புதன், 7 ஏப்ரல், 2010

கொச்சைத் தமிழ் பேசினால் பச்சைத் தமிழ் செத்துவிடும்!​​: தமிழருவி மணியன் பேச்சு



கோவை,​​ ஏப்.6:​ கொச்சைத் தமிழ் பேசினால் பச்சைத் தமிழ் செத்துவிடும் என்று தமிழ்ச் சிந்தனையாளர் தமிழருவி மணியன் கூறினார்.கோவை அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மன்றத் துவக்க விழாவில் அவர் பேசியது:நல்ல அறிவே,​​ நல்ல ஒழுக்கம் என கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறினார்.​ அறிவு வேறு,​​ ஒழுக்கம் வேறு அல்ல.​ அறிவு இருக்கும் இடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டும்.​ அறிவு இருந்து ஒழுக்கம் இல்லாவிட்டாலும்,​​ ஒழுக்கம் இருந்து அறிவு இல்லாவிட்டாலும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.​ உண்மையான அறிவு,​​ ஒழுக்கம் இருந்தால் தான் உள்ளத்தில் இன்பம் பிறக்கும்.சிறந்த கருத்துகள் கிடைக்கும் இடத்தை தேடி இளைஞர்கள் செல்ல வேண்டும்.​ திரையரங்குகளுக்கு போவதால் எவ்வித பயனும் கிடைக்காது.​ ஆங்கிலத்தில் பேசினால் அறிவாளி என்றும் தமிழில் பேசுவோர் தற்குறி என்றும் சிலர் எண்ணுகின்றனர்.​ இளம்பெண்களை கவர,​​ இளைஞர்கள் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.லத்தீன் மொழியில் பேசுவோர்,​​ எழுதுவோர்தான் அறிவாளி என ஒரு காலத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் எண்ணினர்.​ ஆனால்,​​ இப்போது லத்தீன் மொழி செத்துவிட்டது.உலகில் யூதர்களின் எண்ணிக்கை 1 சதவீதம்கூட இல்லை.​ ஆனால்,​​ அமெரிக்காவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்,​​ வங்கிகள் யூதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.​ உலகிலேயே சிறந்த அறிவாளியாகக் கருதப்படும் யூதர்கள்,​​ இஸ்ரேலில் தங்களது தாய்மொழியான ஹீப்ரூ மொழியில்தான் கல்வி கற்கின்றனர்.தாய்மொழி தெரியவில்லை என வெட்கம் இல்லாமல் சொல்லும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.​ 60 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ இன்னும் முழுமை பெறவில்லை.​ தமிழகத்தில் இருக்கும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்.​ அதிகாரிகள் தமிழில் பேச முயற்சி செய்கின்றனர்.​ ஆனால்,​​ தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசுகின்றனர்.உலகில் 6 ஆயிரம் மொழிகள் பேச்சுவழக்கில் உள்ளன.​ இவற்றில் 6 மொழிகளுக்கு மட்டும்தான் செம்மொழி அந்தஸ்து உள்ளது.​ இதில் தமிழும்,​​ சீனமும்தான் இப்போது தொடர்ந்து உயிருடன் இருக்கிறது.வழக்கொழிந்த மொழியான யூத மொழி ​(ஹீப்ரூ)​ மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.​ கிரேக்கம்,​​ லத்தீன்,​​ சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் வழக்கில் இல்லை.​ ஐ.நா.சபையில் 196 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.​ இரு செம்மொழியை கொண்ட ஒரே நாடு இந்தியாதான்.​ பிழைப்புக்காக எத்தனை மொழியை வேண்டுமானாலும் கற்பதில் தவறில்லை.​ ஆனால்,​​ பண்பாடு,​​ கலாசாரத்தை காக்க தாய்மொழி தேவை என்றார்.
கருத்துக்கள்

1. இந்த உண்மைகளை நம் அருமைத் தமிழ் மக்கள் உணரும் நாள் எந்நாளோ? 2. காங்கிரசு வீழும் நாளே தேசிய மொழிகளின் பொற்காலம். 3. கொச்சைத் தமிழால் தமிழ் நிலம் சுருங்கிய வரலாற்றை உணருவோம். இதன் காரணமாக ஆட்சி அதிகாரத்தை இழந்து ஈழத்தில் இனப்படுகொலை கண்டும் கேட்டும் வாய்பொத்தி இருக்கும் நிலையயை உணருவோம். 4. தமிழில் பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் பிற மொழி கலக்காமல் பேசுவோம்! எழுதுவோம்! 5. தமிழுணர்வை விதைத்து வரும் தமிழருவி மணியனுக்கும் இதுபோன்ற செய்திகளை வெளியிடும் தினமணிக்கும் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/7/2010 4:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக