First Published : 19 Jul 2011 04:44:13 AM IST
Last Updated : 19 Jul 2011 05:33:32 AM IST
சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குத் தமிழக அரசு தலை வணங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும், அதற்கான புத்தகங்களை இந்த மாதம் 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது. சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றும் குறைகளை நீக்கி அடுத்த ஆண்டு அமல் செய்வோம் என்றும்தான் உச்சநீதிமன்றத்தில் அதிமுக அரசு கூறியுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு அரசுக்கு வெற்றியோ தோல்வியோ அல்ல. எனவே, கெüரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வித் திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்கபாலு கூறியுள்ளார். மேல்முறையீடு கூடாது - ராமதாஸ்: சமச்சீர் கல்வி வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: சமச்சீர் கல்விக்குத் தடை விதிக்க முடியாது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. மீண்டும் மேல்முறையீடு செய்வதால் எந்தப் பயனும் இல்லை. அரசின் பிடிவாதப் போக்கால் கடந்த 2 மாதங்களாக மாணவர்கள் பள்ளிக்குச் சென்றும் பாடம் படிக்க முடியாமல் உள்ளனர். முதல் பருவத் தேர்வும் நடக்கவில்லை. செப்டம்பரில் காலாண்டுத் தேர்வு நடத்த வேண்டுமானால் இனியும் தாமதமில்லாமல் பாடங்களைத் தொடங்கியாக வேண்டும். எனவே, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக அரசு செயல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். திருமாவளவன்: சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார். மேல்முறையீடு செய்யத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது மாணவர்களின் கல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படும் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்துகிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பெருந்தன்மையோடு இப் பிரச்னையை அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக