First Published : 18 Jul 2011 03:59:47 PM IST
சென்னை, ஜூலை.18: சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்றும், இதில் மேலும் காலம்தாழ்த்துவது மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டிலும் சமச்சீர் கல்வித்திட்டமே தொடர வேண்டுமென்றும், 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், பழைய பாடத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும், ஜூலை 22-ம் தேதிக்குள் அனைவருக்கும் சமச்சீர் கல்வி புத்தகங்களை வழங்க வேண்டுமென்றும், சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குறைகளைக் களைய குழு அமைக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள மேற்கண்ட தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. அதேசமயம் தீர்ப்பு குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில் உச்சநீதின்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகள் திறந்து ஒருமாத காலம் கடந்து விட்ட நிலையில் மேலும் காலம் தாழ்த்துவது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த மனஉளைச்சலையும், நடைமுறைச் சிரமத்தையும் ஏற்படுத்தும். எனவே, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதைக் கைவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பினை ஏற்று சமச்சீர் கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை இந்தக் கல்வியாண்டிலேயே அமல்படுத்திட வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக