சென்னை, ஏப்.7: ''தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வருவதற்கான தீர்மானம் பேரவையில் விரைவில் நிறைவேற்றப்படும்'' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், ''தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையைக் கொண்டு வர வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கருணாநிதி பேசியது:தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்பட வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். இங்கே ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தில் அவர் என்ன கோரிக்கையை வலியுறுத்தினார் என்பது பத்திரிகையாளர்கள் உள்பட யாருக்கும் தெளிவாகத் தெரியாது. எனவே, மீண்டும் 'மேலவை கொண்டுவரப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை நினைவூட்ட விரும்புகிறேன். மேலவை எப்போது கலைக்கப்பட்டது, எதற்கு தேவைப்பட்டது என்பதையெல்லாம் இந்த அவையில் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். மேலவையில் 'மூளைகள்' இருந்தன. சட்டப் பேரவையில் 'இருதயங்கள்', 'அவையங்கள்' இருந்தன. நானும், அன்பழகனும் மேலவை உறுப்பினர்களாக இருந்திருக்கிறோம். 1-11-1986-ல் மேலவை கலைக்கப்பட்டது. சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் தலைவராக இருந்தார். 'மேலவை இனி இருக்காது' என்பதை வருத்தத்தோடு அவர் எடுத்துச் சொன்னார்.1989-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் 'மீண்டும் மேலவை வேண்டும்' என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறைப்படி தில்லிக்கு அனுப்பப்பட்டது. அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தது. 4-10-1991-ல் அந்தத் தீர்மானம் நீக்கப்பட்டது.மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் 26-7-1996-ல் 'மேலவை வேண்டும்' என்ற தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. காலச்சக்கரம், தேர்தல் சக்கரம் சுழன்று சுழன்று 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 12-9-2001-ல் அந்தத் தீர்மானம் நீக்கப்பட்டது.இப்போது தேர்தல் முடிந்து தொடர்ச்சியாக இரண்டு, மூன்று தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். அந்தக் கருத்து எனக்கும் உண்டு. அவை முன்னவருக்கும் உண்டு. அமைச்சர்கள், திமுகவினருக்கும் உண்டு.மேலவை இருந்தால், இத்தகைய கூச்சல், குழப்பம் இல்லாத ஒரு அவையை நாம் காண முடியும். இங்கே ஏற்படுகின்ற அமளிகளுக்கு ஆறுதல் அளிக்கின்ற இடமாக அது இருக்கும். லட்சுமணசாமி முதலியார், ம.பொ. சிவஞானம், மாணிக்க வேலர், ராஜாராம் நாயுடு போன்ற அறிஞர்களை மேலவையில் சந்தித்திருக்கிறோம். பேரவையில் ஏற்படுகின்ற சூட்டை தணிக்கின்ற வகையில் மேலவை பயன்பட்டது.''மேலவையும், பேரவையும் 'கப் அண்ட் சாசர்' போன்றது. கப்பில் காபி சூடாக இருந்தால் அதை சாசரில் ஆற்றி சூட்டைக் குறைத்துக் கொள்வதைப் போல மேலவை பயன்படுகிறது'' என்று அண்ணா குறிப்பிட்டார். எனவே 'கப் அன்ட் சாசர்' வேண்டும். அதற்கான அனுமதியை விரைவில் பெறுவோம்.மேலவையை வலியுறுத்தி பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பிறகு நிச்சயம் மேலவை உருவாகும் என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்
வெண்ணிறஆடையால் மறைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது நல்லதே! இதற்கு எதிரான கருத்துகள் இருந்தாலும் இதனை அறிவித்த முதல்வருக்குப் பாராட்டுகள். எல்லாக் கட்சிகளிலும் ஒரு பகுதியினருக்கு ஆறுதல். மேலவையை உருவாக்கும் பொழுது அரசு ஊழியர்களுக்கு என ஒரு தொகுதியையும் தமிழ் அமைப்பினருக்கு என ஒரு தொகுதியையும்தமிழ் மருத்துவர்களுக்கு என ஒரு தொகுதியையும்தமிழூ வழிப் பள்ளியினருக்கு என ஒரு தொகுதியையும் உருவாக்க வேண்டும்.என்றாலும் இது தொடர்பான தீர்மானத்தைத் திமுக கொண்டு வந்தாலும் உரிய காலத்தில நிறைவேற்றப் படாது; ஆட்சி மாறும் என்பதுபோல் நல்வாக்கு கூறியுள்ளாரே! ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
4/8/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்4/8/2010 2:50:00 AM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வெண்ணிறஆடையால் மறைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டு வருவது நல்லதே! இதற்கு எதிரான கருத்துகள் இருந்தாலும் இதனை அறிவித்த முதல்வருக்குப் பாராட்டுகள். எல்லாக் கட்சிகளிலும் ஒரு பகுதியினருக்கு ஆறுதல். மேலவையை உருவாக்கும் பொழுது அரசு ஊழியர்களுக்கு என ஒரு தொகுதியையும் தமிழ் அமைப்பினருக்கு என ஒரு தொகுதியையும்தமிழ் மருத்துவர்களுக்கு என ஒரு தொகுதியையும்தமிழ் வழிப் பள்ளியினருக்கு என ஒரு தொகுதியையும்ஊடகத்தினருக்கு என ஒரு தொகுதியையும் திரு நங்கையினருக்கு என ஒரு தொகுதியையும் உருவாக்க வேண்டும்.என்றாலும் இது தொடர்பான தீர்மானத்தைத் திமுக கொண்டு வந்தாலும் உரிய காலத்தில நிறைவேற்றப் படாது; ஆட்சி மாறும் என்பதுபோல் நல்வாக்கு கூறியுள்ளாரே! ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்