திங்கள், 5 ஏப்ரல், 2010

.ஆர். ரஹ்மான் இசையில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்': 'தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கோரிக்கை



சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பயணத்தைப் பாராட்டும் விதத்தில் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியில் "அருவி' தொண்டு நிறுவனம் மற்றும் ஆதரவற்றோ

சென்னை, ஏப். 4: கணியன் பூங்குன்றனார் இயற்றிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற புறநானூற்றுப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தமிழின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்ட வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கோரிக்கை விடுத்தார்.
÷"ஆஸ்கர்' விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசைப் பயணத்தைப் பாராட்டி அவரது சகோதரி ரெஹானா தொகுத்து வழங்கிய இன்னிசை நிகழ்ச்சி சென்னை காமராஜர் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
÷இதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சென்ற மார்ச் 31-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் பத்மபூஷண் விருது பெற்றார். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தில்லியில் "தினமணி' சார்பில் நடைபெற்ற பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் எந்த வித தயக்கமும் இல்லாமல் பங்கேற்றார்.
÷இந்த விழாவில் "ஆஸ்கர்' விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானையும், நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனையும் அருகருகே அமரவைத்த பெருமையை "தினமணி' பெற்றது.
÷விழாவில் முதலில் வந்து அமர்ந்த "நோபல்' பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், "நான் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகன். எனவே, அவருடன் இணைந்து எடுக்கப்படும் படத்தை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்' என்று கேட்டுக் கொண்டார்.
÷சிறிது நேரத்தில் வந்த ஏ.ஆர்.ரஹ்மானும், "நானும், அவரும் (வெங்கட்ராமன்) இப்படி அருகருகே அமர்ந்திருக்க இனியும் ஒரு வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகம்தான். எனவே கிடைத்தற்கரிய இந்தப் படத்தை எனக்கு அனுப்புங்கள்' என்று என்னிடம் கேட்டார்.
÷சிறிதாவது கர்வமோ, நான் பெரியவன் என்கிற அகம்பாவமோ, உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற அவர்கள் இருவரிடமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.
÷"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற தமிழ் முழக்கத்தை உலகத்துக்கு அளித்தவர் கணியன் பூங்குன்றனார் என்ற சங்க காலத்துப் புறநானூற்றுப் புலவர்.
÷எல்லாமே எனது நாடுதான். எல்லோரும் என் உறவினர்களே என்கிற அந்த அற்புதமான சங்க இலக்கியப் பாடலை வாழ்ந்து காட்டிய பெருமைக்கு உரியவர் ஏ.ஆர். ரஹ்மான்.
÷தில்லியில் நடைபெற்ற தினமணியின் பாராட்டு விழாவில் பேசும்போது, "ஜெய்ஹோ' போன்று ஒரு தமிழ்ப் பாடலை, தான் இசை அமைத்து ஆஸ்கர் விருது வாங்க விரும்புவதாக கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
÷நான் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். "வந்தே மாதரம்' பாடலுக்கு இசையமைத்தது போல, கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்கிற புறநானூற்றுப் பாடலுக்கும் இசையமைத்து தம் இனிய இசையால், தமிழகத்தின் இசைத் தூதுவர் ஏ.ஆர்.ரஹ்மான் பண்டைத் தமிழனின் தொலைநோக்குச் சிந்தனையை உலகறியச் செய்ய வேண்டும்.
÷இந்த மெல்லிசை நிகழ்ச்சி மூலம் நான் தினமணியின் சார்பிலும், உங்கள் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பிலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விடுக்கும் வேண்டுகோள் இது என்றார் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்.
÷இந்த மெல்லிசை நிகழ்ச்சியில் இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் ரவிசங்கர், "டைம்ஸ் ஆப் இந்தியா' நிர்வாகி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பின்னணி பாடகர் மனோ உள்ளிட்ட கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர். ரெஹானா மற்றும் நடிகர் விஜய் ஆதிராஜ் ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
÷முன்னதாக "அருவி' தொண்டு நிறுவனம் மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்துக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் ஒருங்கிணைப்பாளர் சைமனிடம் நன்கொடையை தொழிலதிபர் ரவிசங்கர் வழங்கினார்.


கருத்துக்கள்

அருமையான வேண்டுகோளை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இவ் வேண்டுகோளை நிறைவேற்றுவதால் இரகுமான் பெருமை பெறுவார். தமிழர் மகிழ்ச்சி கொள்வார். ஒரு பாடலுடன் நிறுத்திக் கொள்ளாமல் சங்கப் பாடல்கள் பலவற்றையும் பாட வேண்டும். பாடல் பேழையில் அப்பாடல்களின் பல் வேறு மொழிபெயர்ப்புளும் இடம் பெற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/5/2010 3:13:00 AM

அக் இம்சையைக் காட்டி கிந்தியாவாக்கி இனச்சிதைப்பை செய்தாயிற்று. இனிக் கணியன் பூங்குன்றனாரைக் காட்டிக் கோவணத்தையும் உருவும் திட்டத்தை அரங்கேற்றித் தமிழகத்தை அம்மணமாக்காது ஓயமாட்டார்கள் போலிருக்கிறதே. எல்லாமே எனது நாடுதான். எல்லோரும் என் உறவினர்களே என்றுபோய் கர்நாடகாவில் பாட முடியுமா? மாராட்டியாவில் பாடமுடியுமா? சும்மா மக்களை என் மாயைக்குள் வீழ்தி வைத்திருக்க முயல்கிறீர்கள்.

By அருப்புக்கோட்டைப் பெரியசாமி
4/5/2010 3:12:00 AM

அற்பமான இளைஞர்களைக்கூட என்னிடம் கொடுங்கள். அவர்களை சிற்பம் ஆக்கிக் காட்டுகிறேன் என்று சொன்னார் சுவாமி விவேகானந்தா. சிற்பமாக இருக்கும் பெண்களை என்னிடம் கொடுங்கள். அவர்களை கர்ப்ப மாக்கிக் காட்டுகிறேன்' என்று சொல்வது நம்ப நித்யானந்தா!!!

By Inbaa
4/5/2010 2:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக