>>மணா பக்கங்கள்
சமீபத்தில் ‘சென்னை தினம்’ கொண்டாடப் பட்டதையொட்டி மயிலாப்பூரில் உள்ள பலஅடுக்குக் கட்டிடத்தின் கீழ்அரங்கில் சென்னையின் அந்தக்காலப் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஹிண்டு நிறுவனம் சார்பில் வைக்கப்பட்ட அந்தக்கண்காட்சியில் தமிழகத்தில் நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பல அரசியல் நிகழ்வுகளின் சில கணங்கள் கறுப்புவெள்ளைப் பதிவாக மிஞ்சியிருந்தன.அண்ணா மறைந்தபோது அடர்த்தியுடன் இருந்த சென்னை மாநகரம்; குண்டுபட்ட உடம்புடன் தி.மு.க தலைவர்களைச் சந்தித்த எம்.ஜி.ஆர் என்று பல படங்களுக்கிடையில் ஒரு படம் - மாணவர்கள் மொத்தமாக சாலைகளில் திரண்டு நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டக் காட்சியின் வேகத்தைப் புலப்படுத்தியது.
பலர் வியப்புடன் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தார்கள். அன்றைக்கு அந்த மாணவர்கள் போட்டிருந்த உடைகளில் தெரிந்த அன்றைய நாகரிகத்தைச் சிலர் உற்றுப்பார்த்துச் சிலர் புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பரவிக் கொண்டிருந்தபோது அதன் அடையாளமான புகைப்படம் தந்திருக்கும் செய்தி - உடை சார்ந்தது தானா?
இன்றையத் தலைமுறையின் பிரதிநிதிகளுக்கு அன்றைக்கு மாணவர்களிடம் இருந்த உணர்வும், மொழி சார்ந்த ஈடுபாடும், போராட்டக்குணமும், அதன் வீர்யமும் குறைந்தபட்சம் புரியுமா?
அன்றைக்கு இருந்த அரசியல்வாதிகள் தூண்டிவிட்டார்கள். அதற்கு அந்த மாணவர்கள் பலியாகி விட்டார்கள் என்று மிகச்சுலபமான பதில் வந்துவிடலாம். 1964ம் ஆண்டு. அன்றைக்கு முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்தை சென்னை மாம்பலத்தில் மறித்து தமிழைக்காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சிய சின்னச்சாமி ஜனவரி 25ம் தேதி அன்று மற்றவர்களுக்குக் கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தன்னைத் தானே கொளுத்திக்கொண்டு இறந்துபோனார். அதைத்தொடர்ந்து சிவலிங்கம், அரங்கநாதன், வீரப்பன், முத்து, சாரங்கபாணி என்று ஆறு உயிர்கள் கருகிப் பலியாயின. சிலர் விஷத்தைக் குடித்து இறந்தார்கள்.
இந்த நிகழ்வுகள் இன்றைக்குச் சாதாரணமான செய்தியாக உணரப்பட்டு - அதை அலட்சியமாக எதிர்கொள்ளலாம். முத்துக்குமார் நம் சமகாலத்தில் தீக்கு இரையாக்கிக் கொண்ட இளைஞன். இது மாதிரி அப்போது தீக்கு தன்னைக் கொடுத்த எத்தனை உயிர்கள்? அவர்களுக்கு உயிர்ப் பயமில்லையா? குடும்பத்தினரை இழக்கிறோம் என்கிற உறுத்தல் அவர்களுக்கு இருந்திருக்காதா? அதையும் மீறி ஏன் அந்த முடிவை அவர்கள் எடுத்தார்கள்? தங்கள் கனவுக்காக ஏன் தன்னையே தீக்குக் கொடுத்தார்கள்? தசையினைத் தீச்சுடும் வலியைப்பற்றி நாம் படிக்கிறோம். அவர்கள் உணர்ந்து அனுபவித்திருக்கிறார்கள்.
இந்தச் செய்திகள் அன்றைக்கு அமெரிக்காவில் வெளியாகும் 'நியூயார்க் டைம்ஸ்' வரை வெளியாகின. ஐ.நா.சபையிலும் இந்தக் கொத்தான மரணத்தின் எதிரொலி கேட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் - அந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி அன்று இந்தி ஆட்சி மொழியாகும் என்கிற அறிவிப்பு வெளியானதுதான். அன்றைய தினத்தைத் துக்க நாளாக அறிவித்தது தி.மு.க.
அந்த வேகம் மாணவர்களுக்கும் பரவியது. மாணவர்களுக்கிடையே போராட்டக் குழுக்கள் உருவாயின. அன்றைய தினத்தைத் துக்கநாளாக அனுசரிக்க மாணவர்கள் தமிழகம் முழுக்கத் தயாரானார்கள். கறுப்புச் சின்னம் அணிந்து போராட்டம் நடந்தது. இந்தி எதிர்ப்பு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. மதுரை போன்ற நகரங்களில் இன்னும் தீவிரமான நிலை. இந்திய அரசியல் சட்டத்தின் 343ஆவது பிரிவைக் கொளுத்தினார்கள். ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள் கைதானார்கள். பல மாணவர்கள் மீது தாக்குதல் எல்லாம் நடந்தது. கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சுகள், துப்பாக்கிப் பிரயோகங்கள், விடுதிக்குள் புகுந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் - அனைத்தையும் ஒற்றுமையாய்ச் சமாளித்தார்கள் மாணவர்கள். சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக வந்தபோது மறிக்கப்பட்டு அவர்கள்மீது தாக்குதல்கள் நடந்தன. துப்பாக்கிச் சூடு நடந்து அன்றைக்குக் குண்டுபாய்ந்து இறந்த மாணவர் ராஜேந்திரன்.
ராஜேந்திரனின் மரணம் பெரும் போராட்டத்திற்கு அடித்தளமானது. தமிழகத்தின் பல ஊர்களில் கண்டன ஊர்வலங்கள் நடந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட பிறகும் மாணவர்களின் போராட்டம் நீடித்தது. உண்ணாவிரதம் தொடர்ந்தது. ரயில் நிலையத்திலும், அஞ்சல் நிலையங்களிலும் போராட்டம் நீடித்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழகம் முழுக்கக் கைதானார்கள்.
அதைத்தொடர்ந்து மாணவர்கள் நடத்திய ரயில் நிறுத்தப்போராட்டம் தமிழத்தையே அதிரவைத்தது. கி.ஆ.பெ.விசுவநாதம், இலக்குவனார் போன்ற தமிழறிஞர்கள் சிலர் மீதும் பாதுகாப்புச் சட்டங்கள் பாய்ந்தன. பத்திரிகைகள் மீதும் அதே பாதுகாப்புச்சட்டம் பாய்ந்தது. மாணவர்கள் மீதும் பாய்ந்தது. பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அப்போதைய காங்கிரஸ் அரசு அறிவித்தபடி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 50. அப்போது வெளிவந்த இந்து இதழின் கணக்குப்படி பலியானவர்களின் எண்ணிக்கை 66. இந்தப் புள்ளிவிபரங்களையும், தகவல்களையும் இப்போது படிக்கும்போது சிலருக்கு மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகவோ, மிகை உணர்வாகவோ தெரியலாம்.
ஆனால் அன்று மாணவர்களிடம் எழுந்த ஆக்ரோசமும், வேகமும், போராட்ட குணமும் தமிழக மாணவர் எழுச்சியில் மறக்கமுடியாதவை. தங்களுடைய சுயநலத்தை மறந்து பொது நலனுக்காக மாணவர்களை ஒன்று சேர்த்தது அன்றைய சூழல். அன்றைக்கு இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்கு உந்துசக்தியாக விளங்கியிருக்கலாம். அதையும் மீறி மாணவர்களிடம் இருந்த உணர்வும், வேகமும் மிக முக்கியமானது.
