செவ்வாய், 19 ஜூலை, 2011

மேல்முறையீடு வேண்டாம்: நெடுமாறன் வேண்டுகோள்

மேல்முறையீடு வேண்டாம்: நெடுமாறன் வேண்டுகோள்

First Published : 19 Jul 2011 01:06:19 PM IST


சென்னை, ஜூலை.19: சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வதால் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 10- ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு செய்துள்ள முடிவு தவறானது மட்டுமல்ல, பின்னோக்கி அடி  எடுத்து வைப்பதாகும். ஏற்கெனவே 1 மற்றும் 6 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவதின் மூலம் ஏற்படும் காலதாமதம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும்.2006- ம் ஆண்டிலிருந்து முனைவர் முத்துக்குமரன் குழு சமச்சீர் கல்வியை அமல்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நான்காண்டு காலத்திற்குப் பிறகே சமச்சீர் கல்வி முறை அமலுக்கு வந்துள்ளது. எனவே அவசர கதியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது என்று மெட்ரிக் பள்ளிகள் கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.பாடப்புத்தகங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டிய பகுதிகளைச் சேர்த்து அவற்றை கூடுதல் தொகுப்பாக மாணவர்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் கூடாது. பெற்றோரும் கல்வியாளர்களும் நீண்ட காலமாக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயல்படுமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்வதாக நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக