திங்கள், 24 ஜனவரி, 2011

இலங்கை Cruel arrogant of singhala navy continues: கடற்படை அட்டூழியம் தொடர்கிறது: தமிழக மீனவர் படுகொலை

ஓயாமல் சிங்கள நாட்டை நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்தியாவின் கண்டனம் தமிழகத் தேர்தல் சூழலில் வரும் வெளிப்பூச்சு என்பது சிங்கள அரசிற்கும் தெரியும். தமிழ் மக்கள் ஒன்றிணைந்து  எதிர்ப்புக் குரல் கொடுத்தாலன்றி இப்படுகொலைகள் நிற்கா.  அல்லது கடலோரப் பழகுதிகளைச் சிங்கள அரசிற்குப் பரிசாகக் கொடுத்தாலும் வியப்பதற்கில்லை. 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது: தமிழக மீனவர் படுகொலை

First Published : 24 Jan 2011 01:21:30 AM IST


இறந்த மீனவரின் சடலத்துடன் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள். (உள்படம்) இறந்த மீனவர் நா.
வேதாரண்யம், ஜன. 23: நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது இலங்கைக் கடற்படையினர் வேதாரண்யம் பகுதி மீனவர் ஒருவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்ததில் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், மீனவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகப்பன் மகன்கள் ஜெயக்குமார் (28), செந்தில் (25), ஆரியசாமி மகன் ராஜேந்திரன் (45). மீனவர்களான இவர்கள் மூவரும் கண்ணாடியிழைப் படகில் புஷ்பவனத்திலிருந்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு கடலுக்குச் சென்றனர். இவர்கள் அன்று மாலை 6 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 11 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடிக்க வலை விரித்தனர். இரவு 11 மணியளவில் அந்தப் பகுதிக்கு கருநீலத்தில் உடையணிந்த 10-க்கும் மேற்பட்ட இலங்கைக் கடற்படையினர் வந்தனர். அவர்களைப் பார்த்த மீனவர்கள், தாங்கள் மீனவர்கள்தான் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் சைகை (சிக்னல்) செய்தனராம்.இதைப் பொருள்படுத்தாமல் அவர்களைத் திட்டிய இலங்கைக் கடற்படையினர், கடலில் குதிக்கும்படி மீனவர்களை எச்சரித்தனராம். இதையடுத்து, மீனவர்கள் செந்தில், ராஜேந்திரன் ஆகியோர் படகிலிருந்து கடலில் குதித்தனர். ஜெயக்குமார் மட்டும் கடலில் குதிக்க தாமதித்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மீனவர்களின் படகுக்குள் குதித்த இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர், ஜெயக்குமாரின் கன்னத்தில் அறைந்ததுடன், படகில் இருந்த நைலான் கயிற்றால் சுருக்கு வைத்து அவரது கழுத்தில் மாட்டினாராம். மேலும், கயிற்றின் ஒரு முனையை இலங்கைப் படையினர் இருந்த படகில் வீசிவிட்டு, அவரும் அந்தப் படகுக்குச் சென்றுவிட்டார். பின்னர், படகில் இருந்தவாறு கயிற்றின் முனையைப் பிடித்துக்கொண்ட இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகைச் சுற்றி வந்தனராம். அப்போது ஜெயக்குமார் கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து, கயிற்றை வீசிவிட்டு இலங்கைக் கடற்படையினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.கடலில் குதித்த மற்ற இரு மீனவர்களும் படகுக்கு வந்து, கயிற்றை இழுத்து பார்த்தபோது ஜெயக்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், மீன்பிடி வலைகளைத் துண்டித்துவிட்டு, ஜெயக்குமாரின் சடலத்துடன் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு கரைக்குத் திரும்பினர்.ஜெயக்குமாரின் கழுத்துப் பகுதியில் கயிறு இறுக்கியதால் ஏற்பட்ட வீக்கம், சிராய்ப்பு காணப்பட்டது.பின்னர், அவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மீனவர்கள் செந்தில், ராஜேந்திரன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.உயிரிழந்த ஜெயக்குமாருக்கு மனைவி முருகேஸ்வரி (24), குழந்தைகள் ஜனனி (6 மாதம்), பூமிகா (18 மாதம்) ஆகியோர் உள்ளனர்.இந்தச் சம்பவத்தால் மீனவக் கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது.மீனவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்; மனைவிக்கு அரசு வேலை: உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது. இந்தக் காசோலையை ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியிடம் மாவட்ட வருவாய் அலுவலர் வை.ராஜேந்திரன் வழங்கினார். ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரிக்கு அவரது கல்வித் தகுதிக்குரிய அரசு வேலை 15 நாள்களில் அளிக்கப்படும் என்று நாகை மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் கூறினார்.இந்தியா கண்டனம்புது தில்லி, ஜன. 23: நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையால் சனிக்கிழமை கழுத்து நெரித்து கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய மீனவர்கள், தொடர்ந்து இதுபோல் கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மிகவும் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் இது குறித்து அவர் அறிக்கை கேட்டிருப்பதாகவுபம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட மீனவரைப் பற்றிய விவரங்களையும் இந்த சம்பவம் குறித்தும் மத்திய அரசுக்கு விவரங்கள் தெரிவிக்குமாறு தமிழக அரசையும் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.இதனிடையே வேதாரண்யம் மீனவரை இலங்கை கடற்படையினர் கொன்றதாக வெளியான தகவல்களை இலங்கை மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக