புதன், 20 ஜூலை, 2011

Article about kalaignar by nellai kannan: தாத்தாவுக்குத் தெரியாதா?

தாத்தாவுக்குத் தெரியாதா?

First Published : 20 Jul 2011 02:34:14 AM IST


கடைசிவரை மன்மோகன் சிங்கின் முன்னர் பணிந்து தனது மத்திய அமைச்சர் பதவியைவிடாமல் இருப்பதற்கு சகல முயற்சிகளையும் செய்து இறுதியில் அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.  தலித் ராசா இந்த விஷயத்தில் எத்தனை சரியாக நடந்து கொண்டார். பிரதமர் சொன்னவுடனே பதவியை விட்டு விட்டாரே. கருணாநிதி கூறுவதுபோல, தாழ்த்தப்பட்டவர் என்பதால்தான் திமுக தலைமை அவருக்கு ஒரு நீதி, பேரனுக்கு ஒரு நீதி என்று செயல்படுகிறதோ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது. திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பம். அந்தக் குடும்ப விவகாரங்களில் தலையிடும் உரிமை அந்நியருக்குக் கிடையாது என்று கருணாநிதி வகையறாக்கள் வீரவசனம் பேசுவார்கள்.  தயாநிதியை ஊடகங்கள் பழிவாங்கி விட்டனவாம்! கருணாநிதி சொல்லுகிறார். அது மட்டுமல்ல, தயாநிதி மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு இருப்பதே நேற்றுத்தான் அவருக்குத் தெரியுமாம். பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் அண்டப்புளுகன் என்றெல்லாம் அவரைப் பற்றி யாரும் கூறிவிடக் கூடாது. அது தமிழினத் துரோகம் என்று வியாக்யானம் செய்வார் கருணாநிதி.  திமுக அவரோடு நிற்குமாம். கருணாநிதி கூறி இருக்கிறார். தலித் ராசா இன்னும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலர். அவரோடு திமுக இன்னும் நின்று கொண்டிருப்பதை இந்தியா பார்த்துக் கொண்டுதானே இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வழக்கறிஞர்கள் எல்லாம் அவருக்காக நீதிமன்றத்தில் வாதிட்டனரே. கருணாநிதியே நேரில் சென்று தில்லியில் இருந்தல்லவா அந்த தலித்துக்காகக் கண்ணீர் வடித்தார்.  கருணாநிதியின் மனசாட்சியாக இருந்தவர் அவரது மருமகன் முரசொலி மாறன். ""முரசொலி மாறனைப் பார்த்தவுடன் இந்திரா காந்தி அம்மையார் நினைப்பாராம், இப்படி ஒரு அழகான வாலிபனுக்கு கட்டிக்கொடுக்க தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று''. இப்படிச் சொன்னவர் மறைந்த நாஞ்சில் மனோகரன். "கருவின் குற்றம் பற்றி நாஞ்சில் மனோகரன் பின்னாளில் சொன்னது தனிக்கதை.  அந்த முரசொலி மாறன் தமிழ் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு சைக்கிள் வாங்க எத்தனை கஷ்டப்பட்டார் என்று. மாமா கருணாநிதி மிகவும் சங்கடப்பட்டு ஒரு ஹெர்குலிஸ் சைக்கிள் அறுநூறு ரூபாய்க்கு வாங்கித் தந்தார் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் மருமகன் முரசொலி மாறன்.  இன்று மாறன் சகோதரர்கள் இருபது தொலைக்காட்சிக்கு சொந்தக்காரர்கள். நாற்பத்தைந்து பண்பலை வானொலிக்குச் சொந்தக்காரர்கள். ஒரு விமான நிறுவனத்துக்கே சொந்தக்காரர்கள். ஒரு டிடிஹெச் நிறுவனத்துக்குச் சொந்தக்காரர்கள். ஆனால், இவர்களிடம் வேலை பார்க்கும் எந்த ஊழியர்க்கும் நல்ல சம்பளம் கிடையாது. அவர்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படுகிறார்களா என்று நானும் பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். பதில் கிடையாது.  ஊடகங்கள் இத்தனை வைத்துக்கொண்டு இவர்கள் மக்களுக்கா சேவை செய்தார்கள். ஜெயலலிதாவையும் அவரது இயக்கத்தையும் அவதூறு செய்வதையே வேலையாகச் செய்தார்களா இல்லையா? அதெல்லாம் கருணாநிதிக்கு நினைவுக்கு வராது.  கே.பி.கந்தசாமி உருவாக்கி வளர்த்த செய்தி ஊடகத்தை அவரது மகனிடம் இருந்து எப்படி மாறன் சகோதரர்கள் வாங்கினார்கள் என்பது இன்றுவரை மர்மம்தான். அந்தத் தினகரன் செய்தித் தாளினாலேதானே கருணாநிதி குடும்பத்திலேயே குழப்பம் வந்தது.  அதிலேதானே இந்தியாவிலேயே மக்கள் மத்தியில் பெரும்பான்மை மதிப்பைப் பெற்றுள்ள அமைச்சர் தயாநிதி மாறன் என்று செய்தி போட்டார்கள். சிதம்பரத்துக்கெல்லாம் வாக்குக் குறைவாக இருந்தது. அழகிரியோ மிக மிகக் கீழே இருந்தார்.  அந்த ஊடகத்தினாலேதானே மதுரையில் மூன்று இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள். அந்தக் கருணாநிதியாரின் பேரன் ஊடகம் தமிழகத்தில் ஒரு பெரிய கொலைக் குற்றத்துக்கான காரணமாய் இருந்ததே, அது அவருக்கு வயோதிகம் காரணமாக நினைவுக்கே வராது.  அதன் விளைவுதானே அழகிரி கருணாநிதி குடும்பத்துக்கென்று ஒரு தனி தொலைக்காட்சி ஊடகத்தையே கலைஞர் தொலைக்காட்சி என்ற பெயரில் தொடங்கினர். அந்தத் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கு வந்தது என்றும் அதற்குக் காரணம் கனிமொழி என்றும் அவரும் இயக்குநர் சரத்குமாரும் சிறையில் இருக்கின்றனர் என்பதாவது நினைவில் இருந்தால் சரி.  அந்தக் கலைஞர் தொலைக்காட்சியிலேதானே தேர்தல் முடிவுகள் அன்று விமர்சனத்துக்காக உட்கார்ந்திருந்தவர்கள் எல்லாம் பத்தே நிமிடத்தில் வெளியேறி மானாட மயிலாட நிகழ்ச்சி ஒளிபரப்பாயிற்று. அதற்கெல்லாம் ஊடகங்கள்தான் காரணமென்றால் அது நியாயமான வார்த்தை.  தமிழ்நாட்டின் தலைசிறந்த ஊடகங்களெல்லாம் இந்தக் குடும்ப அட்டூழியத்தை இந்தக் குடும்பச் சண்டையினால் ஏழை இளைஞர்கள் மூவர் கொடுமையாகக் கொல்லப்பட்டதைக்கூட மறந்துவிட்டு அதே பேரனை மீண்டும் மத்திய அமைச்சராகிய அவலத்தை எழுதின.  கருணாநிதிக்குச் சொந்தமான குங்குமம் வார இதழையும் மாறன் சகோதரர்களே வாங்கிக் கொண்டனர். சன் தொலைக் காட்சியில் பங்கைக் கொடுத்துக் கலைஞர் குடும்பத்தைக் கழற்றியும் விட்டனர் மாறன் சகோதரர்கள்.  அரசுத் தொலைபேசித் துறையின் எத்தனை தொடர்புகள் மாறன் சொந்த நிறுவனத்துக்குப் பயன்பட்டுள்ளன என்பது இப்போது சிபிஐயின் விசாரணையிலிருந்து தெரியவந்திருக்கிறது.  ஏர்செல் நிறுவனம் மிரட்டப்பட்டிருக்கிறது. பதவியையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டி, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்த மலேசிய நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி வாங்கிய விவகாரம் இப்போது நீதிமன்றம்வரை வந்துவிட்டது.  பாவிகள் அத்துடன் விட்டார்களா? காந்தி மண்டபத்தை "ஏர்செல்' விளம்பரத்துக்குப் பயன்படுத்திய அநியாயத்தை ஏன் அன்றைய திமுக அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்தது என்பது இப்போதல்லவா தெரிகிறது.  சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபம் "ஏர்செல்' விளம்பர மண்டபமான மர்மத்தின் முடிச்சு மாறன் சகோதரர்களின் முற்றத்தில் அல்லவா போய் முடிகிறது.  கோடிக்கணக்கான பணத்தை வைத்து திருமங்கலம் பார்முலாத் தேர்தலை நடத்தி விடலாம் என்று எல்லாத் தவறுகளையும் மிக மிகத் தைரியமாகச் செய்து விட்டு தேர்தல் ஆணையத்தின் சிறந்த முயற்சியாலும் நல்ல காவல் துறை அதிகாரிகள் சிலராலும் மக்கள் தீர்ப்பின் வேகத்தில் துவண்டு கிடக்கும் இவர்களுக்குச் சட்டம்தான் கடமையைச் செய்யத் தொடங்கியவுடனே கோபம் வருகிறது.  கருணாநிதியார் குடும்பத்தினரைவிட அதிகம் அரசியலை வைத்துச் சம்பாதித்தது மாறன் குடும்பம்தான். இது உலகறிந்த உண்மை.  ஊடகங்களைக் குற்றம் சொல்கிறாரே கருணாநிதி இவரது முரசொலிதான் பெருந்தலைவர் காமராஜர் வாடகைக்குக் குடியிருந்த வீட்டை அவரது சொந்த வீடு என்று போட்டு ஏழைப் பங்காளர் காமராஜரின் வீட்டைப் பாருங்கள் என்று செய்தி போட்டது. பெரியவர் காமராஜர் ஆந்திர வங்கியில் ஒரு கோடிரூபாய் போட்டு வைத்திருக்கிறார் என்று ஓர் உலகப் புளுகைச் செய்தியாகப் போட்டது.  செய்தியாளர்கள் கேட்டபோது காமராஜர் சொன்னார்: ""அவர்கிட்ட அதற்கான செக் புக் இருந்தா வாங்க்கிட்டு வாங்கண்ணே, கையெழுத்துப் போட்டுத் தாரேன் அவரையே வாங்கிக்கிடச் சொல்லுங்க'' என்றார்.  ஊழல் அனைத்தையும் செய்துவிட்டு ஊடகங்களைக் குற்றம் சொல்லிப் பேரனைக் காப்பாற்ற தாத்தா முயற்சி செய்கிறார்.  எத்தனை மாதங்களாக தயாநிதியை பாஜக, கம்யூனிஸ்ட்கள், அஇஅதிமுக, தேமுதிக என்று எல்லா கட்சியினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். மன்மோகன் சிங் கேட்கவில்லை.  இன்று உச்ச நீதிமன்றத்திலேயே குற்றச்சாட்டு பதிவான பிறகு பிரதமர் கட்டாயப்படுத்தித்தானே விலகல் கடிதத்தை வாங்க முடிந்திருக்கிறது.  ஊடகங்கள்தான் தீர்மானிக்கின்றன என்கிறார் கருணாநிதி. இத்தனைநாள் கருணாநிதியின் பேரன்கள் நடத்திய ஊடகங்கள் தீர்மானித்தது உண்மை. இப்போது உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. தாத்தாவுக்கு வயதாகிவிட்டது. பாவம், தெரியவில்லையோ என்னவோ?  எது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், மறந்தாலும் மறக்காவிட்டாலும் "குறளோவியம்' எழுதிய கருணாநிதிக்குத் "திருக்குறள்' தெரியாமல் இருக்க வழியில்லை. காமத்துப் பால் மட்டுமல்லாமல், அவர் அறத்துப்பாலும், பொருட்பாலும்கூடப் படித்திருக்கிறார்.  ""தன் நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்'' என்பது குறள்.  வள்ளுவருக்குக் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலைகளும் வைத்த கருணாநிதிக்கு இது எப்படித் தெரியாமல் போகும்?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக