மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்றே போர் செய்தது அரசு: சேனாதிராசா
First Published : 21 Jul 2011 10:28:50 AM IST
Last Updated : 21 Jul 2011 10:36:54 AM IST
கொழும்பு, ஜூலை.21: 2009 மே திங்களில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நாலு லட்சத்து இருபதாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாகத் தெரிந்தும் இலங்கை அதிபர் ராஜபட்சவும், அரசும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திட்டமிட்டே எழுபதாயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என ஐ.நா. மன்றம் வரை சென்று பேசினார்கள். அப்படியானால் 3,50,000 மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை போரை வென்று விடவேண்டும் என்பது தானே திட்டமாக இருந்தது என்று மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.பருத்தித்துறையில் நடைபெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மூன்று லட்சத்து பதினேழாயிரம் மக்கள் உயிர் பிழைத்து அகதிகளாய் முட்கம்பி வேலிகளுக்குள் தஞ்சமடைந்தனர். ஆனால் எழுபது ஆயிரம் பேருக்குக்கூட போதிய உணவு, மருந்து போன்றவை அனுப்பப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.ராணுவத்தினர், மட்டுமல்ல அரசின் முழு வளங்களும் அரச நிர்வாக முழு இயந்திரங்களும் அமைச்சர் குழாமும் எப்படியும் இந்தத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் என அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளது. போரில் அரசுக்கு கருணா உதவியதைப்போலவே யாழ்ப்பாணத்தை தேர்தலில் கைப்பற்ற டக்ளஸ் துணை புரிகிறார்.கடந்த அறுபது ஆண்டுகளில் மட்டுமல்ல 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னரும் ஜனநாயக ரீதியில் எந்த தென்னிலங்கை அரசுகளோ சிங்களத் தலைமைகளோ தமிழ் மக்களை வெற்றிகொள்ளவில்லை என்பதே வரலாறு. இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் அந்தப் பாடத்தை அரசுக்குப் புகட்டி தம் இலக்கை நோக்கி அரசியலில் தீர்வு ஒன்றை பெற உறுதி பூண்டிருப்பதை நிரூபிப்பார்கள் என நம்புகின்றோம்.ராஜபட்சவின் சிந்தனை "ஒரே மக்கள், ஒரே நாடு'' எனும் சித்தாந்தம் ஆகும். போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ள ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.2009 மே 23- ல் வெளியான பான் கீ மூன்-ராஜபட்ச கூட்டறிக்கையிலும் அரசியல் தீர்வுக்கு வற்புறுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று நாம் வற்புறுத்துகின்றோம். அவ்வாறே இந்தியாவும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அரசுடன் வற்புறுத்திவருகின்றன. ஆனால் அரசிடம் ஒரு அரசியல் தீர்வுக்கான விருப்பமோ, அரசியல் திட்டமோ இல்லை.சர்வதேசத்திலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தவும் அரசுக்குப் போர்க்குற்றமோ, அரசியல் தீர்வோ இல்லை எனக் கூறுவதற்கே தமிழ் மக்களை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு அரசு கோரி நிற்கிறது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு பொழுதும் இடமளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.தமிழ் மக்கள் இன்று நடைபெறும் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்இவ்வாறு மாவை சேனாதிராஜா உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக