புதன், 7 ஏப்ரல், 2010

உ.வே.சா.வின் சரித்திர நூல்கள் வழி அறியப்படும் தமிழ்க் கல்விமுறைகள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

எந்தவொரு சமூகமும் தனக்கெனத் தனித்த கல்வி கலாச்சாரத்தையும் கல்வி வரலாற்றையும் கொண்டதாகவே இருக்கும். சமூகப் பண்பாட்டு - பயன்பாட்டுத் தளத்தில் கல்வியின் வினை புரிதல் - அசைவியக்கம் எவ்வாறு உருப்பெற்றுச் செயல்படு கின்றது என்பதைச் சிந்திப்பது அவசியமாகும். ஆரம்ப காலத்தில் கல்வியானது தொழில், வாழ்வியல் முறைமைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்துதல் என்ற நிலையையே குறித்தது. அரசு உருவாக்கத்தின் பின்புலத்தில் உருப்பெற்ற மாற்றுச் சமூகத்தில் அறிவுப் பாரம்பரியத்தின் உருப்பேறாகக் கல்வி அடையாளப் படுத்தப்பட்டது. இவற்றில் போர்த்தொழில் சார்ந்த உடலுழைப்பு நிலைகளும் உண்டு. சாதிய வர்க்க சமூகத்தில் கல்வி அனைவருக்குமான பொதுமைக்குள் செயல்படவில்லை.

இப்பின்னணியில் தமிழ்க்கல்வி வரலாற்றை நோக்கும்போது அது மொழிநிலைப் பண்பாடு சார்ந்து கட்டமைக்கப்பட்டி ருப்பதைக் காணமுடியும். தமிழ்ச் சூழலில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய கல்வி வரலாறு சார்ந்த தரவுகள் இலக்கணங்கள், இலக்கியங்கள், போன்ற அகவயப்பட்ட நிலையினவாகவே உள்ளன. அகத்தியரிடம் தொல்காப்பியர் முதல் பன்னிருவர் பாடங்கேட்டனர் என்ற செய்தி (தொல். பாயிரம்.நச்சர்.) தொடங்கி மாணவர் இலக்கணம், ஆசிரியர் இலக்கணம், பாடங்கேட்டலின் வரலாறு, ஆசிரியர் - மாணவர் உறவுநிலை போன்ற இலக்கணத் தரவுகளும் கற்றார், கல்லாதார் நிலை, கல்வியின் பயன், கற்றோருக்குரிய சமூக மதிப்பீடு போன்ற இலக்கியத் தரவுகளும் தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு கற்கை நெறிகள் வழக்கில் இருந்தமையைக் காட்டுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை தமிழ்ச்சமூகத்தில் திண்ணைப் பள்ளியில் படித்தல், புலவர்களிடம் தனிநிலையில் கற்றல், மடங்களில் கற்றல் முதலிய கல்வி முறைகள் வழக்கி லிருந்தன. காலனிய விளைவுகளான அச்சு உருவாக்கம்-- சுவடிகள் அச்சுருவம் பெறல், கல்விப் பரவலாக்கம் போன்றவை மேற்சுட்டிய மரபான தமிழ்ப் பயிற்றுமுறைகளை மாற்றுத்திசை யில் கொண்டுசென்றன. இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான பாரம்பரிய தமிழ்ப் பயிற்றல் முறைமைகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதற்கு உ.வே.சா. எழுதிய சரித்திரங்கள் முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன.

உ.வே.சா. எழுதிய என் சரித்திரம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம், தியாகராஜ செட்டியார் சரித்திரம் ஆகிய நூல்கள் சுட்டும் கல்வி முறைமைகள் முதன்மைத் தரவுகளாகக் கொள்ளப்படுகின்றன. இச்சரித்திர நூல்களை வாசிக்கும்போது உ.வே.சா.வுக்கு முந்தைய கல்விமுறை, உ.வே.சா. பயின்ற கல்விமுறை, உ.வே.சா. பயிற்றுவித்த கல்விமுறை என மூன்று தலைமுறைகளில் கற்றல், கற்பித்தல் சார்ந்த செயல் பாடுகள் எவ்வாறு மாற்றம் பெற்று வந்துள்ளன என்பதைப் பார்க்கமுடியும். இச்சரித்திர நூல்கள் குறிப்பிடும் கல்வி தொடர்பான தரவுகளை ஒருவாறு,

- மரபான கல்விமுறைகள்

அ. குருகுலக் கல்விமுறை

ஆ. திண்ணைப்பள்ளிக் கல்விமுறை

இ. தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும்

உயர்நிலைக் கல்விமுறை

- நிறுவன மயமாக்கப்பட்ட கல்விமுறை

என்ற வகைமைக்குள் அடக்கலாம்.

1. மரபான கல்விமுறைகள்

அ. குருகுலக் கல்விமுறை

பள்ளி எனும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடை ஆகும். இந்தியக் கல்வி மரபில் வேதக்கல்வி முதலாக இதிகாச -புராணங்களில் குறிப்பிடப்பெறும் குருகுலக் கல்வியானது மாணவன் குருவின் வீட்டில் 12 ஆண்டுகள் தங்கிப் படித்தல், அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்தல் தொடங்கிப் பல கட்டுப்பாடுகள் உடையதாக விளங்கியது. இதன் எச்சங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் காணப்பட்டன. உ.வே.சா. வின் தந்தை வேங்கடசுப்பையர் (வேங்கட சுப்ரமணிய ஐயர்) தன் உறவுக்காரர் கிருஷ்ணையரிடம் குருகுல முறையில் அவர் வீட்டில் தங்கி 12 ஆண்டுகள் சங்கீதம் பயின்றார். என் சரித்திரத் தில் ‘என் தந்தையாருடைய குருகுல வாசம் ஆரம்பமாயிற்று... அவருக்குப் பல வேலைகளை ஏவுவார். தினந்தோறும் தம்முடைய ஆசிரியருக்கு என் தந்தையார் வஸ்திரம் துவைத்துப் போடுவார். வெந்நீர் வைத்துக் கொடுப்பார்... தம்முடைய ஆசிரியர் குதிரையில் ஏறிச் செல்லும்போது சில சமயங்களில் என் தந்தையார் அக்குதிரையின் லகானைப் பிடித்துச் செல்வதுண்டாம்Õ (2004:29,30) என்று தன் தந்தை சங்கீதம் பயின்றதை விளக்குகின்றார். குருகுலக் கல்விமுறையில் பயின்றவர்கள் பொறுமையும் பணிவும் உண்டாகப் பி¬க்ஷ யெடுத்து அதைத் தம் ஆசிரியர்பாற் கொடுத்து எஞ்சியதைத் தாம் உண்டு வந்தார்கள் (2005:-2:188). இப்படியான கல்விமூலம் கற்பவரின் வாழ்வியல் முறைகள், கற்பிக்கப்படுபவரின் தற்சார்பு- அறநிலைப்பட்ட ஒழுக்க நெறிகளின் வழித் தோற்றம் கொள்கின்றன. போதனா முறையைத் தாண்டி வாழ்வியலைக் கட்டமைப்பதிலும் ஆசிரியர் செயல்பாடு ஊடாடுகின்றது.

ஆ. திண்ணைப்பள்ளி கல்விமுறை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் கிராமங்கள்தோறும் இருந்திருக்கின்றன. இவற்றைத் தெற்றிப் பாடசாலைகளென்றும் சொல்வதுண்டு. ஒரே ஊரில் ஒன்றுக்குமேற்பட்ட பள்ளிக்கூடங்களும் இருந்திருக் கின்றன. ‘சென்ற நூற்றாண்டுவரையில் நம் நாட்டில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்துவந்தன. நான் இளமையில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவனேÕ(2005:-2:189) என்று கூறும் உ.வே.சா. இப்பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் பயிலும் முறைமைகள் குறித்தும், பயிற்றுவிக்கப்படும் பாடங்கள் குறித்தும் மிக விரிவாகப் பதிவுசெய்துள்ளார். வித்தியாப்பியாசம் (பள்ளியில் சேர்த்தல்) செய்தல் தொடங்கி விடியற் காலையில் எழுந்து பள்ளிக்கு வருதல், மணலில் எழுதுதல், சுவடியில் எழுதுதல், மாணவர்கள் சுவடிகளைப் பாதுகாத்தல், ஏடெழுதும் வழக்கம், தூக்குப் பலகை, ஆசிரியர் வழிபாடு, அவருக்குரிய காணிக்கை, விடுமுறை நாட்கள், மாணவர்களுக்குரிய தண்டனைகள், மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்த பாடங்கள் போன்றவை அப்பதிவுகள்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தன் தந்தை நடத்திய பள்ளியில் பயின்றார். அங்கு அவர் தமிழ் நெடுங்கணக்கு, ஆத்திசூடி முதலிய நீதி நூல்கள், எளிய நடையிலுள்ள அருணகிரியந்தாதி முதலிய அந்தாதிகள், கலம்பகங்கள், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய பிள்ளைத் தமிழ்கள், நிகண்டு, கணிதம் முதலியவற்றைக் கற்றார் (1986:9). உ.வே.சா. உத்தமதானபுரத்தில் நாராயண ஐயரென்பவர் நடத்திய பள்ளியிலும் சாமிநாதையர் நடத்திய பள்ளியிலும் படித்தார். நாராயண ஐயரிடத்தில் அரிச்சுவடி, எண்சுவடி முதலியவை களையும் சாமிநாதையரிடத்தில் சம்«க்ஷப ராமாயணம், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நீதி சாரம், அமரம் மூன்று காண்டங்கள், கணக்குகள் முதலியவைகளையும் கற்றார். பின்பு கிருஷ்ண வாத்தியார் பள்ளிக்கூடத்திலும் பண்டாரம் என்பவருடைய பள்ளிக்கூடத்திலும் படித்தார். பண்டாரம் தெலுங்கும் சொல்லிக்கொடுத்தார். பொதுமை நிலையில் இப்பள்ளிகளில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியனவும் கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகளும் மருத்துவத்தில் வீட்டிற்குத் தேவையான வைத்திய முறைகளும் வடமொழியில் அமரம் முதலியனவும் பாடமாக இருந்தன. இப்பள்ளியில் நெட்டுருபண்ணுதல் முக்கியமானதாக இருந்தது.

இப்பள்ளிக்கூடங்களில் தண்டனைகள் கடுமையாக இருந்தன. பிரம்படி, மாணவன் கயிற்றைப் பிடித்துத் தொங்கும்போது ஆசிரியர் அவன் காலில் அடிக்கும் கோதண்டம் என்ற தண்டனை, படிக்காத மாணவன் முதுகில் பிறர் ஏறிச் சவாரி செய்யக்கூடிய குதிரை ஏற்ற தண்டனை முதலியவை அவற்றுள் சில. இப்பள்ளிக் கூட ஆசிரியர் கணக்காயர் எனப்பட்டார். அவருக்கு மாதம் கால் ரூபாய் சம்பளமாக ஒவ்வொரு மாணவரும் கொடுத்தனர். இப்பள்ளிகளுக்குப் பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, அஷ்டமி ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. பலசாலியாக இருப்பவன் சட்டாம் பிள்ளையாக இருப்பான்.

இ. தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை

திண்ணைப் பள்ளிக்கூட - பாடசாலைப் படிப்பு முடிந்த பிறகு வித்துவான்களிடம் -- புலவர்களிடம் சென்று தனிநிலையில் இலக்கண, இலக்கியங்களைப் பாடங்கேட்டனர். சுப்பிரமணிய தேசிகர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தியாகராஜ செட்டியார், உ.வே.சா. ஆகியோர் யார்யாரிடம் என்னென்ன பாடங்கேட்ட னர், இவர்கள் யார்யாருக்குப் பாடஞ்சொன்னார்கள் என்பது பற்றிய தகவல்கள் விரிவான நிலையில் பதிவுசெய்யப் பெற்றுள் ளன. அந்தக் காலத்தில் மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லிக் கொடுக்கும் தமிழ்ப்புலவர்கள் பலர் இருந்தனர். ஒருவரிடத்தே அனைத்து நூல்களும் இல்லாத காரணத்தால் படிப்போரும் பலரிடம் சென்று கல்வி கற்றனர். வேலாயுத முனிவர், உறையூர் முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், விமநாயக்கன் பாளையம் இருளாண்டி வாத்தியார், பாலக்கரை வீரராகவ செட்டியார், கொட்டடி ஆறுமுகம் பிள்ளை முதலியோர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்தில் பாடஞ் சொல்லிக்கொடுத்த வித்துவான்கள். எழுத்து, சொல், பொருள், யாப்பிலக்கண நூல்களைத் தக்கவர்களிடத்துப் பாடங்கேட்டுக் கற்றுக்கொண்ட சுந்தரம் பிள்ளை வடமொழி சார்ந்து உருப்பெற்ற அணியிலக்கண நூலான தண்டியலங்காரத்தைப் பல நிலையில் அலைந்து திரிந்து திரிசிரபுரப் பரதேசி ஒருவரிடம் பிரதியைப்பெற்றுப் படித்தார் என்ற செய்தியும் அக்காலக் கல்விமுறையோடு குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

தியாகராஜ செட்டியார், உ.வே.சா. போன்றோரும் வித்துவான்கள் பலரிடம் தனிநிலையில் பாடங்கேட்டுள்ளனர். உ.வே.சா. சடகோபையங்கார், குன்னம் சிதம்பரம் பிள்ளை முதலியோரிடம் பாடங்கேட்டுள்ளார். திருவாவடுதுறை மடத்தின் வித்துவானாகச் செயல்பட்ட மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடங்கேட்ட முறையை நிறுவனமயமாக்கப் பட்ட பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கோபாலகிருஷ்ண பாரதியிடம் சங்கீதம் படிப்பதைத் தம் ஆசிரியர் விரும்பாததால் அதைத் தாம் கைவிட்டதாகக் கூறுவதும் மடத்தில் இருவேளைகளில் பாடங்கள் நடக்கும் என்று சொல்லுவதும் இப்பின்புலத்திலேயே பார்க்க முடியும். உயர்நிலைக் கல்விமுறையில் சிற்றிலக்கியங்கள், சமயக் காப்பியங்கள், இலக்கண நூல்கள் போன்றவை பாடஞ்சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இம்மரபான கல்விமுறைகள், அடிப்படையில் எல்லோருக்கு மானதாக அமையவில்லை. தன்னளவில் சில விலக்குதல்களைக் கடைபிடித்துள்ளதை அறியமுடிகின்றது. பாடம் கற்பிப்பவர் பாடம் கற்றவர் ஆகிய இருவருமே சமூகத்தின் மேல்மட்ட அடுக்குகளில் இருப்பதை மேற்சொன்ன தரவுகள் உறுதிப்படுத் தும். அக்காலங்களில் ஐயர், ஐயங்கார், பிள்ளை, செட்டியார், முதலியார் ஆகிய பிரிவினர்களே கல்வியாளர்களாக இருந்தி ருக்கின்றார்கள். மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் படித்தவர்கள் பற்றி உ.வே.சா. ‘‘இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு. பார்ப்பன‌ர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும் வேளா ளரிற் பல வகுப்பினரும், பிறசாதியினரும், கிறிஸ்தவர்களும், மகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு. நாகூரிற் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதர் நாவலரென்னும் மகம்ம தியர் ஒருவர் இவர்பால் வந்து சீறாப்புராணம் முதலியவற்றைப் பாடங்கேட்டனர்’’(1986:145) என்று குறிப்பிடுவது ஒருவகை உயர்நிலைப் பிரிவினரையே என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கல்வி முறைகளில் கற்பிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தமிழ்மொழியை அறிதல் - பயிலல், சமயம் சார்ந்த கருத்தாக்கங் களைப் பயிலல் என்ற அளவிலேயே இருந்திருக்கின்றன. குறிப்பாகக் கல்வியானது இக்காலகட்டத்தில் சமய நீக்கம் செய்யப்பட்டதாக இருந்திருக்கவில்லை.

2. நிறுவனமயமாக்கப்பட்ட கல்விமுறை

ஐரோப்பியர்களின் வருகைக்குமுன்பு சமய நிறுவனங்கள் சார்ந்து இருந்த கல்விச் செயல்பாடுகள், அவர்களின் வருகைக்குப் பின்பு அரசு சார்ந்த செயல்பாடாக மாறியது. தமிழகத்தில் வழக்கி லிருந்த குருகுல, திண்ணை முதலிய பல மரபான கல்விமுறைகளை அரசாங்கம் கையகப்படுத்தியது. திண்ணைக் கல்விமுறையில் பயின்ற தியாகராஜ செட்டியார், உ.வே.சா. போன்றோர் அரசுசார் நிறுவனங்களில் பாடஞ்சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தனர். தான் வாழ்கின்ற சமகாலத்திலேயே வெவ்வேறு வகையான கல்வி முறைகளை இவர்கள் சந்தித்திருக்கின்றனர். இவ்விரண்டிற்கு மான முரண்பாடுகளையும் இவர்கள் எதிர்கொண்டுள்ளனர். தியாகராஜ செட்டியார் ஸ்ரீரங்கம் பள்ளியில் வேலைசெய்யும் போது மாணவர்களுக்கு வைத்திருக்கும் பாடம் குறைவாக உள்ளதாகக் கூறி வேறுசில நூல்களையும் கற்பித்தார். அதற்காக மேலதிகாரியின் கோபத்திற்கும் ஆளானார் (2005:-3:415). உ.வே.சா. கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்க்கும்போது மற்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களைவிட தமிழ் ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு என்பதையும் அவர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தமிழாசிரியர்களுக்கு மதிப்பு குறைவு என்பதையும் பதிவுசெய்துள்ளார். ஆசிரியர்களுக்குத் தேவையான பணிகளைச் செய்து பாடங்கற்ற தமிழ்க்கல்வி மரபு பின் ஐரோப்பியக் கல்விமுறையால் வேறொரு நிலைப்பாட்டை அடைந்தது. தியாகராஜ செட்டியார் பட்டாளத்துப் பள்ளி, ஸ்ரீரங்கம் பள்ளி, மாகாணப் பள்ளியாக இருந்து கல்லூரியாக விரிவடைந்த கும்ப கோணம் கல்லூரி ஆகிய இடங்களிலும் உ.வே.சா. கும்பகோணம் கல்லூரி, சென்னை ப்ரிசிடென்சி கல்லூரி ஆகிய இடங்களிலும் பணிபுரிந்த காலங்களில் இருந்த தமிழ்க் கல்விமுறைபற்றி இப்பிரதிகள் மிக விரிவான தரவுகளைத் தருகின்றன.

இக்காலங்களில் திருவாவடுதுறை போன்ற மடங்களில் மரபான முறையிலேயே தமிழ்க் கல்வி நடைபெற்று வந்துள்ளது. உ.வே.சா. கற்ற காலங்களில் சின்னவகை வகுப்பு, பெரியவகை வகுப்புகள் நடைபெற்றன. மொழி-இலக்கண, இலக்கியம் சார்ந்த ஆழ்நிலைத் தமிழ்கற்றல் முதன்மைபெற்றது. மடங்களில் இருப்பவர்கள் தமிழ் கற்றல் ஒன்றையே முதன்மையாகக் கொண்டமையால் அவர் களுக்குப் பாடஞ்சொல்லல் கடினம் என்றும் கல்லூரியில் பாடஞ் சொல்லல் எளிமையானது என்றும் குறிப்பிடுகின்றார் உ.வே.சா.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உ.வே.சா. போன்றோர் கற்ற காலகட்டங்களில் இருந்த பள்ளிக் (பாலர்) கல்விபற்றியும், தனி முறையில் பாடங்கேட்ட உயர்நிலைக் கல்விபற்றியும் விரிவான நிலையில் அறியமுடிகின்றது. ஆனால் உ.வே.சா. பாடம் நடத்திய காலத்தில் கிடைக்கக்கூடிய தரவுகள் முழுமையும் உயர்கல்வி பற்றியதாகவே உள்ளது. சில பள்ளிகளின் பெயர்கள் குறிப்பிடப் பெற்றிருப்பினும் அக்காலப் பள்ளிக் கல்விமுறைபற்றியும் நடத்திய பாடங்கள்பற்றியும் குறிப்புகள் காணப்படவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேற்றுமொழியாளர்களுக்குத் தமிழ்மொழி கற்பித்தல் - - மொழிக்கல்வி சார்ந்து பல நூல்கள் எளிமை வடிவில் -- உரைநடை வடிவில் தோன்றின. அக்காலச் சமூக அரசிய லோடு தொடர்புடைய இப்புத்தகங்களின் கற்றல் -- கற்பித்தல் முறைமைகள் பற்றிய குறிப்புகளும் இந்நூல்களில் இல்லை. அயலவர்களுக்கான தமிழ்மொழிக் கற்பித்தல் நிலையில் இயங்கிய சென்னைத் தமிழ்ச் சங்கத்தில் (ஜார்ஜ் போர்ட் காலேஜ்) தமிழ் வித்துவான்களாக இருந்த சிலரைப் பற்றிக் குறிப் பிடும் உ.வே.சா. அதில் நடைபெற்ற கல்விமுறைபற்றிக் குறிப்பிட வில்லை.

தாங்கள் வேலைபார்த்த நிறுவனங்களில் இருந்த தமிழ் தவிர்ந்த பிற பாடமுறைகள், அப்பாடங்களைக் கற்றார் -- கற்பித் தார் பற்றிய விவரணங்கள், அப்பாட முறைகளின் பின்னணியில் உருவான சமூக மாற்றங்கள் போன்றனவும் இப்பிரதிகளில் பதிவுபெறவில்லை.

மரபான கல்விமுறைகளில் காணக்கிடைக்கும் சில தன்மைகள் நிறுவனம்சார் கல்வி முறைகளிலும் காணப்படுகின்றன. மொழிப்பயிற்சி, இலக்கண இலக்கியங்களை மனனம் செய்தல், சமயக் கல்வி போன்றவை கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களிலும் தொடர்ந்து கற்பிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

ஆயினும் அக்காலகட்டத்தில் சமூக அடுக்கின் பல்வேறு பிரிவுகளிலிருந்து உருவான ஆளுமைகள், அவர்களின் கருத் தாக்கங்கள் நிரம்ப அறியக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கியங்களைச் சைவ, வைணவம் தவிர்ந்த வேறுசில சமயம்சார்ந்த உரையாடல்களுக்கு உட்படுத்தியமை, ஒடுக்கப்பட்ட தன்னிலைகள் சார்ந்து தமிழ் இலக்கியங்களை அவைதிகப் பின்புலத்தில் விவாதத்திற்கு உட்படுத்தியமை போன்றவற்றை அக்காலகட்டத் தின் அறிவுச் செயல்பாடுகளாக அடையாளப்படுத்தலாம். இவ்வகையான கல்விச் செயல்பாடுகளையோ, ஐரோப்பியரின் அறிவியல்- தொழில்நுட்பம் சார்ந்த கல்விச் செயல்பாடுகளையோ உ.வே.சா.வின் இப்பிரதிகள் புலப்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

உதவிய நூல்கள்

1. 1986--ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

2. 2004 -- என் சரித்திரம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.

3. 2005 -- டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள், நான்கு தொகுதிகள், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.

Bookmark and Share

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக