சென்னை, ஏப்.7: ""தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் முதன்முதலாக சேர்க்கப்பட்ட குழந்தை இப்போது பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறது'' என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வி.பி. கலைராஜன், ""1992-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது. அதனை உலகமே வரவேற்றது. இத்திட்டத்தின் கீழ் 1992-96-ம் ஆண்டு வரை 136 குழந்தைகளும், 2001-06-ஆம் ஆண்டு வரை 2,659 குழந்தைகளும் பெறப்பட்டன. ஆனால் இந்த திட்டம் இப்போது சரிவர செயல்படுத்தப்படவில்லை'' என்று குற்றம்சாட்டினார்.அதற்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியது:தொட்டில் குழந்தைகள் திட்டம் திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தத்து கொடுக்கப்படுகின்றன. மீதமுள்ள குழந்தைகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு காப்பகங்களில் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது (1992) முதன் முதலாக தொட்டிலில் பெறப்பட்ட குழந்தை இப்போது பொறியியல் கல்லூரியில் பி.இ. (எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்) படித்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
கருத்துக்கள்
பாராட்டுகள்! திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆட்சியினருக்கும் தொடர்ந்து நிறைவேற்றும்ஆட்சியினருக்கும் பாராட்டுகள்! இனிமேல் தொட்டில் குழந்தை என்னும் நிலை வராத நன்னிலை உருவாட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 3:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 4/8/2010 3:08:00 AM