செவ்வாய், 7 செப்டம்பர், 2010

உரத்த சிந்தனை : பண்பாட்டை அழிக்கும் பாதை:

சேணம் (saddle )என்பது குதிரையின் கண்களின் ஓரம் கட்டப்படுவது அல்ல. குதிரையில் அமருவதற்காக ப் போடப்படும் தோல் இருக்கை. கண் மறைப்பு என்னும் பொருளில் தவறாகக் கட்டுரையாளர் கையாண்டுள்ளார்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
குதிரையின் கண்களின் ஓரங்களில் சேணம் கட்டப்பட்டிருப்பது எல்லாருக்கும் தெரியும். இந்த சேணம் இல்லையென்றால் என்னாகும்?நாலாபுறமும், குதிரை தன் பார்வையைத் திருப்பி, சவாரி செய்பவரை, சாக்கடையில் தள்ளிவிடும். குதிரைக்கு சேணம் போன்றது தான், திரைத் துறைக்குத் தணிக்கைத் துறை.ஆனால், இந்த தணிக்கை என்ற சேணம், கண்ணாடியால் மாற்றப்பட்டு விட்டதோ என்று தான், அண்மைக்கால சில திரைப்படங்களை பார்க்கிற போது நினைக்கத் தோன்றுகிறது.

ஆபாச, வன்முறைக் காட்சிகள், கற்பனைக்கும் எட்டாத அளவில் கொடிகட்டிப் பறப்பதைப் பார்த்தால், வேறு என்ன எண்ணுவது?ஒரு கலையின் வடிவம் என்பது, பார்க்கும் மனிதரின் மனங்களை மாறுதல் ஏற்படுத்தும் அதி அற்புத சக்தி வாய்ந்தது. சிறு வயதில், "அரிச்சந்திரா' நாடகம் பார்த்த, "மோகன்தாஸ்' பின்னாளில், "மகாத்மா'வாக மாறிய வரலாற்றின் பின்னணியில், "அரிச்சந்திரா' அங்கம் வகிக்கிறது.  ஒரு கலையின் வலிமைக்கு இதைவிட வேறு சான்று ஏதும் தேவையில்லை.கலை என்பது ஒரு விதை. அந்த விதை ஒரு விஷச் செடியை விளைவிக்கும் என்று தெரிந்தால், அதை அழித்து விடுவதா... வளரட்டும் என்று மண்ணில் விதைத்து விடுவதா? 80, 90 வரை வீரிய விதையாக செயல்பட்ட திரைப்படங்கள், இப்போது விஷ விதைகளாக மாறிப் போக யார் காரணம்?"பல கோடிகள் போட்டு, படம் எடுக்கும் எங்களுக்கு அந்தப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் என்றால், ஆபாசம், வன்முறைக் காட்சிகளும் தான், எங்கள் கையில் திடைத்த ஆயுதம்...' என்று சம்பந்தப்பட்ட பலர் கூறுகின்றனர். அவர்களின் கருத்தை ஒதுக்க முடியாது தான். முதலீடு திரும்பக் கிடைக்க, விலை என்றால், மூலையில் முக்காடு போட்டு முடங்க வேண்டியது தான்.சரி... சமுதாயம்?"அது எக்கேடு கெட்டால் எனக்கென்ன?' என்று, இதன்மூலம் அவர்கள் சொல்லும் மறைமுக பதிலை, அப்படியே வரவு வைத்துக் கொள்ளலாமா?

வர்த்தகம் என்பது என்ன? விற்கப்படும் பொருள், விற்பவருக்கு லாபத்தையும், வாங்குவோருக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். அதன் பெயர் தான் வணிகம்!"விற்பவர் வானாகட்டும்; ஏற்பவர் வீணாகட்டும்' என்றால், அது வியாபாரம் அல்ல.திரைப்படங்கள் தோன்றிய ஆரம்பக் காலங்களில், வரலாறு, ஆன்மிகம், புராணம் உள்ளிட்ட சம்பவங்களின் கதைகள் தான், மூலாதாரமாக விளங்கின. அவைகள் பொய்யோ, கற்பனையோ... ஆனால், மனித குலத்தின் ஆணிவேர்களான சத்தியம், தர்மம் உள்ளிட்ட கொள்கைகளை அவைகள், ஆராய்ச்சி மணி போல் உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தன என்பதை மட்டும், எவராலும் மறுக்க முடியாது; மறைக்கவும் முடியாது."பழம் பஞ்சாங்கம்' என்று கூறி, சமுதாயக் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள், அதன் பின் உலா வரத் தொடங்கிற்று.அப்படி வெளியான சமுதாயக் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள், பல வியத்தகு விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் தோற்றுவித்ததையும், ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்."வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்...' என்று சொல்வது போல, அதே சமூகக் கதைக் களங்கள், இப்போது மக்களை எங்கே இழுத்துக் கொண்டு பயணிக்கிறது? திரைப்படத் தொடர்புடையோர் நெஞ்சில் கைவைத்துச் சொல்லட்டும்.

தாய், தந்தையருக்கு அடங்கி நடந்த இளைஞர்கள், யுவதிகள், இப்போது கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். பெரியோர்களை மதிக்கும் பண்பு, இருபாலாரிடமும் இல்லை. இப்போதெல்லாம் பாச உணர்ச்சிகள் மங்கிப் போய், பாலுணர்ச்சிகள் மேலோங்கி விட்டது.இதற்குப் பெரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான், திரைப்படங்கள் இருக்கின்றன. காரணம், மனிதரோடு இரண்டறக் கலந்து விட்ட சாதனம், "சினிமா'வைத் தவிர வேறு எதையும் இங்கே கோடிட்டு காட்ட முடியாதே.பந்தம், பாசம், வீரம், விவேகம், அன்பு, பண்பு போன்ற அம்சங்கள், கடலில் கரைத்து விடப்பட்ட பெருங்காயம் போலத் தான். அதுவும் சில படங்களில் தான், ஊறுகாய் போல் பயன்படுத்தப்படுகின்றன.உப்புக் கடலில் ஒரு சொட்டு, நல்ல தண்ணீர் விட்டால், கடலின் கரிப்பு மாறி விடுமா?திரைப்படம் சார்ந்த அனைவருக்கும், இது தெரியாமல் இல்லை என்றாலும், அவர்கள் மாறத் தான் தயார் இல்லை. "சமுதாயம் நாறட்டும்' என்ற எண்ணம் இருந்தால், அவர்களாக மாறட்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். காரணம் கடிவாளம் இல்லாமல் விடிகாலம் மலரப் போவது இல்லை.

அண்மையில், "கடைகளின் பெயர் பலகைகள், தமிழில் தான் இருக்க வேண்டும்' என அறிவிப்புப்படி, கிட்டத்தட்ட 99 சதவீதத்தினர், தமிழில் பெயர் பலகைகளை மாற்றி விட்டனர். ஆகா, அரசின் வேண்டுகோளுக்கு அவ்வளவு மரியாதையா? அது தான் இல்லை.தமிழ் ஆர்வலர்கள் பலர், கல்லூளிமங்கன் போல் இருந்த பல கடைக்காரர்களின் பெயர் பலகைகளை பதம் பார்த்ததால் ஏற்பட்ட மாற்றம் தான் அது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி எல்லாரும் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.ஆக சட்டம் என்பது, எழுத்து வடிவில் மட்டுமே இருந்தால், அதை சட்டம் போட்டு வீட்டில் மாட்ட வேண்டிய நிலை தான் ஏற்படுமே தவிர, மாற்றம் வரும் என்று மட்டும் நினைத்து விடக் கூடாது.அதுபோலத் தான், சினிமா விஷயத்திலும் சிந்தனையாளர்கள் ஒரு தீவிர முடிவெடுக்க வேண்டும். இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒருபுறம் இருக்கட்டும். இனி வெளிவரும் திரைப்படங்களுக்குத் தான், கறுப்புத் திரை கண்டிப்பாகத் தொங்க விட வேண்டும்.

"அந்த திரைப்படத்தில் மட்டும் இப்படி ஒரு காட்சி அனுமதிக்கப்பட்டிருக்கிறதே. அதை முன் மாதிரியாகக் கொண்டு தான் நாங்கள், எங்கள் படத்தில் இப்படி ஒரு காட்சியை அமைத்தோம். எங்களுக்கு மட்டும் என்ன பாரபட்சம்?' என்று புதிதாக வரும் யாரும் வாதிட்டு, தங்களின் குறையை நியாயப்படுத்தி வெற்றி பெறும் வண்ணம் இருக்க முடியாத அளவிற்கு தணிக்கைத் துறையில் கடும் சட்டங்களை அமல்படுத்தியே ஆகவேண்டும்.முன் வருமா மத்திய, மாநில அரசுகள்? email: http:// hema338@gmail.com

 இ.டி.ஹேமாமாலினி -சமூக நல ஆர்வலர்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக