வெள்ளி, 28 ஜனவரி, 2011

V.U.Chidhambraraar name for thuuthukudi port trust: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி. பெயர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாராட்டுகள். பணியாற்றும் ஒவ்வொருவரும செக்கிழுத்த செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றி அறியச் செய்ய வேண்டும்.  வடக்கே இருக்கும் பெரிய துறைமுகம ஒன்றிற்கும் அவர் பெயரைச் சூட்ட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்




தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி. பெயர்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தூத்துக்குடி, ஜன. 27: தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ. சிதம்பரனார் பெயரைச் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.  இதைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் என்பது இனி வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் என்று அழைக்கப்படும்.  ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக 1906-ல் எஸ்.எஸ். காலியா என்ற சுதேசிக் கப்பலை முதன்முதலில் தூத்துக்குடியில் இருந்து இயக்கி ஆங்கிலேயர்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடியைக் கொடுத்தவர் வ.உ.சிதம்பரனார்.  ஓட்டப்பிடாரத்தில் பிறந்த வ.உ. சிதம்பரனார், அன்று இட்ட அடித்தளம்தான் இன்று தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச துறைமுகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  இதன் நினைவாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ. சிதம்பரனார் பெயரைச் சூட்ட வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஜி.கே. வாசன் பொறுப்பேற்ற பின்பு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.  கடந்த செப்டம்பர் 5-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்ற வ.உ.சி. பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற ஜி.கே. வாசன், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.  கடந்த திங்கள்கிழமை (ஜனவரி 24) தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் அவர் பேசும்போது, வ.உ.சி. பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கையை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எடுத்து வருவதாகக் கூறினார்.  இந் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ. சிதம்பரனார் பெயரைச் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதையடுத்து, தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகம் என்பது வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் என்று அழைக்கப்படும்.  இந்தத் தகவலை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்ததாக, தூத்துக்குடி துறைமுக சபை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தை வ.உ. சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் கொண்டாடும் வகையில் பெரிய விழா நடத்தப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக