First Published : 18 Jul 2011 01:24:15 PM IST
Last Updated : 18 Jul 2011 02:52:11 PM IST
சென்னை, ஜூலை.18: 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் வரும் 22-ம் தேதிக்குள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்றும், அதில் திருத்தங்கள் செய்ய வேண்டும் எனில் ஒரு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் கடந்த ஆண்டு சமச்சீர் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கடந்த கல்வியாண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட இருந்தது.இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்தக் கல்வியாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்த புதிய அரசு, அதற்காக சமச்சீர் கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் சட்டத் திருத்தத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.அப்போது, 1 மற்றும் 6-ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10-ம் வகுப்பு வரையிலான பிற வகுப்புகளைப் பொருத்தவரை, தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்றும், அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி கடந்த ஜூன் 17-ம் தேதி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.தங்களது தீர்ப்பில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டில் இருந்தே அமல்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக