ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஆசிரியர் தினம்: ஆளுநர், முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து


சென்னை, செப்.4: ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஆளுநர் பர்னாலா வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: நாடு முழுவதிலும் உள்ள ஆசிரியர் சமுதாயத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மிகச்சிறந்த சிந்தனைவாதியாகவும், ஆசிரியராகவும் விளங்கி நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். கற்பித்தலில் புதிய கோணத்தை உருவாக்கிக் கொடுத்தவர் அவர். அவரது கொள்கைகள், கோட்பாடுகள் இன்றளவும் ஆசிரியர் மற்றும் இளைய சமுதாயத்துக்கு பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆசிரியர் தினமான இந்த நாளில் நம்மை தகுதிவாய்ந்த குடிமக்களாக உருவாக்கிக் கொடுத்த நமது குருக்களுக்கு மரியாதை செலுத்துவோம் என்று பர்னாலா கூறியுள்ளார்.முதல்வர் கருணாநிதி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான, செப்டம்பர் 5-ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் சீரிய முறையில் கல்வித் துறையில் தொண்டாற்றி வரும் ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தமுறை நியமனத்தில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிய 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம், பணியிட மாறுதலுக்கு கலந்தாய்வு என பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசின் இத்தகைய அரிய பல திட்டங்களால் ஆசிரியர்கள் மகிழ்வோடு பணிபுரிந்துவரும் இந்த வேளையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் ஆசிரியர் தின விழா சிறப்புடன் நிகழவும், ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழவும் உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று தனது வாழ்த்துச் செய்தியில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா: கல்விக் கண் திறக்கும் அரிய பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பர்.அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வியை போதித்து மாணவ-மாணவியர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியர்கள். இளைய சமுதாயத்தினரை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும், புகழ் மிக்கவர்களாகவும் ஆக்கும் சக்தி படைத்தவர்கள் ஆசிரியர்கள். சமூக சேவை செய்வதற்குச் சிறந்த வழி ஆசிரியர் பணிதான். ஏழை, எளிய மாணவ-மாணவியர் கல்வி பயில தடையாக இருப்பது வறுமை என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தலைசிறந்த தத்துவ ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளாகிய இந்த நன்னாளில், கல்வியின்மை நீங்கட்டும். ஆசிரியர் வாழ்வு சிறக்கட்டும் என்று ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கருத்துக்கள்

செப்டம்பர் 5 ஆம் நாள் என்பது செந்தமிழறிஞர் கப்பலோட்டிய தமிழர் விடுதலைப் போராளி படைப்புச் செம்மல் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள். திருப்பதி முதலான பகுதிகள் ஆந்திராவில் சேரக் காரணமாக இருந்த, திருக்குறளைப் பழித்துக் கூறிய, திருக்குறள் போற்றும் நூலைத் தடை செய்த தமிழ்நாட்டில் கல்வி கற்றும் தமிழர்க்கு எதிராக அரசியல் நடத்திய மேதகு இராதாகிருட்டிணன் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம் நாட்டு விடுதலைக்கென தன்னையே ஒப்படைத்த அறிஞரின் பிறந்தநாளை மறக்கலரமா? திருக்குறளைப் பயிலாதவர் பெற்றோராக இருந்தாலும் புறக்கணிப்பேன் என்று கூறிய செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பிறந்த நாளில் திருக்குறளைப் புறக்கணித்தவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் நாம் உண்மையான நாட்டுப் பற்றாளரை உண்மையான அறிஞரை மறக்கலாமா? வ.உ.சி.வழி நின்று வண்டமிழ் வளர்ப்போம்! வ.உ.சி.புகழை வையகமெங்கும் பரப்புவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2010 4:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

(எடுக்கப்பட்ட செய்தியை மீண்டும் பதிகிறேன்.)
By Ilakkuvanar Thiruvalluvan
9/6/2010 2:57:00 AM

1 கருத்து:

  1. Stephen A Sep 06 10:40AM +0530 ^

    இந்த பதிவிற்கு ஒரு பின்னூட்டமும் இல்லாதது மனம் வலிக்கிறது!!!

    *செந்தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார்* புகழ் என்றும் வாழ்க!!!
    ஊர் பெயரை எல்லாம் அரசியல் காரணங்களுக்காக மாற்றம் செய்யும் போது,
    அரசு சொன்னது, இவர்கள் பெயரில் கல்வி நிறுவனங்கள் துவங்கப்படும் அல்லது
    இருக்கின்ற கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் பெயர் இடப்படும் என்று.
    ஆனால் வ.உ.சி. பெயர் மறக்கப்பட்டது வேதனைக்குரியது!!!
    மேலும் அவர்தம் புகழ் அறிய சொடுக்கவும்!!

    நண்பரே ! மே லும் சில கொடுமைகளை நினைவு கூர்ந்தால் வாக்கு மையத்தையே சுற்றிச் செயல்படும் அரசியல் வெறுப்பையே விளைவிக்கிறது.

    சாதித்தலைவர்கள் பெயர்களை நீக்குவதாகக் கூறி தமிழ் வளர்த்த அறச் செம்மல்களான சேரர், சோழர், பாண்டியர், பெயர்களை நீக்கினர்; பல்லவர் பெயரை நீக்கினர்;உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரை நீக்கினர். மதமான பேய் பிடியாதிருக்க வேண்டிய அருள் வளர்த்த வள்ளலார் முதலான பிறர் பெயர்களையும் நீக்கினர். ஆனால் சாதித்தலைவர்கள் பெயர்களை நீக்கும் ஆணையின் மை காயும் முன்பே தமிழக அரசிற்குரிய அரசு (அரசினர்) தோட்டத்திற்கு ஓமநதூரார் பெயரைச் சூட்டினர். ஓமந்தூரார் அரசினர் தோட்டம் என்றால் இந்த அரசே அவர் பெயரில் அல்லவா உள்ளதாகிறது. அடுத்து பைந்தமிழ்ச்சாலை என்று பெயர் சூட்டியிருக்க வேண்டிய கிரீன்வேய்சு சாலையின் ஒரு பகுதியைக் குமாரசாமி ராசா சாலை என்றாக்கினர். இவ்வாறு செய்வதால்தான் தமிழ் நாட்டில் தமிழர் நிலத்தில் தெலுங்கர் ஆதிக்கம் மேலோங்குவதாக எண்ணம் விளைகின்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தெய்வப்புலவர் திருவள்ளுவரையே சாதித்தலைவராகக் கருதுபவர்கள் செக்கிழத்த செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரனாரை எவ்வாறு எண்ணிப் பார்ப்பார்கள்?

    வ‌ேதன‌ையுடன்
    இலக்குவனார் திருவள்ளுவன்

    பதிலளிநீக்கு