செவ்வாய், 6 ஏப்ரல், 2010

தலையங்கம்: எப்படியும் வாழ்வதா...?



வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதில் தவறு இல்லை, திருமணத்துக்கு முன்பே உடல் உறவில் ஈடுபடுவதில் தவறு இல்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகள் தெரிவித்தபோது கோடிக்கணக்கான நெஞ்சங்கள் பதறின; இதை ஜாதி, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பலரின் குமுறலிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் அறிய முடிகிறது. ராமசேனை என்ற அமைப்பின் தலைவரான பிரமோத் முத்தாலிக்கின் கருத்துகளையும் செயல்களையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் இந்தப் பிரச்னையில் அவர் சுட்டிக்காட்டிய ஒரு விஷயம் அனைவராலும் கூர்ந்து கவனிக்கத்தக்கது.ஒரு வீட்டில் விபசாரம் நடக்கிறது என்ற தகவல் கிடைத்து போலீஸ்காரர்கள் அவர்களைக் கைது செய்யச் சென்றால், ""வயது வந்த நாங்கள் ஒரே இடத்தில் தனித்து இருப்பதும், உடல் உறவு கொள்வதும் சட்டப்படி செல்லத்தக்கதே'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகளையே அவர்கள் திருப்பிச் சொன்னால் நடவடிக்கை எடுக்க முடியுமா? உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதே அதிரடி பாணியில், ""இங்கே வந்தீர்களே எங்கள் செய்கையால் உங்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, உங்கள் வீட்டில் யாராவது இதே போல நடந்துகொள்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா?'' என்று கேட்டால் போலீஸ்காரர்களால் என்ன பதிலைக் கூற முடியும்?அரசு வழக்கறிஞரைப் பார்த்து அந்த நீதிபதிகள் கேட்ட கேள்விகளை, அதே வழக்கறிஞர் மாற்றிக் கேட்டிருந்தால் நீதிபதிகளின் நிலை என்ன ஆகியிருக்கும்? உங்கள் மகனுக்கோ மகளுக்கோ வரன் பார்க்கும்போது, இப்படி திருமணத்துக்கு முன்னால் இன்னொருவருடன் சேர்ந்திருந்தால் பரவாயில்லை என்று திருமணம் செய்வீர்களா, உடலுறவு கொண்டிருந்தாலும் பரவாயில்லை என்று மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டிருந்தால்?திருமணத்துக்கு முன்பே உடலுறவு கொள்ளும் இளைஞர்கள் யுவதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அவ்வப்போது பத்திரிகைகளில் ""சிறப்புச் செய்திகள்'' வருவது உண்டு. இது ஏதோ சமுதாய அக்கறையில் வெளியிடப்படுவதாக யாரும் கருதிவிடக்கூடாது. இந்தக் கட்டுரைகளே, அப்படி முறைதவறி நடக்க அஞ்சும் இளைய தலைமுறையை மனதளவில் தயார்படுத்த, பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் பணம் கொடுத்து எழுத வைக்கும் வியாபார உத்தி என்கிறார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். கருத்தடை மாத்திரைகள், ஆண் உறை, பெண் உறை போன்ற சாதனங்கள் இவற்றின் விற்பனை மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரித்து இதற்காகவே செயல்படுகின்றன என்பது அப்பாவிகளான நம் நாட்டு மக்கள் அறியாத அப்பட்டமான உண்மை. தங்களுடைய ""தொழிலுக்கு'' உற்ற களத்தை பன்னாட்டு நிறுவனங்கள் தயார் செய்யத்தான் இந்தச் செய்திகளும் கட்டுரைகளும். சிவப்பழகி, கண் அழகி, கால் அழகி என்ற அழகிப் போட்டிகள் எல்லாம்கூட இந்த வியாபார உத்தியின் பிரிக்க முடியாத அங்கமே. ஆங்கில வார இதழ்களிலும் மாநில மொழி வாரப் பத்திரிகைகளிலும் முறை வைத்துக் கொண்டு இப்படி அந்தரங்க விஷயங்களை ஏதோ அறிவியல்பூர்வமாக ஆய்ந்து எழுதுவதாக எழுத்து விபசாரம் செய்து இளைய தலைமுறையின் எதிர்காலத்தை மட்டுமல்ல, பாரதத் திருநாட்டின் வருங்காலத்தையும், தலைமுறை தலைமுறையாக நாம் கடைப்பிடித்து வந்த உயரிய பண்புகளையும் தகர்த்தெறியத் தலைப்படுகிறார்கள்.கருத்தடை மாத்திரைகள், மோகத்தை அதிகப்படுத்தும் வீரிய சக்தி மாத்திரைகள், (லேகியங்கள்), உள்ளாடைகள், மாதவிடாய்க்கால சானிடரி நாப்கின்கள் போன்றவற்றின் விளம்பரங்களுக்காக மட்டும் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவாகின்றன. வரவோ அவற்றைப் போல பல மடங்கு. சொல்ல நா கூசுகிறது என்றாலும் தனியார் தொலைக்காட்சிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இரவு நேர சிறப்புக் காட்சிகளும் இந்தத் தொழிலுக்கு வளம் சேர்க்கத்தான் என்பதே உண்மை. மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ஏளனமாகக் குறிப்பிடப்படும் வேசைத்தனமே இன்று காட்சி ஊடகங்களில் அப்பட்டமாக வெளிப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் நீதிபதிகளின் கருத்து நெஞ்சங்களில் தீயை வைத்துவிட்டது என்றால் மிகையில்லை. உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னால் தரப்பட்ட ஒரு தீர்ப்பும் இதே போல சிந்தனையாளர்களின் கோபத்துக்கு ஆளானது. ஆனால் அந்தத் தீர்ப்பு இன்றுவரை திருத்தப்படவே இல்லை என்பதே உண்மை.அதாவது தில்லியில் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி கரும்புகையைக் கக்கும் சில தொழில் நிறுவனங்கள் மேட்டுக்குடிகளின் இல்லங்கள் இருந்த பகுதியில் அமைந்திருந்தன. அதாவது தொழிற்சாலைகளுக்கு அருகில் வீடுகளைக் கட்டிக்கொண்டு மேட்டுக்குடிகள்தான் பின்னாளில் குடியேறினார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய செல்வாக்கு காரணமாக, காற்றில் மாசு அதிகரித்துவிட்டதால் அந்த ஆலைகளை வேறு இடத்துக்குக் கொண்டு போய் நிறுவ வேண்டும் என்று வழக்குத் தொடுக்க வைத்து அதில் வெற்றியும் பெற்றார்கள்.அந்தத் தீர்ப்பு வந்தபோது சிந்தனையாளர்கள் எழுப்பிய கேள்விகள் மூன்று. இந்த ஆலைகளிலிருந்து இந்த அளவுக்கு நச்சுப்புகை வந்தால் நகரின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அது மக்களைப் பாதிக்குமே, நச்சுத்தன்மையைக் குறைக்க வேண்டும் அல்லது உற்பத்தியையே கைவிட வேண்டும் என்று ஏன் உத்தரவிடவில்லை? தில்லி மாநகரின் மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றச் சொல்லி உத்தரவிடுகிறீர்களே அங்கு வசிக்கும் ஏழைகளின் உயிர் என்ன விலை மலிவானதா?ஆலையால் பாதிக்கப்படும் மக்கள் ஒரு பக்கம் கிடக்கட்டும், இங்கேயே மூன்று ஷிப்டுகளிலும் வேலை பார்க்கின்றனரே நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களுடைய உடல் நலம் என்ன ஆகும், அவர்களைக் காப்பாற்ற ஏதாவது உத்தரவில் கூறியிருக்கிறீர்களா என்று. இந்தக் கேள்விகளுக்கு இன்று வரை பதில் இல்லை.கற்பாம், மானமாம்... என்று ஏளனம் செய்யும் நவநாகரிக யுகத்தில், சேர்ந்து வாழ்தல் தவறல்ல என்று கருத்துக் கூறியிருக்கிறது நீதித்துறை. நீதியாம், நியாயமாம்... என்று மனம் நொந்து முணுமுணுப்பதல்லாமல் நமக்கு வேறு வழியேது...? பன்னாட்டு நிறுவனங்களின் ஆக்டோபஸ் வியாபாரப்பிடி மேலும் மேலும் இறுகுவதன் இன்னொரு அடையாளம்தான் இந்தத் தீர்ப்பு என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை... எப்படியும் வாழலாம் என்கிற நிலைமை ஏற்பட்டால் அதன் முதல் பலி நீதித்துறையாகத்தான் இருக்கும் என்பதை நமது நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்!
கருத்துக்கள்

செய்தி வந்த அன்றே தினமணியில் இத்தகைய ஆசிரியவுரையை எதிர்பார்த்தேன். ஒரு வேளை எழுத்தி்ல் பொங்கும் கனலைத் தணிப்பதற்காகக் காலத்தாழ்ச்சியோ! எப்படியிருப்பினும் துணிவாகச் சில வினாக்களை நீதிபதிகளிடம் எழுப்பியுள்ளீர்கள். கொலை, கொள்ளைகளைப் பாதுகாப்பாகச் செய்வது எப்படி என்று காவல்துறை விளம்பரப்படுத்துவதுபோல்தான் ஏப்பு(எயிட்சு) விளம்பரங்கள் வருகின்றன.எனவே,அழகிப்போட்டி முதலான வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுத வேண்டியவற்றைப் பொருத்தமாக இதில் இணைத்து அருமையான தலையங்கம் அளித்துள்ளமைக்குப் பாராட்டுகள். நல்லொழுக்கத்தை வலியுறுத்தியமைக்கும் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/6/2010 3:23:00 AM

You are absolutely right.

By Chrish
4/6/2010 3:14:00 AM

I am not accpeting your view. It is an individual right to mastrubate and 2 willing people to have sex. Discipline should be with the individual and they cannot coerced. Freedom has got its price, it is one of those. Think about western nations how they have advanced by having freedom and more open about relationships. They marry widows, divorcees and women or men with kids without thinking twice. Can a same thing happen here in India without we being more open about sex ?. Being free with sexual relationships will give more power to women as they will not be singled out or victimized. This empowers women to choose their partner. Right now men have too much say and power in a relationship. Sex before marriage is good as women and men know whether they can perform or not ?. This will reduce stress afer marriage

By Sunitha
4/6/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக