செவ்வாய், 25 ஜனவரி, 2011

cong.wants berth in govt. : E.V.K.S.I. : அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வேண்டும்: ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் எனக் கோவன் சொல்வதில் இருந்தே தமிழ்நாட்டில் காங்.விரட்டப்படும் என்பதை உணர்ந்துள்ளார் என்பது புரிகிறது. விரட்டப்படும் கட்சி ஆட்சியில் அமர ஆசைப்படுவது மக்களாட்சியைக் கேலிக்கூத்தாக்கும். மனித நேயர்களே! காங்.ஐ அடியோடு விலக்குங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம் வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தூத்துக்குடி, ஜன. 24: திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.  தூத்துக்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி. கதிர்வேல் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  வரவிருக்கின்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதி, எந்தத் தொகுதி என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தமிழக முதல்வர் கருணாநிதியும் முடிவு செய்வார்கள்.  அமைச்சரவையில் இடம் வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. பதவி வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், கூட்டணிக் கட்சி என்கிற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வேண்டும்.  காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தைதான் இதுவரை கூறி வந்தேன். இப்போதும் கூறுகிறேன். நேற்று பேசியது, அதற்கு முந்தைய நாள் பேசியது பற்றியெல்லாம் கருத்து கூற விரும்பவில்லை. இப்போது என்ன நிலை என்பதுதான் முக்கியம் என்றார் இளங்கோவன்.  இணைந்து செயல்படுவோம்: முன்னதாக, திருமண விழாவில் மத்திய அமைச்சர் வாசனும், இளங்கோவனும் கலந்துகொண்டனர். அப்போது இளங்கோவன் பேசியது:  இந்த விழாவில் நானும் வாசனும் ஒன்றாக கலந்துகொண்டிருப்பதை பலரும் இங்கே குறிப்பிட்டனர். நானும் வாசனும் ஒன்றாக இருப்பது இயற்கைதான். காங்கிரஸ் கட்சியை பேரியக்கமாக வளர்க்க இருவருமே ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். இதில், எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் கிடையாது.  என்னுடைய குரல் வேண்டுமானால் சற்று பெரிதாக இருக்கும். ஆனால், வாசன் வேலையில் பெரியவர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்படும்வரை, கூட்டணி குறித்து முடிவெடுக்கும்வரை கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருப்பதில் தவறில்லை.  ஆனால், தேர்தல் குறித்து சோனியா காந்தி என்ன முடிவெடுத்து அறிவிக்கிறாரோ அதனை அப்படியே ஏற்று பணியாற்றுவோம் என்றார் அவர்.  விழாவில் பேசிய பலரும் ஜி.கே. வாசனும் இளங்கோவனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்திப்பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக