First Published : 19 Jul 2011 11:24:05 AM IST
சென்னை, ஜூலை.19: தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திருத்த சட்டத்தை ரத்துசெய்து, சமச்சீர் கல்வி முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வரவேற்கத்தக்க சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழக அரசின் வீண் பிடிவாதத்தால் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்க வேண்டிய தேதியில் திறக்கப்படாமல் பதினைந்து நாட்கள் தள்ளிப்போனது. பின்னர் திறந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் பள்ளி மாணவர்கள் எந்தப் பாடங்களைப் படிப்பது என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு சூழல் கல்வித் துறையில் இதுவரை ஏற்பட்டதில்லை. எனவேதான், உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வரும் 22 ஆம் தேதிக்குள் சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் பாடங்களை தொடங்க வேண்டும் என்றும் குறைபாடுகளை களைந்து புதிய பாடங்களை கூடுதல் புத்தகங்களாக அச்சிட்டு மூன்று மாதத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆனால், இதனை ஏற்காமல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் போக்கை வன்மையாக கண்டிப்பதுடன் தவறுக்கு மேல் தவறு செய்து நாட்களை வீணடித்து மாணவர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளிவிடாமல், உடனடியாக சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக