செவ்வாய், 19 ஜூலை, 2011

ஆடைகளைக் களைந்து மக்களைக் கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்: மாவை சேனாதிராசா

ஈழத்தமிழர்களுக்கான இந்த உரையைச் சிங்களத்திற்கு வால் பிடிப்பவர்களும் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


ஆடைகளை களைந்து மக்களை கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருகிறார்கள்: மாவை சேனாதிராசா

First Published : 19 Jul 2011 11:45:07 AM IST

Last Updated : 19 Jul 2011 11:50:54 AM IST

கொழும்பு, ஜூலை.19: இலங்கை வன்னியில் எமது இளைஞர்களின், யுவதிகளின் ஆடைகளைக் களைந்து கண்களையும் கைகளையும் கட்டிச் சுட்டுக்கொன்றவர்களே இன்று தேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கூறினார்.உள்ளாட்சி தேர்தலை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது.ராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் கடுமையாக இருப்பதாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், அந்த பிரசாரக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வன்னி மக்கள் கலந்துகொண்டனர்.தன் கணவனைக் கொன்றவன் மீது கோபமாகி நின்ற கண்ணகி சினங்கொண்டு மதுரையை எரித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதேபோன்று இங்கும் தமது உறவுகளைப் பறிகொடுத்த தாய்மார்களும் பெண்களும் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறார்கள். காணாமல் போனவர்களின் உறவினர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். அவர்கள் தமக்கு நீதி கேட்டு இந்த அரசுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்று அந்தக் கூட்டத்தில் பேசிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.போரில் வெற்றி பெற்றதாகக் கூறும் அரசு இந்தத் தேர்தலின் மூலம் ஜனநாயகத்திலும் தான் வெற்றி பெற்றதாகக் காட்ட முயற்சிக்கிறது என்று கூறிய அவர், "தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள் என்பதை உலகமே இன்று ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அரசுக்கு ஆலவட்டம் பிடிக்கும் அமைச்சர் மட்டும் இறுதிப் போரில் எவரும் கொல்லப்படவில்லை என்று கூறிக்கொண்டு உங்கள் முன் வாக்குக் கேட்டு வந்திருக்கிறார். இவ்வாறானவர்களை தூக்கி எறிய வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் சொல்லாமலேயே நீங்கள் செய்வீர்கள் என்பது எமக்குத் தெரியும்'' என்றும் கூறினார்.

1 கருத்து: