புதன், 7 ஏப்ரல், 2010

'சோம்பல்,​​ உளவுத்துறையின் மெத்தனம்,​​ முட்டாள்தனமான உத்திகளால் உயிரிழப்பு'



புதுதில்லி,ஏப்.6: காடுகளுக்குச் சென்று நக்ஸலைட்டுகளை எதிர்கொள்ளும் இப்போதைய உத்தி படுமுட்டாள்தனமானது என்று கே.பி.எஸ்.​ கில் (படம்),​​ பிரகாஷ் சிங் போன்ற பாதுகாப்புப்படை நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.​ நக்ஸலைட்டுகளை ஒழிக்க அனுப்பப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் மாநிலப் போலீஸôரும் அவர்களால் குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்படும் அவலத்தைக் காண சகிக்க முடியாமல் இரு நிபுணர்களும் பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.​ மத்திய,​​ மாநில போலீஸ் படைகளின் மெத்தனம்,​​ நக்ஸலைட்டுகளின் படை பலம்,​​ நடமாட்டம் போன்றவற்றை உளவுப்பிரிவு மூலம் தொடர்ந்து கண்காணிக்கத் தவறியமை,​​ போதிய பயிற்சி இல்லாமை ஆகிய காரணங்களாலேயே போலீஸ் படையினர் இப்படி அலை அலையாக பலியாகின்றனர் என்று இருவரும் வேதனை தெரிவித்தனர்.​ பஞ்சாபில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் வெற்றி பெற்ற கே.பி.எஸ்.​ கில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:​ நக்ஸல்களைத் தேடி காடுகளுக்குள் சென்று அவர்களை அழிக்க முற்படும் இந்த உத்தி உளுத்துப்போன ஒன்று.​ அந்தக்கால போலீஸ் படை பயிற்சிப் புத்தகத்தைப் படித்துவிட்டு எவரோ,​​ இதை இந்த நவீன காலத்தில் கையாண்டு தங்களுடைய முட்டாள்தனத்துக்கு நூற்றுக்கணக்கானவர்களை பலியாக்கிக் கொண்டிருக்கின்றனர்.​ துணை நிலை ராணுவப் படையினரும் தலைமைக்குக் கட்டுப்பட்டு ஏன்,​​ எதற்கு என்று எந்தக் கேள்வியும் எழுப்பாமல் அவர்கள் சொல்கிற பாணியில் செயல்பட்டு தங்களை பலியாக்கிக் கொள்கின்றனர்.​ இந்தப் பசுமை வேட்டையில் யார் வேட்டையாடுகின்றனர்,​​ யார் வேட்டையாடப்படுகின்றனர் என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சுகிறது.​ தாங்கள் தேடுதல் வேட்டை நடத்தும் காடு எப்படிப்பட்டது,​​ எங்கே குன்று இருக்கிறது,​​ எங்கே ஓடை இருக்கிறது,​​ எந்தப்பாதை எந்தப் பகுதிக்குக் கொண்டு செல்கிறது என்று எதுவுமே தெரியாமல் போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து கொண்டால் நக்ஸல்களை எப்படி வேட்டையாடிவிட முடியும்?​ அந்த வேன்களின் வடிவமைப்பே,​​ கண்ணிவெடியில் சிக்கினால் கூண்டோடு கைலாசமாக எல்லோரும் ஒரே சமயத்தில் பரலோகம் போகத்தான் தகுதியானதாக இருக்கிறது.​ இந்த நிலையில் வேனில் இருப்பவர்கள் எப்படி நக்ஸல்களுடன் சண்டையிட முடியும்.​ நக்ஸல்களிடம் இருக்கும் செயற்கைக்கோள் தொலைபேசி,​​ நவீன வாக்கி டாக்கிகள்,​​ ஏ.கே.​ 47 ரகத்துக்குக் குறைவில்லாத நவீன துப்பாக்கிகள்,​​ கையெறி குண்டுகள்,​​ மிகப்பெரிய போலீஸ் வேனைக்கூட தூள்தூளாக்கக்கூடிய கண்ணிவெடிகள்,​​ ராக்கெட் லாஞ்சர்கள் போன்றவற்றுக்கு நிகரான ஆயுதமா மத்திய ரிசர்வ் போலீஸôரிடம் இருக்கிறது.​ நக்ஸல்களிடம் இரவிலும் பார்க்க உதவும் பைனாகுலர்கள் போன்ற சாதனங்கள் உள்ளன.​ அத்துடன் கிராமப்பகுதிகளில் அவர்களுடைய ஆள்கள் சாதாரண உடையில் நடமாடிக்கொண்டு போலீஸôரின் நடமாட்டம் குறித்துத் தலைமைக்குத் தகவல் அனுப்புகின்றனர்.​ போலீஸ் உளவாளிகள் அப்படிச் செயல்படுகின்றனரா?​ இரண்டு பெரிய குன்றுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் வேன் வரும்வரை காத்திருந்து 200 அல்லது 300 பேராகச் சூழ்ந்து நின்று நக்ஸல்கள் கொல்லும் அளவுக்கு நிலைமை இருப்பதிலிருந்தே போலீஸôரின் அவல நிலையை உணரலாம் என்றார் கில்.​ ​​ பிரகாஷ் சிங் ​(பி.எஸ்.எப்.​ முன்னாள் தலைமை இயக்குநர்):​ மத்திய,​​ மாநிலப் போலீஸ் படையின் உளவுப்பிரிவு செயல்படவில்லை என்பதையே இந்தத் தாக்குதல் நிரூபிக்கிறது.​ காடுகளில் படைகளைப் பணியில் ஈடுபடுத்தினால் அதற்கு முன்னும் பின்னும் சிறு குழுக்கள் காவல்,​​ கண்காணிப்புக்கு அனுப்பப்பட வேண்டும்.​ காடுகளிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும்.​ காடுகளில் உள்ள பாதைகளை நன்கு அறிந்த உள்ளூர் மக்களை வழிகாட்ட அழைத்துச் செல்ல வேண்டும்.​ தகவல் தொடர்பு சாதனங்களால் ஆங்காங்கே ஆள்கள் இருந்துகொண்டு பாதைக்கு சேதம் இல்லை என்பதை படைக்குச் சொல்ல வேண்டும்.​ இவையெல்லாம் கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறக்கவிட்டிருப்பதையே இந்தத் தாக்குதல் காட்டுகிறது.​ இது மத்திய,​​ மாநில போலீஸ் படை அதிகாரிகளின் திறமையின்மையையே காட்டுகிறது.​ மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் படைப்பிரிவுகளை அதிகரித்துக் கொண்டே போனால் மட்டும் போதாது,​​ அவர்களுக்கு நல்ல பயிற்சிகளை அளிக்க வேண்டும்,​​ ஆயுதங்கள்,​​ சாதனங்கள்,​​ வாகனங்கள் என்று எல்லாவற்றிலும் புதியதை வாங்கித் தர வேண்டும்.​ காட்டில் வேனில் போலீஸ்காரர்கள் வந்தால் பயந்து ஓடுவதற்கு நக்ஸல்கள் சாதாரண கிரிமினல்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துக்கள்

எங்களுக்கெல்லாம் பிற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு வஞ்சகமாகக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்யததான் தெரியுமே தவிர நீங்கள் கூறுவதுபோல் பாதுகாப்பு முன் நடவடிக்கை எதுவும் தெரியாது. வெளிநாட்டினருக்கு அவர்கள் பாதுகாப்பாக இனப்படுகொலை செய்ய உதவத் தெரியுமே தவிர உள்நாட்டுப் பாதுகபாப்பு குறித்து ஒன்றும் தெரியாது. இரங்கல் தீரு்மானம் போடத் தெரியுமே தவிர உங்களுக்கு என்ன மறுமொழி அளிப்பது என்று தெரியாது. ஆனால், உங்களை அடையாளம் காட்டுவதற்காக இப்படிப் பேசுகிறீர்கள் என்று சொல்லி உங்களைநாட்டுப் பகைவராக - தேசத் துரோகியாக- த்திரித்துச் சொல்ல எங்களால் முடியும்.

காங்கிரசு அரசின் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 4:32:00 AM

STUPID RULERS, INEFFICIENT OFFICIALS AND SELFISH POPULATION ARE THE CAUSES OF ALL THE PEOBLEMS IN THIS COUNTRY.

By Paris EJILAN
4/7/2010 1:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக