சென்னை, ஏப். 8: பருப்பு விலையைக் கட்டுப்படுத்த இறக்குமதியை நம்பியிருக்காமல், உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க வழிகாண வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தார்.விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க 10 முதல்வர்கள் அடங்கிய உயர்நிலைக்குழுவை 2010 பிப்ரவரியில், பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார்.இந்த உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது:அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய}மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்து வந்தாலும், அது சீரான நிலையில் இல்லை. மீண்டும் விலை உயரும் நிலையே நீடிக்கிறது.உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்க நீண்ட கால திட்டத்தை வகுக்க உயர்நிலைக் குழு கவனம் செலுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்துவது குறுகிய காலத் திட்டமாக இருக்க வேண்டும்.உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பதாலும், இறக்குமதியை நம்பியிருப்பதாலும் விலை உயர்வு சீரற்ற நிலையில் உள்ளது. எனவே, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவது தற்போதைய அவசியமான தேவையாகிறது.பருப்பு பொருள்களை ஊடு பயிராக இல்லாமல், பிரதான பயிராக பயிர் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தலைமையிலான சிறப்புக் குழுவினர் இந்த முறையில் உற்பத்தியைப் பெருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் பெறும் குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எனவே உரிய நியாயமான விலையை நிர்ணயிக்கும் பட்சத்தில், விவசாயிகளை பருப்பு பொருள்களை பயிரிட ஊக்கப்படுத்த முடியும்.மழை பெய்யும் இடங்களில் பருப்பு வகைப் பொருள்களை விளைவிக்க சிறப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.பொது விநியோகத் திட்டத்தைப் பலப்படுத்த யோசனை: பொது விநியோகத் திட்டத்தின்படி வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவை கூடுதலாக தேவையான மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் தேவையான உணவுப் பொருள்கள் கையிருப்பு சாத்தியமாகும்.மத்திய அரசின் மானியத் திட்டத்தின்படி பருப்பு பொருள் இறக்குமதி செய்யப்பட்டு மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்யப்படுவது சீரற்ற நிலையில் உள்ளது. மாதந்தோறும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பருப்புப் பொருள்களின் அளவை உறுதி செய்ய வேண்டும்.எனவே, இறக்குமதி செய்யப்படும் பருப்பு பொருள்களை மத்திய அரசு சேமித்து வைக்க வேண்டும். வெளிச்சந்தையில் பருப்பு அதிக விலைக்கு விற்பனை செய்யும் நேரத்தில், மத்திய அரசு தன் கையிருப்பில் உள்ள பருப்பு பொருள்களை சந்தையில் வெளியிட வேண்டும்.போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க பயோ மெட்ரிக் அடையாள முறையைக் கொண்டுவர வேண்டும். போலி ரசீது முறையை முற்றிலும் ஒழிக்க ஸ்மார்ட் கார்டுடன் கூடிய பில் இயந்திரங்களைக் கொண்டுவர வேண்டும்.பொது விநியோகத் திட்ட நிர்வாகத்தில் மின் ஆளுமையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இவற்றின் மூலம் பொது விநியோகத் திட்டத்தை சிறப்பானதாக உருவாக்க முடியும்.மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை, பயோ மெட்ரிக் விவரங்களாக பதிவு செய்ய இயக்குநர் ஜெனரல் திட்டமிட்டுள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவது அவசியமாகிறது.பயோ மெட்ரிக் முறையில் தேசிய அடையாள எண் வழங்கும் பணியில் மாநில அரசுகள் மற்றும் கணக்கெடுப்பு துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் தவறான தகவல் இடம்பெறுவதை தடுக்க முடியும் என்ற அறிவுறுத்தலை மத்திய அரசு வெளியிட வேண்டும். இதற்கான நிதியை மாநில அரசு பகிர்ந்து கொள்ளும். இந்த முறை மூலம் பொது விநியோகத் திட்ட நிர்வாகத்தை மேம்படுத்திட முடியும்.மாநிலங்கள் உணவுப் பொருள் கிடங்கு ஏற்படுத்த மத்திய அரசு 50 சதவீதம் மானியத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல யோசனைகளை தெரிவித்தார்.
கருத்துக்கள்
முதல்வரகள் மாநாட்டில் அவர் சார்பில் யார கலந்து கொண்டாலும் முதல்வர் கருத்து அல்லது முதல்வர் அறிக்கை என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழிய உணர்வைக் காட்டுவதற்காகத் தினமணி மரபு மீறிய தலைப்பு வெளியிடுவது தவறு. ... பல யோசனைகளைத் தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளதும் காலடி கழுவும் வேலையே! தினமணி செய்ய வேண்டா இச் சேவையே!
முதல்வரகள் மாநாட்டில் அவர் சார்பில் யார கலந்து கொண்டாலும் முதல்வர் கருத்து அல்லது முதல்வர் அறிக்கை என்றுதான் குறிப்பிட வேண்டும். ஊழிய உணர்வைக் காட்டுவதற்காகத் தினமணி மரபு மீறிய தலைப்பு வெளியிடுவது தவறு. ... பல யோசனைகளைத் தெரிவித்தார் எனக்குறிப்பிட்டுள்ளதும் காலடி கழுவும் வேலையே! தினமணி செய்ய வேண்டா இச் சேவையே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/9/2010 3:49:00 AM