சென்னை:மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களை, ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்குமாறு, பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதம்:கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களை, எஸ்.சி.,க்கள் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு சலுகைகளை அவர்களும் அனுபவிக்க வகை செய்யும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்னையை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு, ஏற்கனவே மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உத்தரவுப்படி, எந்த நபரும் இந்து, சீக்கிய, புத்த மதங்களைத் தவிர வேறு எந்த மதத்தை தழுவியிருந்தாலும், அவர்கள் ஆதிதிராவிடர்களாக கருதப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதலில், 1950ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில், இந்து மதம் தவிர வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் ஆதிதிராவிடர்களாக கருதப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைத் தொடர்ந்து 1956ல் செய்த திருத்தத்தில் சீக்கிய மதமும், 1990ல் செய்த திருத்தத்தில் புத்த மதமும், ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.ஆதிதிராவிடர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அவர்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகுபாடு காண்பிக்கப்படுகின்றனர் என தமிழக அரசு கருதுகிறது.
மேலும், மற்ற மதங்களை பின்பற்றும் ஆதிதிராவிடர்களுக்கும், அதற்கான சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென தமிழக அரசு உறுதியளித்து வந்துள்ளது.எனவே, ஆதிதிராவிடர்களை மத ரீதியாக வேறுபடுத்தும் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பாராவை நீக்குவது தான் சரி என, தமிழக அரசு கருதுகிறது. இதனால், இவ்விஷயத்தில் தாங்கள் நேரடியாக தலையிட்டு, மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும், ஆதிதிராவிடர்கள் பட்டியலில் சேர்க்க பார்லிமென்ட்டில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக