27 October 2012 05:10 AM IST
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
தமிழகத்தில் கடும் மின் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல்வேறு சலுகைகளுடன் "சூரிய சக்தி கொள்கையை' அரசு வெளியிட்டிருப்பது பொதுமக்களிடையேயும், பிற நிறுவனங்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தக் கொள்கையை தமிழக அரசு வெளியிட்டதற்குப் பிறகு வீடுகளில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுவதற்கான ஆலோசனையைப் பெறுவதற்காக தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அலுவலகத்தை அணுகி வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனது வீட்டில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ திட்டமிட்டு ஆலோசனை பெறுவதற்காக இங்கு வந்துள்ளேன். இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஏனெனில், இதுவரை சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ பல லட்சங்கள் செலவாகும் என்றும், அதன் பிறகும் தொடர்ந்து பராமரிப்புச் செலவுகள் இருக்கும் எனவும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அரசு கொள்கையை வெளியிட்ட பிறகுதான், இந்தத் திட்டத்துக்கு ஒருமுறை செலவு செய்தால் போதும் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன என "டெடா' அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்திருந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த ஷெரிஃப் என்பவர் கூறினார்.
மானியம் மற்றும் ஊக்கத் தொகை: மக்களிடையே சூரிய சக்தி மின் உற்பத்திக்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தும் வகையில், வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இத்திட்டத்தை நிறுவுபவர்களுக்கு மானியத்தை அரசு அளித்து வருகிறது.
அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது திட்டச் செலவில் 30 சதவீதம் என்ற அளவில் மானியத்தை அரசு அளித்து வருகிறது.
இதுமட்டுமின்றி ஊக்கத் தொகையையும் அரசு இப்போது அறிவித்துள்ளது. அதாவது வீட்டுக் கூரைகளில் இத்திட்டத்தை நிறுவிய நாளிலிருந்து முதல் இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 2 (உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை) என்ற வீதத்திலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ. 1 என்ற அடிப்படையிலும், அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு 50 பைசா என்ற அடிப்படையிலும் ஊக்கத்தொகையை அரசு வழங்கும்.
2014 மார்ச் 31-ம் தேதிக்குள் இத்திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே இந்த ஊக்கத்தொகையை பெற முடியும். அதோடு, மேற்கூரை சூரிய சக்தி மின் உற்பத்தி அளவை கணக்கிடும் வகையில் தனிப்பட்ட மீட்டரை (நெட் மீட்டர்) பொருத்த வேண்டியதும் கட்டாயம்.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அதிகாரி ஒருவர் கூறியது:
வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவித் தருவதற்கென தமிழகம் முழுவதும் ஏராளமான முகவர்கள் உள்ளனர். இவர்களில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையில் 112 முகவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பதிவு செய்துள்ள முகவர்கள் மூலம், சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவுபவர்கள் மட்டுமே அரசின் மானியத்தைப் பெற முடியும். இந்த முகவர்கள் குறித்த விவரங்களை அறிவதற்கு முகமை அலுவலகத்தை மக்கள் அணுகலாம். மேலும் வீடுகளில் 1 கிலோ வாட் அளவு நிறுவு திறனுக்கு மட்டுமே அரசு மானியம் வழங்கும்.
நிறுவனங்களைப் பொருத்தவரை 100 கிலோ வாட் நிறுவு திறன் வரை அரசு மானியம் கிடைக்கும். இத்திட்டத்தை நிறுவ வங்கிக் கடனும் கிடைக்கிறது.
15 ஆண்டுகளுக்குபிரச்னை இருக்காது: சூரிய சக்தி மின் திட்டம் என்பது ஒரு முறை செய்யப்படும் செலவு என்பதால், இப்போது நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
ஒருமுறை நிறுவி விட்டால் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு எந்தவித பிரச்னையும் இன்றி மின் உற்பத்தி செய்ய முடியும். இதில் இணைக்கப்பட்டிருக்கும் பாட்டரிகள் மட்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வீஸ் அல்லது மாற்றும் நிலை ஏற்படும். வேறு பராமரிப்புச் செலவு எதுவும் இருக்காது.
அதே நேரம் அவ்வப்போது சூரிய தகடுகளைத் தூசுகள் படியாமல் துடைக்க வேண்டும். தூசுகள் படிந்தால் உற்பத்தித் திறன் குறையும்.
மானியத்தை கழித்துவிட்டு செலுத்தினால் போதுமானது...வீடுகளில் 1 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டத்தை நிறுவ ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் வரை செலவாகும். இதில் அதிகபட்சம் ரூ. 81 ஆயிரம் அல்லது மொத்த திட்டச் செலவில் 30 சதவீத அளவு மானியத்தை அரசு வழங்கும்.
இந்த மானியத்தை கழித்துவிட்டு மீதித் தொகையை முகவரிடம் செலுத்தினால் போதுமானது.
இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 கிலோ வாட் மின்சாரத்தில் 4 டியூப் லைட்டுகள், 3 மின் விசிறிகள், ஒரு டிவி அல்லது கம்ப்யூட்டரை இயக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக