திங்கள், 5 ஏப்ரல், 2010

2 ஆண்டுகளில் நக்சல்களுக்கு முற்றுப்புள்ளி: ப. சிதம்பரம்



சென்னை, ஏப்.4: இன்னும் 2 ஆண்டுகளில் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த ஆவடியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தனி நாடு கேட்கும் சில கும்பல்களால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனைச் சமாளிக்க இவ்வளவு பெரிய தொகையை செலவிட வேண்டியுள்ளது.
நக்சலைட்டுகள் தங்களை ஏழைகளின் நண்பர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். துணிவிருந்தால் அவர்கள் தேர்தலைச் சந்திக்கட்டும். பள்ளிக் கட்டடங்களைத் தகர்ப்பவர்கள், ரயிலைக் கடத்துபவர்கள், ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பவர்கள் எப்படி ஏழைகளின் நண்பர்களாக இருக்க முடியும்?
அவர்களுக்கு மக்களின் மீது உண்மையில் அக்கறை இருக்குமானால் வன்செயல்களில் ஈடுபடமாட்டார்கள். இந்தியாவின் முதல் எதிரி நக்சலைட்டுகள்தான். அவர்களை ஒழித்துக்கட்ட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் நக்சலைட்டுகள் முற்றிலும் அழித்து ஒழிக்கப்படுவார்கள். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நான் மேற்கு வங்க மாநிலத்தில் நக்சலைட்டுகள் நிறைந்த லால்கர் பகுதிக்குச் சென்றிருந்தேன். 33 ஆண்டுகள் இடதுசாரிகளின் ஆட்சியில் உள்ள அந்த மாநிலத்தில் எங்கும் வறுமை தாண்டவமாடுகிறது. அங்கு இன்னும் கை ரிக்ஷா உள்ளது.
நக்சலைட்டுகள் நிறைந்த மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் 21 எம்.எல்.ஏ. தொகுதிகள் உள்ளன. 21 தொகுதிகள் கொண்ட மாவட்டத்தை ஒரு மாவட்ட ஆட்சியர், ஒரு எஸ்.பி. எப்படி நிர்வகிக்க முடியும்? ஏன் மாவட்டத்தைப் பிரிக்கவில்லை என்றால், பணம் இல்லை என்கிறார்கள். இடதுசாரிகளின் மோசமான ஆட்சியை 33 ஆண்டுகள் மக்கள் எப்படி சகித்துக் கொண்டார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
2 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பேசிய மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவத்தையோ, துணை ராணுவத்தையோ பயன்படுத்தக் கூடாது என்றார்கள். ஆனால் இன்று அவர்களுக்கு ஆபத்து என்றதும் தீவிரவாதத்தை ஒடுக்க ராணுவத்தைப் பயன்படுத்துமாறு மேற்கு வங்க முதல்வர் எனக்கு உபதேசம் செய்கிறார். காலம் கடந்தாவது அவருக்கு ஞானம் வந்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்திய அரசின் சாதனைகள்: பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு, மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு என்ற இந்தியாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய சட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், அனைவருக்கும் வேலை உறுதித் திட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை காங்கிரஸ் அரசின் மிகப்பெரிய சாதனைகள். அடுத்து உணவுக்கு உரிமை அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற உள்ளது. அதன்படி கிலோ ரூ. 3 விலையில் அனைவருக்கும் 25 கிலோ அரிசி வழங்கப்படும்.
மத்திய பட்ஜெட்டில் 5 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ. 3,75,000 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 120 கோடி மக்களைக் கொண்ட நம்நாட்டுக்குத் தேவையான உணவுப்பொருள்களை நாம் இறக்குமதி செய்வது சாத்தியமல்ல. எனவேதான் விவசாயக் கடன் வழங்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கட்டாயம் நிறைவேறும்: நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் கட்டாயம் நிறைவேறும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனையையும் மத்திய அரசு சமாளிக்கும்.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் 181 பெண்கள் எம்.பி.க்களாக அமர்ந்திருக்கும் காட்சியை நாம் கட்டாயம் பார்க்கப் போகிறோம் என்றார் சிதம்பரம்.

கருத்துக்கள்

இந்தியாவின் முதல் எதிரி நக்சலைட்டுகள் எனக் கூறிக் கொண்டே அவர்களுக்கு எதிராகப் படைத்துறை (இராணுவம்) பயன்படுத்த மாட்டாது என்றும் உள்துறை அமைச்சர் கூறுகிறார். அவ்வாறாயின் இலங்கையில் நாட்டுவிடுதலைக்காகப் போரிட்ட மக்கள் படையினருக்கு எதிராக இலங்கை அரசு தன் நாட்டு முப்டையையும் பயன்படுத்தவும் அதற்குத் தூண்டுகோலாக விளங்கவும் உலக நாடுகள் பலவற்றின் படையுதவி கிடைக்கவும் காரணமாகவும் தன் முப்படையுதவியையும் அளித்துக் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்கள் சாகடி்க்கப்படவும் காரணமாகவும் இந்தியா இருப்பது ஏன்? இந்தியம் என்றாலே இரட்டை அளவு கோல் என்பதை இதிலும் மெய்ப்பிக்கின்றார் போலும . இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/5/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக