வெள்ளி, 10 செப்டம்பர், 2010

நிலம் கையகப்படுத்தினால் விவசாயிகளுக்கு இழப்பீடு, வேலைவாய்ப்பு': சோனியா காந்தி


புது தில்லி, செப்.9: நிலங்களைக் கையகப்படுத்தும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு, மாற்று வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி   கூறினார்.தில்லி அருகே தாத்ரியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அனல் மின் நிலையத்தின் 2-வது பிரிவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:இங்கு துவங்கப்பட்டுள்ள 980 மெகாவாட் திறனுடைய அனல் மின் நிலையம் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக விநியோகம் செய்யப்படும்.நிலங்களை கையகப்படுத்தாமல் புதிய தொழிற்சாலைகளோ, அடிப்படை கட்டமைப்பு வசதிகளோ ஏற்படுத்த முடியாது. இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.அப்படி விவசாயிகளின் நிலங்களை அதிகாரிகள் கையகப்படுத்தும்போது அதற்குரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். மேலும் அந்தத் தொழிற்சாலைகளில் அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பையும் வழங்கவேண்டும்.அதிக விளைச்சலைத் தரும் நிலங்கள், செழிப்பான நிலங்களை கையகப்படுத்தக்கூடாது. அதில் அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும்.இவ்வாறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதற்காக ஹரியாணா போன்ற மாநிலங்களில் முற்போக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அந்த சட்டங்களை மற்ற மாநில அரசுகளும் பின்பற்றவேண்டும்.நமது நாட்டின் மிக முக்கிய தேவைகளில் மின்சாரமும் ஒன்று. எனவே நாம் அதை நிச்சயம் உற்பத்தி செய்தே ஆகவேண்டும். விவசாயிகள், தொழிற்சாலைகள், கனரக தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் அவசியமானது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். ஆனால் அதே நேரத்தில் நாம் நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும்.என்ன இருந்தாலும் வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள் நமக்குத் தேவை என்பதை மறந்துவிடக்கூடாது. அவற்றைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சார வசதி கிடைக்கவேண்டும் என்பதுதான் நமது எண்ணம்.எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை புதுப்பித்தல் சக்தி மூலமாகப் பெறுவதற்கு நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும்.இப்போது மக்களவையில் அணுவிபத்து நஷ்டஈட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் நாட்டில் அணு மின் நிலையங்கள் அமைக்க ஏதுவாகும். இதனால் கூடுதல் மின்சாரம் நமக்குக் கிடைக்கும். அணு மின் நிலையங்களை அமைப்பதற்கான வழிவகைகளை தேசிய அனல் மின் நிலையம் (என்டிபிசி) எடுத்து வருகிறது என்பதை நான் அறிவேன். பசுமை மற்றும் சூரிய மின் சக்தியை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
கருத்துக்கள்

நல்ல திட்டம் என்று பாராட்டலாமா? நல்ல பேச்சு என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனெனில் இப்பொழுதும் அவ்வாறு இழப்பீடு தருவதாகவும் வேலை வாய்ப்பு நல்குவதாகவும் சொல்லித்தான் அரசு நிலங்களைப பறிக்கிறது. நடைமுறையில் இரண்டும் இல்லாமல் போராட்டங்கள் தொடருகின்றன. எனவே, உரியவாறு இழப்பீடும் வேலைவாய்ப்பும் கையகப்படுத்துமு் நலத்தில் அமைக்கும் தொழிலகத்தில் பங்கும் அளிக்க சோனியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியானாவில் நடைமுறையில் உள்ளதாகக் கூறும் முற்போக்கான சட்டத்தை நாடு முழுவதும பின்பற்றும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/10/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக