செவ்வாய், 19 ஜூலை, 2011

சமச்சீர் கல்வி தீர்ப்பு: கல்வியாளர்கள் வரவேற்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு: கல்வியாளர்கள் வரவேற்பு

First Published : 19 Jul 2011 03:53:55 AM IST


சென்னை, ஜூலை 18: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.  கல்வியாளர் எஸ்.ராஜகோபாலன்: இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு. அரசு உடனடியாக இதைச் செயல்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியில் பொதுப்பாடத்திட்டம் ஒரு பகுதிதான்.  தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், அரசுப் பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பரிந்துரைகள் சமச்சீர் கல்விக்காக செய்யப்பட்டுள்ளன. இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, பிற பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.  பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு: இந்தத் தீர்ப்பு மாணவர்களை மகிழ்விக்கும் தீர்ப்பு. பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்கிய ஆசிரியர்கள், வல்லுநர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் தீர்ப்பு. இது அனைத்து மாணவர்களும் உயர்வு, தாழ்வு இல்லாமல் சமநிலையில் கல்வி கற்கக் கூடிய சூழலை ஏற்படுத்தும்.  தமிழ்நாடு மாணவர், பெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன்: தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் இந்தத் தீர்ப்பை கொண்டாடுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.  கல்வியாளர் மற்றும் முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன்: சமச்சீர் கல்வி தொடர்பாக அரசுக்கு எங்கள் குழு 109 பரிந்துரைகளைச் செய்திருந்தது. அந்தப் பரிந்துரைகள் மீது இப்போதைய அரசு விரைந்து முடிவு எடுக்க வேண்டும். மேலும் இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக செயல்திட்டம் வகுத்துச் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி சத்தியமூர்த்தி: சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 45 நாள்களாக பாடப்புத்தகங்கள் இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்களிடம் மனச்சோர்வு இருக்கிறது. பெற்றோர்களுக்கு மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதம் செய்யாமல் சமச்சீர் கல்வியை அமல் செய்ய வேண்டும்.  பாடத்திட்டம் முடிவு ஆகாமல் இருந்ததால், கல்வித் துறை சார்பான பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தேக்கமடைந்துள்ளன. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளன.  தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் விஜயன்: இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. தரமான கல்வி வழங்குவதற்காகவே மெட்ரிக் பாடத்திட்டத்தை தனியார் பள்ளிகள் நடத்திவருகின்றன என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக