First Published : 19 Jul 2011 04:41:06 AM IST
Last Updated :
சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், மேலும் காலம் தாழ்த்துவது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், நடைமுறைச் சிக்கலையும் ஏற்படுத்தும். எனவே மேல்முறையீடு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வித் திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வி ஆண்டிலேயே அமல் படுத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் கோரியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா. பாண்டியன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. தமிழக அரசும், அரசு வழக்கறிஞர்கள் மூலமாக சமச்சீர் கல்விக் கொள்கைதான் தங்கள் நிலை என நீதிமன்றத்தில் உறுதிப் படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுப்பதாகவோ, குறை காண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்பட வேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம் என பாண்டியன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக