First Published : 06 Sep 2010 12:04:37 PM IST
மதுரை, செப். 5: "பிராமி' எழுத்துகள் மதுரை பகுதியிலிருந்தே வட இந்தியப் பகுதிக்குப் பரவியுள்ளன என்று காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ப.ஆனந்தகுமார் கூறினார். மதுரை 5-வது புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் "மதுரைக் கவிஞர்கள்' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரை: மதுரை நகர் மலைகள் சூழ்ந்ததாக உள்ளது. இம்மலைகளில் அரிய பல கல்வெட்டுகள் உள்ளதை அறியமுடிகிறது. பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் யானைமலையில் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் குகைகளில் இக்கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அண்மையில் தேனி மாவட்டம், புலிமான்கோம்பையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட நடுகல்லானது கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. அதில் பிராமி எழுத்துகள் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.வட இந்தியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோகர் கால கல்வெட்டுகளில் பிராமி எழுத்துகள் இருந்ததால் அங்கிருந்தே தெற்குப் பகுதிக்கு பிராமி பரவியிருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், புலிமான்கோம்பை நடுகல் மூலம் தெற்கிலிருந்தே வடக்கிற்கு பிராமி எழுத்துகள் சென்றிருப்பது தெரியவருகிறது. இதன்மூலம் மதுரையில் பழங்காலந்தொட்டே கலாசாரம் மிக்க மக்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம். மதுரையைப் பற்றி வெளிநாட்டவரான மெகஸ்தனிஸ் உள்ளிட்டோரது குறிப்புகளிலும் காணப்படுகிறது. வால்மீகி ராமாயணம், அசோகர் கல்வெட்டுகள் மூலமும் மதுரையின் பழமையை அறியலாம். சங்க இலக்கிய நூல்களில் 416 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் 53 புலவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். மதுரையில் வணிகர், ஆசிரியர் என அனைத்துத்துறையைச் சேர்ந்தவர்களும் சங்ககாலப் புலவர்களாக விளங்கியுள்ளனர். சங்க இலக்கியத்தில் 206 பாடல்கள் மதுரைப் புலவர்களால் பாடப்பெற்றவையாகும். இதன்மூலம் மதுரை சிறந்த கலாசார நகராக விளங்கியிருப்பதை அறியலாம்.நவீன கவிதைகளை மதுரையில் பலரும் தற்போது எழுதி வருகின்றனர். அவர்களில் குறிப்பிட்ட சிலரே மதுரையின் வரலாறைப் பதிவுசெய்யும் வகையில் கவிதை எழுதியுள்ளனர். அவர்களில் ஜெயபாஸ்கரன் கவிதைகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. என்.நன்மாறன் எம்.எல்.ஏ.வும் குழந்தைக் கவிதைகள் எழுதுபவராக உள்ளார். அவர் சந்திராயன் விண்கலம், சந்திரனைப் பற்றி எழுதிய கவிதை அறிவியல்பூர்வமாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் எஸ்.பி.ஜெ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தலைவர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் முன்னிலை வகித்தார். மீனாட்சி புத்தக நிலையம் முருகப்பன் வரவேற்றார். பபாசி தலைவர் சேது. சொக்கலிங்கம், வணிக வரித் துறை இணை ஆணையர் தேவேந்திரபூபதி, இளசைசுந்தரம், வளவன் அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துக்கள்
இவ்வுரையை இருட்டடிப்பு செய்யாமல் வெளியிட்ட தினமணிக்குப் பாராட்டுகள். பேரா.ப.அனந்த குமார் வரலாற்றுச் செய்திகளையெல்லாம் வெறும் உரையாகக் காற்றில் கலந்து வெற்றரையாக மாறாமல் இருக்க கட்டுரைகள் வடிவிலும் நூல் வடிவிலும் மக்கள் அறியச் செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் எழுதிப் பிற மொழியினரும் உணரச் செய்ய வேண்டும்.
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
9/6/2010 12:28:00 PM
9/6/2010 12:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இ-மெயில் *
பெயர் *
சரிபார்ப்பு எண் *