>>சென்னை நிகழ்வுகள்
தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பிலான கருத்துரையாளர் குழுவின் கூட்டம் 24.01.11 அன்று சென்னையில் திருவல்லிக்கேணியில் சிவ இளங்கோ அரங்கத்தில் நடைபெற்றது, குழுவின் தலைவர் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன் தலைமை தாங்கினார். கருத்துரையாளர்களும் வெளியூர்ப்பயணத்தால் வர இயலாமல் போனவர்களின் சார்பாளர்களும் சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்றனர்.தொடக்கத்தில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், கூட்டத்தின் நோக்கம், கிரந்தத்தை அகற்றுவது தொடர்பாக மேற்கொண்டு வரும் பணி ஆகியவை பற்றி விளக்கினார்.
அடுத்துத்தலைமைதாங்கிய புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், தொல்காப்பியர் அளித்துள்ள சட்டத்திற்கு மாறாகத் தமிழைச் சிதைப்பது அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.
அன்றில் பா.இறைஎழிலன் தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.
மரு.கி.ஆ.பெ.மணிமேகலை கண்ணன், பேராசிரியர் இலக்குவனார் மறைமலை, கவிஞர் இளவரச அமிழ்தன், முனைவர் இரா.சேது, முனைவர் கு.பாலசுப்பிரமணியம், திரு அன்பு தென்னரசன், திரு தனித்தமிழ் வேங்கை, திரு பெ.மணியரசன் சார்பில் திரு ஆறுமுகம், வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன், வழக்குரைஞர் கோ.இரா.சுந்தரகாந்தம், பாவலர் மறைமலையான், திரு மூதுரை பொய்யாமொழி, திரு பூங்குன்றன், தொல்.திருமா சார்பில் வழக்குரைஞர் ஆர்வலர், திரு தமிழேந்தி, திரு தருமராசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏற்கப்பெற்றன.
1.தமிழ்நாட்டு அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் ச.மோகன் தலைமையிலான தமிழ்க்காப்பு வல்லுநர் குழுவினருக்குத் தமிழ்க்காப்புக் கருத்துரையாளர் குழு வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
2.நீதியரசர் மோகன் குழு, தமிழறிஞர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து கிரந்தத்தில் இருந்து தமிழைக் காக்கும் வகையில் அறிக்கை அளிக்குமாறு இக் குழு கேட்டுக் கொள்கிறது.
3.சீருரு அவையம் (யூனிகோடு கன்சார்ட்டியம்) 7.02.11 அன்று கூட உள்ளதால், ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்கான கால வாய்ப்பு வேண்டிக் கிரந்தத் சீருரு தொடர்பான பொருண்மையை ஒத்தி வைக்க ஆவன செய்ய தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகிறது.
4.தமிழ்நாட்டு அரசின் கருத்தை அறிந்த பின்பே நடுவண் அரசு கிரந்தச் சீருரு தொடர்பான முடிவை எடுக்குமாறு இக்குழு வேண்டுகிறது.
5.தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் பொதுநல அமைப்புகளும் உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளும் கிரந்தத்தால் ஏற்படும் தீமைகளை மக்களிடையே விளக்கிப் பரப்புரை மேற்கொள்ள இக்குழு வேண்டுகிறது.
6.பாடநூல்களில் இருந்தும் அகரமுதலிகள், பொருள்களஞ்சியங்கள் ஆகியவற்றில் இருந்தும் அயலொழுத்துகளை அகற்றுவதுடன் ஊடகங்களில் அயலெழுத்துகளும் அயற்சொற்களும் இடம் பெறாதவாறு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகிறது.
7.கணிணிவழியாகவும் சீருரு அல்லது ஒருங்குறி வாயிலாகவும் வேறு எவ்வகையிலும் கிரந்தம் நுழைவதற்கு வாய்ப்பளிக்காமலும் வரிவடிவச் சிதைப்பிற்கும் வரிவடிவச் சேர்க்கைக்கும் இடம் தராமலும் தொல்காப்பியர் வழி நின்று தமிழைக் காத்துப் பேணுமாறு தமிழ்நாட்டரசை இக்குழு வேண்டுகின்றது.
8.சட்டம், மருத்துவம், பொறியியல் முதலான தொழிற்கல்விகளில் தமிழை விருப்பப்பாடமாக வைக்குமாறும் இதில் தேர்ச்சி பெறுபவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்குமாறும் தமிழ்நாட்டு அரசை இக்குழு வேண்டுகிறது.
அமைப்பின் சார்பாக வந்திருந்தவர்கள் தத்தம் அமைப்புகளின் சார்பில் கிரந்தம் அகற்றும் பணியில் ஈடுபட உறுதி அளித்தனர்.
- இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக