ஞாயிறு, 4 ஏப்ரல், 2010


புலம்பெயர்ந்த தமிழர் பிரச்னைகளுக்காக புதிய சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும்: கலை இலக்கியப் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தல்



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 10}வது மாநில மாநாட்டையொட்டி, திருச்சி புத்தூர் நான்கு சாலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மக்கள் கலை இரவில் குமரி
திருச்சி, ஏப். 3: புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கவும், உதவி செய்யவும் சட்ட அதிகாரம் படைத்த அமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 10-வது மாநாட்டில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்தும் தமிழ் வழியிலேயே- பயிற்று மொழியாக கற்பித்தல் வேண்டும். மழலையர் பள்ளி முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் தொடக்கப் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் மழலையர் கல்வி, மாநிலக் கல்வி, மெட்ரிக், மத்தியப் பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைத்து சமச்சீர்க் கல்வி வழங்க வேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிக்க வேண்டும். தமிழ் வழிக்கல்வியை ஊக்குவிக்கத் தமிழக அரசின் பணி வாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என சட்டமியற்றிச் செயல்படுத்த வேண்டும். தமிழ் வளர்ச்சியையும், தமிழ் வழிக்கல்வியையும் கொள்கையாகக் கொண்டு திறம்படச் செயல்பட்டு வரும் தாய்த் தமிழ்ப் பள்ளிகளுக்கு அரசின் ஏற்பிசைவு அங்கீகாரம் வழங்கி அரசு உதவி பெறும் பள்ளிகளாக அறிவிக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற, தரமான, சீரான சமச்சீர்க் கல்வி கிடைக்க கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். ஆட்சி மொழிப் பயன்பாட்டை உறுதி செய்ய தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆணையம் உருவாக்க வேண்டும். மொழி தொடர்பான சிக்கலான செய்திகளை எல்லாம் ஆராய்ந்து அரசுக்கு அறிவுரை வழங்க தமிழ் மொழி ஆய்வறிஞர் மன்றம் என்ற அமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும். ஆட்சியியல் சொல்லகராதியை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். தமிழக அரசு அலுவலகங்களுக்கு கணினி வழங்கும்போது தமிழ் மென் பொருளையும் இலவசமாக வழங்க வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கான கணினிப் பயிற்சியை தமிழில் மட்டுமே அளிக்கும் வகையில் தனி அமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள உயர் நீதிமன்றங்களில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அறிவிக்கக் கோரி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் இசைவை, தமிழக அரசு விரைந்து பெற வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை "தமிழ்நாடு உயர் நீதிமன்றம்' என்று பெயர் மாற்ற வேண்டும். தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டும். குடமுழுக்கு போன்ற சடங்குகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே நடத்த வேண்டும். தமிழிசையை வளர்க்க, பழம்பெரும் நாடகக் கலையை வளர்க்க தமிழ்நாடு அரசு நிதி முதலான உதவிகளை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டுமானங்களை மேம்படுத்தி தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்ற வேண்டும். கல்விக்காக மக்களிடம் வசூலிக்கப்பட்ட கல்வி வரியின் பயன்பாடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
கருத்துக்கள்

நல்ல தீர்மானங்கள். இவற்றை ஓர் அமைப்பின் தீர்மானங்கள் எனக் கருதாமல் நாட்டு மக்களின் உள்ளக் கிடக்கை என்பதை உணர்ந்து அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழே தலைமைவகிக்கவும் முதன்மை பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக இவற்றைச் செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/4/2010 4:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக