புதன், 26 ஜனவரி, 2011

தமிழக மீனவர்களைச்சுட மாட்டோம்: இலங்கைத் தூதர் உறுதி

கொலைத்தூதர் தாக்குதல்களை நடத்த வேண்டா எனத் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளாரே தவிர இனி மீனவர்களைச் சுடமாட்டடோம் என்று கூற வில்லை. அவ்வாறிருக்கத் தவறான தலைப்பைத் தினமணி தந்துள்ளது.  சுட மாட்டோம் என்றால் இதுவரை சுட்டதை ஒப்புக்கொண்டதாக ஆகும். வேறு மண்டலத்தில் இருந்து வந்தவர்களால் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்கள் நடந்திருக்கையில் சிங்களப் படை  மீது பழி வரும் வகையில் தலைப்பை அளித்துள்ளதற்காகச் சிங்கள அரசின் சினததிற்குத் தினமணி ஆகியுள்ளது. ௨) தன் நாட்டுக் குடிமக்களுக்குப் பாதுகாப்பு தர இயலாத அரசு, கொலைகாரர் கூட்டத்திற்குப் பாதுகாப்பு தருவது கொடுமையிலும் கொடுமையன்றோ? வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக மீனவர்களை சுட மாட்டோம்: இலங்கைத் தூதர் உறுதி

சென்னை, ஜன. 25: தமிழக மீனவர்களை சுடுவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் உறுதி கூறினார். சென்னை எழும்பூரில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் திங்கள்கிழமை இரவு திடீரென தாக்குதல் நடத்தினர். அதில், சிலருக்கு காயம் ஏற்பட்டது.இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசிடம் நேரில் வலியுறுத்த இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தார்.தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் எஸ்.மாலதியைச் சந்தித்துப் பேசினார்.சென்னை எழும்பூரில் சுமார் 80 வருடங்களாக இயங்கி வரும் இலங்கை மகாபோதி சங்கத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமது ஆழ்ந்த கவலையை தலைமைச் செயலாளர் அவரிடம் தெரிவித்தார்.இலங்கை மகாபோதி சங்கத்தின் சென்னை மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்  கண்டனத்துக்குரியது என்றும் இந்தச் சம்பவம் தொடர்பாக சுமித் பண்டார மதவேலா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசின் சார்பில் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.மேலும் இலங்கை அரசு தொடர்பான நிறுவனங்கள் அனைத்துக்கும் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.கடந்த இரு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் 2 பேர் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு இறந்த சம்பவங்கள் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதையும், வருங்காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இலங்கைத் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது.பின்னர், செய்தியாளர்களிடம் பிரசாத் கரியவாசம் கூறியதாவது:தமிழக மீனவர்கள் மீது அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களை இலங்கை கடற்படையினர் மேற்கொள்ளவில்லை. இது, நாங்கள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது எந்தத் தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என கடற்படையினர் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தாக்குதல் சம்பவங்களில் பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது யார் என்பது விசாரணையில்தான் தெரியவரவேண்டும் என்றார் கரியவாசம்.2 பேரிடம் விசாரணை: சென்னை எழும்பூரில் உள்ள மகாபோதி சங்கத்தில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரண்டு பேரிடம் போலீஸôர் விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து மகாபோதி சங்கத்தின் சார்பிலும் போலீஸôரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.விடுதலைச் சிறுத்தைகள் கைது: இதனிடையே, தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் எதிரே உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக