புதன், 26 ஜனவரி, 2011

Thamizh civilization in history of india: இந்திய வரலாற்றில் தமிழர் நாகரிகம்: முதல் கலந்துரையாடல்கூட்டம்


உலக வரலாறு என்பது குமரியில் இருந்து தொடங்கப்பெற வேண்டும் என்பது உலக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்து. ஆனால் தமிழ்நாட்டு  வரலாற்றுப் பாடத்தில்கூட இந்திய வரலாறு என்ற போர்வையில் தமிழக வரலாற்றுச் செய்திகள் இருட்டடிப்புச் செய்யபபடுகின்றன. இந்தக் கறையை நீக்கும் வகையில் முடிவெடுத்துள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கும் துணைத்தலைவர் முனைவர் அ.இராமசாமிக்கும் பாராட்டுகள். இக்கூட்டத்தில் முதுமுனைவர் இரா.இளங்குமரன் பங்கேற்றதையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.  இவர்கள் உருவாக்கும் வரலாற்றுப் பாடங்கள் இந்தியாவிலுள்ள பிற மாநிலப் பள்ளிகளிலும் மத்தியப் பள்ளிகளிலும் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்திய வரலாற்றில் தமிழர் நாகரிகம்: முதல் ஆலோசனைக் கூட்டம்


சென்னை, ஜன. 25: இந்திய வரலாற்றில் தொன்மைக் கால தமிழர் நாகரிகத்தை சேர்ப்பது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் ராமசாமி தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகத்தை அடுத்து, தொன்மைக்கால தமிழர் நாகரிகத்தை சேர்க்க வலியுறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.   இதுகுறித்து கவுன்சில் துணைத் தலைவர் ராமசாமி கூறியது:  கடல் அகழாய்வு, நில அகழ் ஆய்வு, பண்டைக் கால ஓய்வு, இலக்கியச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழர் தொன்மை நாகரிகம் என்ற புத்தகம் எழுதுவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.   பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), இந்திய வரலாற்று ஆய்வு மன்றம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக்கழகங்களுக்கும் இந்த பாடத் திட்டத்தை அனுப்புவது, இந்திய வரலாற்றில் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு அடுத்தபடியாக இந்த புதிய பாடத் திட்டத்தை சேர்க்க வலியுறுத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதுதொடர்பாக பல்கலைக்கழக வரலாற்று பாடத்திட்டக் குழுத் தலைவர்கள் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றார்.ஆலோசனைக் கூட்டத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் குருமூர்த்தி, சத்தியமூர்த்தி, கடல் அகழ் ஆய்வாளர்கள் அதியமான், மதிவாணன், வரலாற்று ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், கருணானந்தம், சந்திரசேகரன் உள்பட 30 பேர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக