'வீட்டுக்கு அடங்காதது ஊருக்கு அடங்கும்' என்று சொல்வார்கள். பெற்ற பிள்ளைகளைப் பார்த்து தாய் தந்தையர் சொல்லும் பழமொழி இப்போது டாக்டர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.வேலூர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 8 டாக்டர்கள், சென்னையிலிருந்து தினமும் காலையில் ரயிலில் வேலூருக்கு வந்து, மருத்துவமனையில் கையெழுத்துப் போட்டுவிட்டு, பகல் 11.30 மணிக்கு சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வீடு சென்றுவிடுவது வழக்கமாக இருந்து வந்ததைக் கண்டு பொறுக்க முடியாத பொதுமக்கள் சிலர், இந்த டாக்டர்களை ரயில்நிலையத்தில் முற்றுகையிட்டனர். இவர்களில் 5 பேர் தப்பிவிட, மூன்று பேர் மட்டும் சிக்கினார்கள். இவர்களிடம் தற்போது 'விளக்கம்' கேட்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்குச் சங்கம் இருப்பதால், இவர்கள் மீது எடுத்த எடுப்பில் நடவடிக்கை மேற்கொள்ள அரசு தயங்குகிறது. ஏனென்றால், உடனடியாகப் போராட்டம், வேலைநிறுத்தம் என்று இறங்கிவிடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த நடவடிக்கையை கடிதோச்சி மெல்ல எறியும் உத்தியில்தான் அரசு நடத்தும் என்பது தெரிந்ததுதான்.ஆனால், இப்போது சிக்கியுள்ள 3 பேர் மட்டும்தான் இத்தகைய பணிநேரத்தில் வீடு திரும்பும் டாக்டர்கள் என்பதாக நிலைமை இல்லை என்பதும், அரசு மருத்துவமனைகளில் இருக்கும் 75 சதவீத டாக்டர்கள் இதைத்தான்- அதாவது வேலை நேரத்தில் வீடுபோய்ச் சேருவதை- ஒரு நிரந்தர வேலையாகச் செய்து வருகிறார்கள் என்பதும் சத்தியமான உண்மை என்பதால், சங்கங்களுக்குப் பயந்துகொண்டு அரசு நடவடிக்கை எடுப்பதைக் காலதாமதம் செய்தால், அரசு மருத்துவமனைகளின் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.இத்தகைய சூழல் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நடைபெறுகிறது என்றும், இதைத் தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், அரசியல் நெருக்குதல் காரணமாக இவற்றைச் சகித்துக்கொள்ள நேர்கிறது என்றும் அந்தந்த மருத்துவமனைத் தலைவர்களே வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளும் நிலைமை, மருத்துவத் துறைக்கு ஆரோக்கியமானது அல்ல.தற்போது சிறைபிடிக்கப்பட்ட டாக்டர்கள் குறித்து ஏற்கெனவே புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓர் ஆங்கில நாளேடு, அப்போது வேலூர் அரசு மருத்துவமனைத் தலைவியாக இருந்தவரிடம் விளக்கம் கேட்டபோது, மருத்துவமனையில் பணிபுரியும் அனைவருக்கும் கைரேகை பதிவேடு அமைத்து, டாக்டர்கள் வரும்போதும், போகும்போதும் நேரத்தை உறுதிப்படுத்தப் போவதாகக் கூறினார். அதற்கு மருத்துவர்கள் காட்டிய எதிர்ப்பு கொஞ்சமானதல்ல. கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அத்தகைய கைரேகை பதிவேட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அது ஏதோ சுயகெüரவம் தொடர்பான சிக்கல் என்பதாக அப்போது தோன்றினாலும், ஏமாற்றுகிற டாக்டர்களுக்கு தோள் கொடுக்கும் போராட்டமாகவே அமைந்திருந்தது என்பதை இப்போது உணர முடிகிறது.தவறுக்குத் துணை போவதும், தவறு செய்தவர்களைக் காப்பாற்றுவதும் சங்கங்களின் கடமை என்கிற நிலைமை ஏற்பட்டதால்தான் வர்க்கப்போராட்டம் வலுவிழந்து மக்களின் ஆதரவையும் இழந்தது என்பதற்கு இது ஓர் உதாரணம்.பதவி உயர்வு பெறும்போது, இடமாறுதல் பெற்றே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் உள்ளதால், மிக அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு, ஆனால் உறைவிடத்தை மாற்றாமல் பொய் முகவரி கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்பது இப்போது தெளிவாகியிருக்கிறது. சென்னைக்கு அருகில் உள்ள வேலூர் மற்றும் செங்கல்பட்டு, சேலம் அருகில் உள்ள தருமபுரி, மதுரை என்றால் நெல்லை மற்றும் தேனி ஆகிய மருத்துவமனைகளுக்குத் தினமும் வந்து போய்க் கொண்டிருக்கும் டாக்டர்களின் எண்ணிக்கை 75 சதவீதத்துக்கும் அதிகம். சிலர் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளைப் பெற்றுக் கொண்டாலும், அதில் தாங்கள் குடியிருக்காமல், தங்களின் கீழ் பணியாற்றும் செவிலியர் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை உள்வாடகைக்கு அமர்த்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.இந்த மருத்துவர்கள் அதே ஊரில் தங்கியிருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையான நோக்கமே, சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு எந்த நேரத்திலும் பாதிப்பு தீவிரம் அடையலாம். அப்போது உடனடியாக இந்த டாக்டர்கள் வந்து, அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்காகத்தான், அதே ஊரில் தங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. வீடுகள் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த மருத்துவர்கள், வெறும் கையெழுத்துப்போட மட்டுமே மருத்துவமனைக்கு வருவார்கள் என்றால், இவர்கள் பணியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன? மத்திய மருத்துவக் குழுமத்தின் ஆய்வுக் குழு வரும்போது, மருத்துவக் கல்லூரி அங்கீகாரத்துக்காக வேண்டி, வெறும் எண்ணிக்கை கணக்குக்காக மட்டுமே இந்தப் பேராசிரியர்கள் சகித்துக்கொள்ளப்படுகிறார்கள் என்றால் அதைவிட அவமானம் தமிழக அரசுக்கு வேறில்லை.அனைத்து மருத்துவமனைகளிலும் கைரேகைப் பதிவு வருகைப் பதிவேடு முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வருவதையும், பொய்முகவரி கொடுத்து தங்கள் சொந்த கிளீனிக்குக்கு தினமும் போய் வந்து கொண்டிருக்கும் பேராசிரியர்கள், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் எந்தச் சங்கத்தின் அச்சுறுத்தலையும் பொருள்படுத்தாமல் அரசு மேற்கொண்டால், மக்கள் மத்தியில் ஆரோக்கியமான நன்மதிப்பைத் தமிழக அரசு பெறும்.உள்ளூரிலேயே தங்கும் அரசு மருத்துவமனை டாக்டர்களும் கண்காணிக்கப்பட வேண்டியவர்களே. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, கிளீனிக் வந்து பார்க்கும்படி செய்து, அங்கே ஒரு நோயாளிக்கு ரூ.50, ரூ.100 என்று வசூலிப்பதும், மருத்துவமனையில் தனக்கு அளிக்கப்பட்ட அதே கடை நிலை ஊழியரைத் தனது கிளீனிக்கிலும் நிறுத்திக்கொண்டு, தினமும் ஊதியம் கொடுப்பதுமான நிலைமை எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது.ஊழலை ஒழிக்க வேண்டும், அரசு நிர்வாகத்தில் காணப்படும் திறமையின்மை அகற்றப்பட வேண்டும் என்று கோபப்படும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் உணர வேண்டியது என்ன தெரியுமா? லஞ்சம், ஊழல், நிர்வாக மெத்தனம் இவையெல்லாம் படிக்காத, கிராமப்புற மக்களாலோ வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை பாட்டாளி மக்களாலோ நடத்தப்படவில்லை. படித்தவர்கள்மட்டுமேதான் இதில் ஈடுபடுகிறார்கள். படித்தவன் தவறு செய்தால் என்ன நேரும் என்பதை மகாகவி பாரதியிடம் கேளுங்கள், பதில் கிடைக்கும்!
கருத்துக்கள்
ஏதோ இன்று நேற்று மட்டும் வேலூரில் மட்டும் நடைபெற்ற நிகழ்வன்று. காலங்காலமாக எல்லா நகர்களிலும் ஊர்களிலும் நடைபெறும் முறைகேடே! கூட்டுக் களவாணிகள் ஒருவரை ஒருவர் காட்டிக கொடுப்பதில்லை.எனவே, அடிப்படைக் குறைகளைக் களையும் வகையில் மாற்றம் தேவை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/9/2010 4:15:00 AM
4/9/2010 4:15:00 AM