வேலூர்,ஏப்.4:அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார். வேலூரில், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது: உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தன. அவற்றில் கிரேக்கம், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகள் அழிந்துவிட்டன. பழமையான மொழிகளில் தமிழ், சீனம் மட்டுமே நிலைத்துள்ளன. தமிழுக்கு ஆபத்து இல்லாமல் இல்லை.ஆங்கிலம் உலக மொழியாக உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆண்டதாலும், அவர்கள் தென்னிந்தியா வழியாக வந்ததாலும் தமிழில் ஆங்கில கலவை அதிகம் உள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசப்படுகிறது. தமிழை முழுமையாக பிழையின்றி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பத்திரிகைகள், ஊடகங்கள் தமிழை வளர்க்க வேண்டும். இதுபோன்ற விழாக்கள் நடத்தி ஒரு தமிழனை மற்றொரு தமிழன் பாராட்ட வேண்டும். அப்போதுதான் மேலும் சிறப்பாக செய்வார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தமிழ் பெயரை வைத்திருக்கின்றனர். தமிழர்களின் விழாக்களை கொண்டாடுகின்றனர். இருந்தாலும் தமிழ் பேசத் தெரிவதில்லை. இந்நிலை மாற வேண்டுமெனில், மேலைநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழ் மன்றங்கள் மூலம் இங்குள்ள ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர்கள் ஓரிரு ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ் கற்றுத்தர வேண்டும். அங்கு தமிழ் புத்தகங்கள் கிடைப்பதில்லை. நாம் இங்கிருந்து அனுப்ப வேண்டும். திருக்குறளுக்கு இணையாக இன்னொறு நூல் இல்லை. அனைவரும் திருக்குறளை படித்திருக்க, அறிந்திருக்க வேண்டும். அதன் கருத்துகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் விஸ்வநாதன். திரைப்பட பாடலாசிரியர் சினேகனுக்கு "கவி இளவரசு' விருதும், இயக்குநர் த.ராஜ்குமாருக்கு "அசத்தல் இமயம்' விருதும், வேலூர் தமிழ்ச்சங்கப் பொருளாளர் வே.பதுமனாருக்கு "தமிழ்ச்சுடர்' விருதும் வழங்கப்பட்டது.
கருத்துக்கள்
உண்மைதான். அதே நேரம் தமிழ் நாட்டில் தமிழே தெரியாமல் வாழும் தமிழர்களுக்கும் அயல் மாநிலத்தவர்களுக்கும் தமிழ் கற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முதற்கட்டமாகப் பொறியியல் கல்லூரிகளும நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களும் நடத்துவோர் தங்கள் நிறுவனங்களில் பயில்வோர் தமிழில் சான்றிதழ், பட்டயம் பெறும் வகையில் தமிழ்ப் பயிற்சி அளிக்க வேண்டும். திரு விசுவநாதன் தன் நிறுவனத்தில் முதலில் இதைத் தொடக்கி வைக்க வேண்டும.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
4/6/2010 2:53:00 AM