அன்றைய ஆட்சியை எதிர்த்து அவர்கள் போராடியதின் பலனாகத்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து தி.மு.க 1967ல் ஆட்சிக்கு வர முடிந்தது. மாணவர்களிடம் அன்று இருந்த ஒற்றுமையும், பொது நலனுக்காக ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிற பண்பும் எங்கே மறைந்து விட்டன? அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களிடம் அந்த எழுச்சி பரவாமல் குறுகிப் போய் விட்டதற்கு என்ன காரணம்?
சாதிப் பிரச்சினைகளுக்காகவும், சொந்தப் பிரச்சினைகளுக்காகவும் தங்களுக்குள் மோதிக்கொள்கிற மாணவச் சூழலையே தற்போது அதிகம் பார்க்கமுடிவது எதை உணர்த்துகிறது? எது தன்னைச்சுற்றி நடந்தாலும் -அதற்கு உணர்வளவில் கூட எந்தவித எதிர்வினையும் காட்டாமல் தன்னுள் மூழ்கிப்போகிற "கார்ப்பரேட் நிறுவனங்களில்'' பணிபுரிவதற்கான மனநிலைக்குப் படிக்கும்போதே மாணவர்கள் மனஅளவில் தயாராகி விடுகிறார்களா? தன்னைச் சுற்றி நிகழும் எந்தக் கொடுமைக்கும் குறைந்தபட்சம் குரல் கொடுக்கத் தயங்குகிற குணம்தான் பாதுகாப்பான 'பொதுப்புத்தி'யாக மாணவ மனங்களில் பதிய வைக்கப்பட்டிருக்கிறதா?
எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு - தாங்கள் ஒன்றிணைந்து பொதுநலனுக்காகப் போராடிய அன்றைய மாணவர்கள் - கட்சி, சாதி, மதம், பொருளாதாரம் என்று பிரிந்து ஒற்றுமை குலைந்துத் தனித்தனி தீவுகளைப் போலாகி - தங்களுடைய பொதுவான பலவீனம், பொதுவான சுகங்கள், பொதுவான வேலைக்கான உத்தரவாதங்களை மையப்படுத்தியபடி இயங்கும் நவீனமயமான பெரும்பான்மையான இன்றைய மாணவர்கள் - இவர்களில் யாரை தமிழக மாணவர்களாகப் பிரதிநிதித்துவப் படுத்த முடியும்?
+++++++++++
கருத்துகள்
இந்தித்திணிப்பால் ஏற்பட்ட வாட்டும் நினைவுகளை இக்காலத்து மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் நன்றாக எழுதியுள்ளீர்கள். எனினும் இதில் குறிப்பிட்டவாறு முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்த் தளையிடப்படவில்லை. கலைஞர,முரசொலி மாறன் முதலானோர் இ.பா.சட்டத்தின் கீழ்ச் சிறையிலடைக்கப்பட்டனர். பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழக அரசால் இந்தி எதிர்ப்புப் போரை வழி நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். கட்சிகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழக மாணவர்கள் அவருக்குக் கட்டுப்பட்டதாலும் மாணவர்கள் போராட்டத்தைக் கட்சித் தலைவர்களால் நிறுத்த முடியவில்லை என்பதாலும் இந்தி எதிர்ப்புப் போரைத் தமிழ்ப் புலவர்கள் பார்த்துக் கொள்வார்கள், நீங்கள் போராட்டத்தை நிறுத்துங்கள் எனக் காவல்துறை மிரட்டலுக்கிணங்க அவர் செயல்படாமையால் முதலில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் தமிழ் உரிமைப் பெருநடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்ட பொழுது இ.பா.சட்டத்தின் கீழ்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். உலகிலேயே மொழிப்போருக்காகக் கைது செய்யப்பெற்ற முதல் பேராசிரியர் செந்தமிழ்ச் செம்மல் சி.இலக்குவனார்தாம்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக