திங்கள், 24 ஜனவரி, 2011

dinamani editorial: தலையங்கம்: நீதி கிடைப்பது எப்போது?

நல்ல தலையங்கம். தேர்தலில் காங்கிரசிற்குப் பாடம் புகட்டினால் அதன் பின் நீதி கிடைக்கும்.
வாக்குரிமையை விற்றுக் காங்கிரசிற்குப் பாடம் புகட்டத் தவறினால் அநீதியே தொடரும்.
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: நீதி கிடைப்பது எப்போது?

First Published : 24 Jan 2011 12:41:32 AM IST

Last Updated : 24 Jan 2011 12:48:58 AM IST

இலங்கைக் கடற்படையால் கடந்த 12-ம் தேதி ஒரு மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சரியாக பத்து நாள்கள் முடியவில்லை. அதற்குள் நாகை மாவட்டம், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படை கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கிறது.வழக்கம்போல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவித்து, கடற்படையின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். வழக்கம்போல தமிழக அரசும் இறந்த மீனவரின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் அறிவித்துள்ளது. வழக்கம்போல, இலங்கைக் கடற்படையும் இந்த மரணத்துக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறியுள்ளது. அப்படியானால் யார்தான் காரணம்? மீனவர் ஜெயக்குமார் வானத்தில் கயிறு மாட்டி தூக்கிட்டுக் கொண்டார் என்று சொல்லுமா இலங்கைக் கடற்படை?அரபிக் கடலில் இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுவதாகச் செய்திகள் வருவதில்லை. அதேபோன்று வங்கக் கடலோரம் வங்கதேசப் பகுதியில் மீன் பிடித்தார்கள் என்று மேற்குவங்க மாநில மீனவர்கள் இறப்பதாகவும் செய்திகள் இல்லை. ஆனால், தொடர்ந்து தமிழக மீனவர்கள் மட்டுமே இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனரே, இது ஏன்? எப்படி?விடுதலைப் புலிகள் முழு பலத்துடன் இலங்கையை எதிர்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தமிழக மீனவர்கள் கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட வேளையில் சொல்லப்பட்ட ஒரே காரணம், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கான இன்றியமையாப் பொருள்களை, மருந்துகளை, பெட்ரோல், டீசலை கொண்டு சென்றனர் என்பதாகவே இருந்தது. ஆனால், இப்போது இலங்கையில் விடுதலைப் புலிகளே இல்லை, அவர்களை முற்றிலுமாக அழித்து விட்டோம் என்று இலங்கை அரசே வாக்குமூலம் வழங்கிவிட்டிருக்கும் நிலையில் நமது அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதன் காரணம்தான் என்ன?யாழ்ப்பாணத்துக்கு வந்து பொங்கல் பண்டிகையில் கலந்துகொள்கிறார் இலங்கை அதிபர் ராஜபட்ச. யாழ்ப்பாணத்தில் அமைதி நிலவுகிறது என்பதன் இன்னொரு அடையாளமாகஅங்கே அண்மையில் இந்தியன் வங்கி தனது அயல்நாட்டுக் கிளையைத் திறந்திருக்கிறது. இன்னும் நிறைய வங்கிகள் தங்கள் கிளையைத் திறக்கவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மாறுதல் ஏற்பட்டுவிட்ட பிறகும், இந்திய மீனவர்கள் கடல் எல்லையைக் கடப்பது நிகழ்ந்தாலும் அது எந்த உள்நோக்கமும் இல்லாமல், மீன்பிடிக்கும் ஆர்வத்தில் எல்லை கடந்ததாக இருக்குமே தவிர, வேறு எந்தவித காரணங்களுக்காகவும் இருக்க முடியாதே! பிறகும் அவர்கள் கொல்லப்படுவதன் காரணம் என்ன? தமிழர்கள்மீதான வெறுப்பா, இல்லை இந்திய அரசு எதுவும் செய்யாது என்கிற நினைப்பா?தமிழக மீனவர்கள் எல்லை கடக்காமல் இருக்கும்படிச் செய்வதற்கான அறிவியல் கருவிகளை அளிக்க வேண்டும் என்பதும், கரையிலிருந்து குறிப்பிட்ட கடல் மைல்களைத் தாண்டும்போது எச்சரிக்கை மணியோசை கூடிய பிரத்யேகமான ஒலிப்பான்களைப்படகுகளில் நிறுவுவதும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உதவும். ஆனால்,தமிழக அரசு இதுவரை அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசாவது அதற்காக முயற்சிகளை ஊக்குவித்ததா என்றால் இல்லை. அப்படியானால், செத்தால் சாகட்டும் என்கிற அக்கறையின்மையா?கடந்த 12-ம் தேதி இலங்கைப் படையால் சுடப்பட்டு தமிழக மீனவர் இறந்தபோது சட்டப்பேரவையிலேயே இதுகுறித்து பேசப்பட்டது. இந்தியக் கடல் எல்லையை மீனவர் கடக்காதபடி, ஒளிரும் விளக்குகள் கொண்ட மிதவைகளை -அவை நகராதபடி நங்கூரம் பாய்ச்சி- மிதக்கவிடுவதாக அரசு அறிவித்தபடி செய்திருக்கலாமே, ஏன் செய்யவில்லை?சபரிமலை விபத்தின்போது, மலையில் எவ்வளவு நெரிசல் இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்களை மூலம் அளித்து உதவிடத் தயார் என்று அறிவித்த இஸ்ரோ,கடல்எல்லையில் ராணுவ வீரர்களின் அத்துமீறலையும் செயற்கைக்கோள் உதவியுடன் படம்பிடித்துக் கொடுக்க முடியும். இலங்கை - இந்தியக் கடல் எல்லை என்பது மிகக் குறுகிய தொலைவுதான். இப்பகுதியில்இந்தியக் கடற்படையின் கப்பல் நிலையாக நிறுத்தப்பட்டு, வானுயர்ந்த பலூன்களில் சக்திவாய்ந்த கேமிராக்களைப் பொருத்தி, பல மைல் தூரத்துக்குக் கண்காணிப்பதும் சுலபம். நவீன உலகில் இவற்றைக் கண்காணிக்க, தடுக்க நிறைய வசதி, வாய்ப்புகள் உள்ளன. இதிலெல்லாம் தமிழக அரசும் மத்திய அரசும் அக்கறை காட்டவில்லையே, ஏன்?விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராஜபட்ச அரசு தாக்குதல் நடத்தத் தொடங்கியது முதல் இந்திய அரசியல் போக்கில் ஒரு மிகப்பெரிய மாறுதல் ஏற்படத் தொடங்கியது. இலங்கை அரசு எது செய்தாலும் அதை ஆதரிப்பது, தவறு செய்தால் கண்களை மூடிக் கொள்வது என்கிற மத்திய அரசின் போக்குக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. தமிழிலும் இசைக்கப்பட்ட இலங்கையின் தேசிய கீதம் எந்தவிதக் காரணமும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டபோதுகூட, இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நமது மத்திய, மாநில அரசுகள் மௌனம் சாதித்தனவே தவிர, எச்சரிக்கைக் குரல்கூட எழுப்பவில்லை.தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு கடிதம் எழுதுகிறது. முதல்வர் வேண்டுகோள் விடுக்கிறார். மத்திய அரசு எச்சரிக்கை செய்வதாக அறிவிக்கிறது. அத்தோடு பிரச்னை கைகழுவப்படுகிறது.மத்திய அரசு நியாயமாக என்ன செய்ய வேண்டும்? இலங்கை அதிபர் ராஜபட்சவைஇந்தியப் பிரதமர் நேரில் அழைத்து எச்சரிக்க அல்லவா வேண்டும்? பலமுறை இலங்கைத் தூதரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சர் மூலமும் வேண்டுகோள், எச்சரிக்கை என்று விடுத்தும் பயனில்லாத நிலையில் அதுவல்லவா அடுத்த முடிவாக இருக்கும். ஆனாலும் தயங்குகிறார்கள். பயப்படுகிறார்கள். வலிமை மிகுந்த இந்தியா குட்டி இலங்கையிடம் பயப்படுகிறதே, ஏன்?அவரவர் குடும்பத்தில் ஒருவர் மீன் பிடிக்கப்போய் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால்தான் இவர்களுக்கு அதன் வலி தெரியும்! கொல்லப்படும் மீனவர்களின் குடும்பமும் ஒரு குடும்பம்தான் என்பது ஏன் நமது ஆட்சியாளர்களுக்கு மறந்து விடுகிறது?எதையுமே செய்யாமல், எதையுமே கேட்டுப் பெறாமல் தமிழக அரசு கடிதம் எழுதுகிறது. கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்குகிறது. தேர்தல் காலச் சாவு என்றால் அதிக நிதி கிடைக்கிறது. ஆனால், நீதி கிடைப்பது எப்போது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக