First Published : 18 Jul 2011 12:28:11 AM IST
Last Updated :
பெங்களூர், ஜூலை 17: பெங்களூர் கத்தோலிக்க உயர் மறை மாவட்டத்தில் தமிழ் வழிபாட்டுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக தமிழ் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பங்குத் தந்தைகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.கர்நாடகத்தில் அதிகளவில் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கள் உள்ளனர். பெங்களூரில் மட்டும் 4,10,604 பேர் கத்தோலிக்கர்கள். இவர்களில் 70 சதவீதம் பேர் தமிழர்கள்.இதனால், பெங்களூர் ஊரகம், நகரம், ராமநகரம், தும்கூர், சிக்கபளாப்பூர், கோலார் மாவட்டங்களை உள்ளடக்கிய பெங்களூர் கத்தோலிக்க உயர் மறை மாவட்டத்துக்குள்பட்ட தேவாலயங்களில் வழிபாட்டு மொழியாக தமிழ் நிலைத்திருக்கிறது.1960-களில் 55 தேவாலயங்கள் இருந்தன. இவற்றில் 40-ல் தமிழ் வழிபாடு நடைபெற்று வந்தது. தேவாலயங்கள் படிப்படியாக 133-ஆக உயர்ந்த பிறகு, இப்போது 55-ல் தமிழ் வழிபாடு நடைபெறுகிறது.1975-களுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு எதிரான பிரசாரம் கர்நாடகத்தில் தலைதூக்கத் தொடங்கியதும், தமிழ் வழிபாட்டுக்கு முட்டுக்கட்டை போட சில கன்னட பங்குத் தந்தைகள் பகிரங்க முயற்சியில் ஈடுபட்டனர்.1980-களில் அனைத்து நிலைகளிலும் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று கோகாக் ஆணையம் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. இதன்பிறகு தமிழ் வழிபாட்டுக்கு கன்னடர்களின் எதிர்ப்பு வலிமை பெற்றது. கன்னடர்களின் எழுச்சியைத் தொடர்ந்து பெங்களூர் மறைமாவட்டத்தில் உள்ள 133 தேவாலயங்களிலும் கடந்த 15 ஆண்டுகளாக கன்னட வழிபாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதில் பங்கு கொள்ளும் கன்னட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.2004-ல் பொறுப்பேற்ற பிறகு இதற்கு அடிபணிந்துள்ள மறைமாவட்ட பேராயர் பெர்னார்ட் மோரஸ், எல்லா திருச்சபைகளிலும் கன்னட வழிபாட்டைக் கட்டாயமாக்கினார். கன்னட பங்குத் தந்தைகளுக்கு முக்கியப் பொறுப்புகளை அளித்தார். திருச்சபைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அகற்றி அனைத்தையும் கன்னடமயமாக்கினார். தமிழ் திருச்சபைகள் நடத்திவந்த தமிழ்ப் பள்ளிகளை மூடிவிட்டார் என்றும் தமிழ் பங்குத்தந்தைகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.தமிழர்கள் அதிகம் பேர் இருந்தும் ஜே.சி.சாலையின் புனித தெரசா தேவாலயம், டி.சி.பாளையாவின் புனித அந்தோணியார் தேவாலயத்தில் தமிழ் வழிபாட்டை முழுமையாக அகற்றிவிட்டு கன்னட வழிபாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.கம்மனஹள்ளி புனித பயஸ் தேவாலயம், நாகனள்ளி புனித பவுல் தி ஹெர்பட் தேவாலயம், ஹெக்டே நகர் புனித மரியன்னை தேவாலயங்களில் தமிழர்கள் அதிகம் பேர் இருந்தும், தமிழ் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்காமல் கன்னட வழிபாட்டை நடைமுறைப் படுத்தியுள்ளார் என்று தமிழ் பங்குத் தந்தைகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து புனித சூசையப்பர் தேவாலய பங்குத் தந்தை என்.ஏ.நாதன் கூறுகையில், எந்த மொழியிலும் வழிபாடு நடத்தலாம். எந்த மாநிலத்தில் வாழ்ந்தாலும் அவரவர் மொழியில் மத வழிபாடு நடத்தும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. பலதரப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் அவரவர் மொழியில் வழிபாடு நடத்துவதுதான் சரியானது. அந்த உரிமையை யாரும் தட்டிப்பறிக்க முடியாது. மதத்தில் அரசியலையோ, அரசியலில் மதத்தையோ கலக்கக்கூடாது.தமிழ் வழிபாடு கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை. அதிகாரத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காக சில கன்னட குருக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. உலகெங்கும் சென்று நற்செய்தியை போதியுங்கள் என்று சொன்ன இயேசு கிறிஸ்துவின் சீடர்களாகக் கருதப்படும் இவர்களின் நடவடிக்கை கிறிஸ்தவ கொள்கை, தத்துவங்களுக்கு எதிரானதாகும். கிறிஸ்தவத்தில் இனவாதம், மொழிவாதம், சாதிவாதம் கூடாது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக