வியாழன், 27 ஜனவரி, 2011

வானத்தினும் வையத்தினும் நனி சிறந்த தாய் நாட்டைக் காப்பாற்றப் போராடிய தமிழ் ஈழ மக்களுக்கு உதவாததும் தாய்நாட்டைப் போற்றிய-அதனைக் காக்கப் போராடிய-மக்களைக் கொன்றொழித்தவர்களைக் கண்டிக்காதததும்  ஏன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தாயும், தாய் நாடும் சொர்க்கத்தைவிட புனிதமானது: சரஸ்வதி சுவாமிகள்

Last Updated : 27 Jan 2011 04:35:00 AM IST

மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை புதன்கிழமை பார்வையிடும் சுவாமி தயானந்த சரஸ்வதி, க
கும்பகோணம், ஜன. 26: சொர்க்கத்தைவிடப் புனிதமானது தாயும், தாய் நாடுமே என்றார் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.  திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், மஞ்சக்குடி கிராமத்தில் சுவாமி தயானந்தா கலை, அறிவியல் கல்லூரியும், மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளன.  இந்த வளாகத்தில் ஆங்கில தொடக்கப் பள்ளியுடன், இக் கல்வி நிறுவனத்தோடு இணைந்து செம்மங்குடி மேல்நிலைப் பள்ளியும், முடிகொண்டான் உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகின்றன.  இப் பள்ளிகள், கல்லூரியில் மொத்தம் 6,128 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.  மாணவர்களிடம் எந்த நன்கொடையையும் எதிர்பாராமல் இலவசக் கல்வி அளித்து வரும் இந்தக் கல்வி நிறுவனம், பல்வேறு சமூகத் தொண்டுகளிலும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறது.  மாணவர்களுக்காக அறிவியல் ஆய்வகங்கள், கணினி வசதிகளுடன் மாநகரங்களுக்கு இணையாக கல்விச் சேவையை அளித்து வருகிறது. சுமார் 40 கி.மீ. சுற்றளவில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு வந்து பயில்கின்றனர். இந்தக் கல்வி குழும நிறுவனர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இங்கு வரும் நாள்களை மிகப் பெரிய விழாவாக இக் கல்வி நிறுவனங்கள் கொண்டாடி வருகின்றன.  இந்நிலையில், நிகழாண்டு சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் 80-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தில் புதன்கிழமை காலை சென்னை கலாஷேத்ரா குழுவினரால் கண்ணப்பன் குறவஞ்சி நாட்டிய நாடகம் நடைபெற்றது.  தொடர்ந்து, மாலையில் இக் கல்லூரி மைதானத்தில் சுவாமி தயானந்தா கல்விக் குழும பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளின் உடற்பயிற்சி நிகழ்ச்சி சுவாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கிப் பேசியது:  குடியரசு தினத்தில் மாணவ, மாணவிகள் நடத்திய இந்த நிகழ்ச்சி மிகவும் மனதைக் கவரக் கூடியதாக இருந்தது. அதிலும் குறிப்பாக, "மாஸ் டிரில்' எனப்படும் அனைத்து மாணவ,மாணவிகளும் ஒரே நேரத்தில் சேர்ந்து பயிற்சி செய்தது மிகவும் பாராட்டக்கூடியதாகும். இங்கு நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பானவை.  ஜனானம் ஜென்மபூமி என்ற ஸ்லோகத்திற்கு ஏற்ப தாயும், தாய்நாடும் சொர்க்கத்தைவிட மிகவும் புனிதமானவை. மாணவர்களின் இந்த அற்புத நிகழ்ச்சிகளை குடியரசு தினத்தில் நம் தாய்நாட்டிற்கே அர்ப்பணிக்கிறோம் என்றார் தயானந்த சரஸ்வதி சுவாமிகள்.  தொடர்ந்து, மகாராஜபுரம் ராமச்சந்திரனின் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகை முரளிதரன் வயலினும், கே.ஆர். கணேஷ் மிருதங்கமும் வாசித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக