வெள்ளி, 10 செப்டம்பர், 2010

அரசாங்கம் யார் பக்கம்?
First Published : 10 Sep 2010 12:15:36 AM IST


குடிமக்களைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கும் ஓர் அரசு, இப்படிப் பேசியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடையாமல் இருக்க முடியாது. பல தேசிய இனங்கள் கூடி வாழும் துணைக் கண்டத்தில் ஒரு தேசிய இனத்தை பல்வேறு முறைகளில் புறக்கணிப்பது ஜனநாயகத்தில் எப்படி நியாயமாகும்?ஒவ்வொரு சுதந்திரம் மற்றும் குடியரசு நாளில் இந்திய ஒருமைப்பாட்டைப் பேசும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதாக புளகாங்கிதம் அடைகிறார்கள். இந்தியாவின் இறையாண்மையைக் கட்டிக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்திருப்பதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். தேசம் வியத்தகு வளர்ச்சியை அடைந்து கொண்டிருப்பதாகவும், உலக நாடுகள் நம்மை வியப்போடு பார்ப்பதாகவும் கூறுகிறார்கள்.சரி, தமிழ்நாட்டு மீனவர்கள் பல காலமாக அண்டை நாட்டுக் கடற்படையால் தொழில் செய்ய முடியாமல் தவிக்கிறார்களே, இதை இந்த மாபெரும் நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே, இது ஆட்சியாளர்களுக்கு அறைகூவலாகத் தெரியவில்லையா?தமிழ்நாட்டு மீனவர்கள் என்றாலும் அவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? அவர்களின் படகுகளைக் கைப்பற்றிக் கொண்டு, அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை நிர்வாணப்படுத்தி, பனிக்கட்டிகளின் மேல் படுக்கவைத்து அடித்து உதைப்பது இறையாண்மை பேசும் இந்திய அரசாங்கத்துக்கு அவமானம் இல்லையா?தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது வேடிக்கையான விளையாட்டா? தமிழ் மக்களின் உயிர் இலங்கை அரசுக்கு உவப்பாக இருக்கலாம்; இந்திய அரசாங்கத்துக்கும் அதேநிலைதானா?பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு; அளவு கடந்து போன போதுதான் மாநிலங்களவையில் அனைத்துக் கட்சியினரும் தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக மத்திய அரசின் மேல் குற்றம்சுமத்தினர். இதற்குப் பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல இருக்கிறது."இலங்கைக் கடற்பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இப்படிப் பேச இவருக்கு அதிகாரம் அளித்தது யார்? சர்வதேச கடல் எல்லை விதிமுறையை மதித்து இந்தியப் பகுதிக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு விட்டதா? இலங்கைச் சிறையில் கிடக்கும் இந்திய மீனவர்கள் பற்றிய தகவல் உண்டா?2008-ல் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்குப் பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும், எனினும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து இலங்கை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் ஒருதரப்பாக அறிவித்துள்ளார்.உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை தாண்டிச் செல்வது வேண்டுமென்றே நடப்பது அல்ல; அவர்களை அறியாமல் நடப்பதாகும். மீனவர்கள் எல்லாம் சர்வதேசக் கடல் எல்லை விதிமுறைகளை அறிந்தவர்கள் அல்ல; பெரும்பாலோர் போதிய படிப்பறிவில்லாத பாமர மக்கள்; அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர, அடித்துக் கொல்வது என்ன இயற்கை நியாயம்?உலகத்தில் எந்த நாடும் அத்துமீறி வரும் அண்டை நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை; கைது செய்து திருப்பி அனுப்புவதுதான் வழக்கம்; குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விடுவதும், மேற்கு வங்க மீனவர்கள் வங்கதேசக் கடல் எல்லையில் நுழைந்து விடுவதும் அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வுகளே. அதற்காக அந்நாடுகளின் கடற்படை அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதில்லை.இந்தியக் கடல் எல்லைக்குள் ஊடுருவி வந்த பிறநாட்டு மீனவர்கள் மேல் இந்தியக் கடற்படை தாக்குதல் நடத்தியதுண்டா? இந்தியக் கடல் எல்லைக்குள் இலங்கை மீனவர்கள் வந்ததில்லையா? அவர்கள் மேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூற முடியுமா?ஆனால் தமிழக மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இலங்கைக் கடற்படையால் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். மீனவர்களின் உடைமைகளான படகுகளும், வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவும் நமது கடல் எல்லைக்குள்ளேயே நடைபெற்றுள்ளன என்பதுதான் வேதனையிலும் வேதனை.இருந்தும் இந்திய அரசு கண்டும், காணாதது போல நடந்து கொள்கிறது; தமிழ் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. அதனால்தான் 2008-ல் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை மறைத்துப் பேச முடிகிறது.தனது குடிமக்களுக்குப் பாதுகாப்புத் தரவேண்டிய அரசாங்கம் அடுத்த நாட்டுக் கடற்படைக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்கு சர்வதேச சட்டங்களின்படி இழப்பீடு பெற்றுத் தர மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது ஏன்? இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.இந்தப் பிரச்னை இருநாட்டு அரசுகளும் தீர்வுகாண முயலாத நிலையில் இலங்கை மீனவர்கள் குழு தமிழக மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தமிழகம் வந்தது. பாக். வளைகுடாவில் மீன்பிடிக்கக்கூடிய மீனவர்கள் அடங்கிய இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருதரப்பு மீனவர்களும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து பேசியுள்ளனர்.இந்த முயற்சி 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இடையில் நின்றிருந்த இந்த முயற்சி மறுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் சார்பில் 30 பேரும், இலங்கையிலிருந்து 24 பேரும் கலந்துகொண்டனர். இதுதவிர, இருநாட்டு அரசுகள் தரப்பில் 2 பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.பாக். ஜலசந்திப் பகுதியில் இணக்கமான மீன்பிடித் தொழில் செய்வது குறித்து இலங்கை - இந்திய மீனவர்கள் இடையே சென்னையில் கலந்துரையாடல் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கலந்துரையாடலில் இருநாட்டு மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் செய்ய வேண்டிய நடைமுறைகள் பற்றியும், எல்லையைக் கடப்பதால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இந்தப் பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இருநாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருப்பதால் அரசுகள் எடுக்கும் முடிவில்தான் இவர்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது. இதனை இலங்கை மீனவர் குழுவின் தலைவர் கே. சூரியகுமாரனும், தென்னிந்திய மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசகர் விவேகானந்தனும் உறுதி செய்துள்ளனர்.கடல் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அவ்வாறு எல்லை தாண்டுவதாகத் தெரிய வந்தால் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்டப்படியான நடவடிக்கைகளில்தான் ஈடுபட வேண்டும் என்றும் இலங்கை மீனவர் தலைவர் கூறியிருப்பதை இந்திய - இலங்கை அரசுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.கச்சத் தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அதை இலங்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள். கச்சத் தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளைக் காய வைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை; ஆனால் அதை அரசுகள்தாம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.ஆனால் இலங்கை மீனவர்கள் தொழில் ரீதியாக வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று இருக்கிறது. இந்தியப் பகுதியிலிருந்து வரும் மீனவர்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்ட விசைப் படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது என்பதே. இலங்கையில் கடல் வளத்தை அழிக்கக்கூடிய எந்தவிதமான தொழிலையும் செய்வதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனை ஓர் ஆண்டுக்குள் இந்திய மீனவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இந்த நாட்டில் உழவர்களும், மீனவர்களும் தொழில் முறையாகத் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் தொல்குடிகள்; இந்த மண்ணின் மைந்தர்கள்தாம் இன்று மிகுந்த நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் தொழிலைத் தொடரவும் முடியாமல் விடவும் முடியாமல் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தீர்வுகாண வேண்டிய அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனை.மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் ஓர் அரசாங்கம் அந்த மக்களைக் காப்பாற்ற முடியாது என்று கூறலாமா? மக்களாட்சியில் வெளிப்படையாகச் செயல்பட வேண்டிய அரசு சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கலாமா?தேர்தல் வரும்போது, "மக்கள் யார் பக்கம்?' என்று கேட்பது வாடிக்கை. இப்போது, "அரசாங்கம் யார் பக்கம்?' என்று கேட்க வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகி இருக்கின்றனர்.
கருத்துக்கள்

சரியான கருத்துகள். பாராட்டுகள். எனினும் மத்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் உதவி வேண்டுமெனில் இந்தியர்கள் ஆக்கப்படுவார்கள். தமிழர்களை உதறித் தள்ள வேண்டுமெனில் தமிழர்களாக ஆக்கப்படுவார்கள். இந்தியத்தில் தன்னைக் கரைத்து உரிமை யிழந்த அடிமைகள் தமிழர்கள் இன மான உணர்வு பெறும் பொழுதுதான் விடிவுகள் பிறக்கும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/10/2010 3:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக