வெள்ளி, 9 ஏப்ரல், 2010

இலங்கை தேர்தல்:​ 40 சதவீத வாக்குப்பதிவு



கொழும்பு நகரிலிருந்து தெற்கே 225 கிமீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான மதமுலானா கிராமத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தனது வாக்கை வியாழக்கிழமை பதிவு செய்கிறார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் மனைவி ஷிராந்தி.​ உடன் இலங்கை அதிபர் ​ மகிந்த ராஜபட்ச.​
கொழும்பு,​​ ஏப்.8:​ இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 40 சதவீத வாக்குகள் பதிவாயின.இலங்கை அதிபர் தேர்தல் கடந்த ஜனவரி 26-ம் தேதி நடைபெற்றது.​ இதில் வெற்றி பெற்று அதிபராக மீண்டும் மகிந்த ராஜபட்ச தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது.​ காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.196 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தேர்வு செய்வதற்காக வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.​ மொத்தம் 7,620 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.​ மொத்தம் 1.40 கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க இருந்தனர்.இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,​​ முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.தேர்தல் பணியில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.​ அதிபர் தேர்தலின்போது பணியாற்றிய ஊழியர்களைக் காட்டிலும் நாடாளுமன்றத் தேர்தலில் 50 ஆயிரம் பேர் கூடுதலாக பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.வேட்பாளர்களுக்காக சிறப்பு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.​ வாக்குப்பதிவுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 11,155 ஆகும்.​ வாக்குகளை எண்ணுவதற்காக 1,387 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேர்தலையொட்டி வாக்குச் சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அதிபர் ஓட்டுப் போட்டார்:​​ அதிபர் மகிந்த ராஜபட்ச தனது வாக்கைப் பதிவு செய்வதற்காக தெற்கு அம்பன்தோட்டம் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு வியாழக்கிழமை காலை சென்றார்.​ அங்கு அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.ரணில் விக்ரமசிங்கே:​​ முன்னாள் பிரதமரும்,​​ எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே கொழும்பில் தனது வாக்கைச் செலுத்தினார்.ஜெயசூர்யா:​​ கிரிக்கெட் வீரரும்,​​ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான சனத் ஜெயசூர்யா,​​ தபால் மூலம் தனது வாக்கைச் செலுத்தினார்.​ இவர் மடாரா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறார்.காலை 7 மணிக்கு மந்த கதியில் துவங்கியது வாக்குப்பதிவு.​ காலை 11 மணி வரை 20 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தபோது 40 சதவீத அளவில் வாக்குகள் பதிவாகியிருந்ததாகத் தெரியவந்துள்ளது.​ எனினும் அதிகாரப்பூர்வமாக பதிவான வாக்குகள் விவரம் தெரிவிக்கப்படவில்லை.மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.வெள்ளிக்கிழமை காலை,​​ தேர்தலின் முழு முடிவுகள் தெரியவந்துவிடும்.பொன்சேகா ஓட்டுப் போடவில்லை:​​ அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுப் போடவில்லை.இதுகுறித்து சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர் ஒருவர் கூறியதாவது:​ வாக்காளர் பட்டியலில் பொன்சேகாவின் பெயர் இடம்பெறவில்லை.​ இதனால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றார் அவர்.தேர்தல் குறித்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் ஒருவர் கூறியதாவது:​ வடக்கு இலங்கைப் பகுதியில் வாக்குப்பதிவு மந்தகதியிலேயே இருந்தது.​ பிற்பகல் வேளையில் வாக்குப்பதிவு களை கட்டியது என்றார் அவர்.
கருத்துக்கள்

தறபோதைய சிங்கள அரசின் கொடுங்கோன்மையைத் தமிழர்கள் மட்டுமல்லாமல் சிங்களர்களும் விரும்பவில்லை என்பதையே வாக்களிப்பு மந்தநிலை காட்டுகிறது. எனவே, யார் வெற்றி பெற்றாலும் உண்மையில் மக்கள் சார்பாளர்களாக மாட்டார்கள். இனப்படுகொலைக்காரர்களிடம் தமிழர்கள் அடி பணிந்தார்களா என்பதை வெள்ளி முடிவு காட்டி விடும். இருப்பினும் 60%பதிவின்மை இனப்படுகொலைகளுக்கு எதிரான ஒற்றுமைப் போக்கைக் காட்டுவதாகவே கருதப்பட வேண்டும். சிங்களர்களும் திருந்தி இந்தியா போன்ற பிற நாடுகளின் வலையில் வீழாமல்தனித்தனி உரிமையுடைய தமிழ் ஈழ- சிங்கள நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தும் காலம் விரைவில் வரவேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/9/2010 4:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக